பகுதி - 709

மதம்பெருகும் கன்னங்களையுடைய விநாயகனோடு
பகுதி - 709

பதச் சேதம்

சொற் பொருள்

ஆரம் அணி வாரை பீறி அற மேலிட்டு ஆடவர்கள் வாட துறவோரை

 

வாரை: கச்சு, கச்சை; பீறி:
கிழித்து; அற: மிகவும்;
மேலிட்டு: வெளிப்பட்டு;
துறவோரை: துறவிகளை;  

ஆசை மடலூர் வித்து ஆளும் அதி பார பாளித படீர தன மானார்

 

மடலூர்வித்து: மடலேறச்
செய்து (மடலேறுதல்—காதல்
வசப்பட்டவர்கள் மேற்கொள்ளும்
ஒரு செய்கை); பாளித: பளிதம்—
பச்சைக் கற்பூரம்; படீர(ம்):
சந்தனம்;

கார் அளகம் நீழல் காது அளவும் ஓடி காதும் அபிராம கயல் போல

 

அளகம்: கூந்தல்; காதும்:
கொலைத் தொழிலைச் செய்யும்;
அபிராம: அழகிய; கயல்போல:
மீன்போன்ற கண்ணைப் போல;

காலன் உடல் போட தேடி வரு நாளில் காலை மறவாமல் புகல்வேனோ

 

காலை: திருப்பாதத்தை;

பார் அடைய வாழ்வித்த ஆரபதி பாச சாமள கலாப பரி ஏறிட்டு

 

ஆரபதி: அரபதி, சர்ப்பராஜன்,
ஆதிசேடன்; பாச: கட்டவல்ல;
சாமள: பச்சை நிற; கலாப(ம்):
தோகை; கலாபப் பரி: மயில்;

பாய் மத கபோல தான் ஒடி கலா(ம்) முன்பாடி வரும் ஏழை சிறியோனே

 

கபோல(ம்): கன்னம்; கபோலத்தான்:
விநாயகன்; கலாம்: மாறுபடுதல்;
முன்பாடி: முன்பு ஆடி;

சூரர் புர சூறைக்கார சுரர் காவல் கார இள ஏனல் புனம் மேவும்

 

சூறைக்கார: சூறைக்காற்றாக
(அழித்தவனே); சுரர்: தேவர்; இள
ஏனல் புனம்: பசிய தினைப்புனம்;

தோகை திரு வேளை கார தமிழ் வேத சோதி வளர் காவை பெருமாளே.

 

வேளைக்காரன்: பொழுதுபோக்கிக்
காவலிருப்பவன்; தமிழ் வேதச் சோதி:
தேவாரம்—தேவாரத்தை அருளிய
திருஞான சம்பந்தர்,
சம்பந்தராக வந்த முருகன்; காவை: திருவானைக்கா;

ஆரம் அணி வாரைப் பீறி அற மேலிட்டு ஆடவர்கள் வாட... ஹாரங்களை அணிந்துள்ள கச்சிலிருந்து பீறிட்டுக்கொண்டு வெளிப்பட்டு ஆண்களை வாட்டியும்;

துறவோரை ஆசை மடல் ஊர்வித்து ஆளும் அதி பாரப் பாளித படீரத் தன மானார்... துறவிகளையும் மோகவயப்படுத்தி அவர்களை மடலூரச் செய்வித்தும்; மிகுந்த கனமுள்ளதும்; பச்சைக் கற்பூரமும் சந்தனம அணிந்ததுமான மார்பகங்களைக் கொண்ட பெண்களுடைய,

கார் அளக(ம்) நீழல் காது அளவும் ஓடிக் காதும் அபிராமக் கயல் போலக்... கருமேகத்தை ஒத்த கூந்தலின் நிழலிலே காதளவு ஓடி; கொல்லும் தொழிலை மேற்கொண்டதும் அழகிய மீனை ஒத்ததுமான கண்கள் (கொல்வது போல)

காலன் உடல் போடத் தேடி வரு நாளில் காலை மறவாமல் புகல்வேனோ... யமன் உடலிலிருந்து உயிரைப் பிரிப்பதற்காகத் தேடிவரும் காலத்தில் உன் திருப்பாதத்தை மறவாமல் போற்றுகின்ற பேறு கிடைக்கப்பெறுவேனோ.

 பார் அடைய வாழ்வித்த ஆரபதி பாசச் சாமள கலாபப் பரி ஏறி... உலகம் முழுவதையும் தாங்கி நிற்கின்ற சர்ப்பராஜனான ஆதிசேஷனையும் தன் கால்களிலே கட்ட வல்லதும் பசிய தோகையை உடையதுமான மயில் வாகனத்தில் ஏறி,

பாய் மத கபோலத்தானொடு இகலா(ம்) முன்பாடி வரும் ஏழைச் சிறியோனே... மதம்பெருகும் கன்னங்களையுடைய விநாயகனோடு மாறுபட்டு அவனுக்கு முன்பு ஆடிச் சென்று (உலகை வலம்வந்த) இளம் சிறுவனே!

சூரர் புர சூறைக்கார சுரர் காவற்கார... சூரர்களுடைய ஊர்களைச் சூறைக் காற்றாகப் புடைத்து அழித்தவனே!  தேவர்களுடைய காவலனே!

இள ஏனல் புன(ம்) மேவும் தோகை திரு வேளைக்கார... பசிய தினைப்புனத்தில் இருந்த தோகை மயிலை ஒத்த வள்ளியோடு பொழுதுபோக்கியபடி காவலிருப்பவனே!

தமிழ் வேதச் சோதி வளர் காவைப் பெருமாளே.... தமிழ் வேதமாக விளங்கும் தேவாரத்தை அருளிய திருஞானசம்பந்தராக வந்த ஜோதியே!  விளங்குகின்ற திருவானைக்காவில் வீற்றிருக்கின்ற பெருமாளே!


சுருக்க உரை:

உலகு அனைத்தையும் தாங்குகின்ற ஆதிசேடனையும் தன் கால்களிலே கட்டிக்கொண்டு வரவல்லதாகிய மயில் வாகனத்தில் ஏறிக்கொண்டு; முன்னொரு காலத்தில் மதம் பொங்கும் கன்னங்களையுடைய கணபதியோடு மாறுபட்டு உலகையெல்லாம் வலம்வந்த இளம்சிறுவனே!  சூரர்களுடைய ஊரைச் சூறைக்காற்றைப் போலப் புடைத்து அழித்தவனே!  தேவர்களுடைய காவலனே!  பசிய தினைப்புனத்தில் இருந்த மயில்போன்ற வள்ளியோடு பொழுதுபோக்கியபடி காவலிருப்பவனே! தமிழ் வேதமான தேவாரத்தை அருளிய ஞானசம்பந்தராக வந்த ஜோதியே!  திருவானைக்காவில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

ஆரங்களை அணிந்துள்ள கச்சை மீறி வெளிப்பட்டு ஆடவர்களை மனம் கலங்கச் செய்து; துறவியர்களையும் மோகவசப்படுத்தி மடலூரச் செய்கின்ற பெணகளுடைய கரிய கூந்தலின் நிழலிலே காதளவு ஓடி, கொல்லும் தொழிலை மேற்கொண்ட கண்களைப் போல,

காலன் என் உயிரை உடலினின்றும் பிரிப்பதற்காக வருகின்ற அந்தச் சமயத்தில் உனது திருவடிகளை மறவாமல் போற்றுகின்ற பேற்றைப் பெறுவேனா. (பேற்றைத் தந்தருள வேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com