பகுதி - 715

பெண்யானையைப் போன்ற நடையழகை
பகுதி - 715

பதச் சேதம்

சொற் பொருள்

கெஜ நடை மடவார் வசம் அதில் உருகா கிலெசம் அது உறு பாழ் வினையாலே

 

கெஜ நடை: (பெண்) யானையை ஒத்த நடை; கிலெசம்: கிலேசம், வருத்தம்;

கெதி பெற நினையா துதி தனை அறியா கெடு சுகம் அதில் ஆழ் மதியாலே

 

 

தசை அது மருவீ வசை உடல் உடனே தரணியில் மிகவே உலைவேனோ

 

தசையது மருவீ: தசையைக் கொண்ட, தசையால் ஆன; மருவீ: மருவி என்பதன் நீட்டல் விகாரம்; வசை உடல்: பழிக்கு இடமான உடல்;

சத தள மலர் வார் புணை நின கழலார் தரு நிழல் புகவே தருவாயே

 

சததள மலர்: நூறு இதழ்களைக் கொண்ட தாமரை; புணை: தெப்பம்;

திசை முகவனை நீள் சிறை உற விடுவாய் திரு நெடு கரு மால் மருகோனே

 

திசைமுகவன்: பிரமன்;

திரி புர தகனார் இடம் அதில் மகிழ்வார் திரி புரை அருள் சீர் முருகோனே

 

திரிபுர தகனார்: சிவன்; இடமதில் மகிழ்வார்: உமை;

நிசிசரர் உறை மா கிரி இரு பிளவா நிறை அயில் முடுகா விடுவோனே

 

நிசிசரர்: இரவிலே உலவுபவர்கள், அசுரர்கள்; மாகிரி: பெரிய மலை, கிரவுஞ்சம்; முடுகா: முடுகி, விரைவாக;

நிலம் மிசை புகழ் ஆர் தலம் எனும் அருணா நெடு மதில் வட சார் பெருமாளே.

 

 

கெஜ நடை மடவார் வசம் அதில் உருகா கிலெசம் அது உறு பாழ் வினையாலே... பெண்யானையைப் போன்ற நடையழகைக் கொண்ட பெண்களிடம் மனம் வசப்பட்டு உருகி, வருத்தத்தைத் தருகின்ற பாழான வினைப்பயனின் காரணத்தால்,

கெதி பெற நினையா துதி தனை அறியா கெடு சுகம் அதில் ஆழ் மதியாலே... நல்ல கதியை அடைய நினைக்காததும்; உன்னைப் போற்றுவதை அறியாததும்; கேடு தருகின்ற சிற்றின்பத்திலே விழுந்துகிடப்பதுமான புத்தியாலே;

தசை அது மருவீ வசை உடல் உடனே தரணியில் மிகவே உலைவேனோ...தசையால் ஆனதும் பழிக்கு இடமானதுமான உடலோடு இந்த உலகத்திலே பெரிதும் அலைந்து திரிவேனோ? 

சத தள மலர் வார் புணை நின கழலார் தரு நிழல் புகவே தருவாயே... நூறு இதழ்களைக் கொண்ட தாமரையை ஒத்ததும் (பிறவிக் கடலைக் கடக்க உதவும்) தொப்பம் போன்றதுமான உனது திருவடிகள் தருகின்ற நிழலில் வந்து புகும்படியாக அடியேனுக்கு அருளவேண்டும்.

திசை முகவனை நீள் சிறை உற விடுவாய் திரு நெடு கரு மால் மருகோனே... நான்முகப் பிரமனை நீண்ட சிறைக்குள் புகும்படிச் செய்தவனே! அழகனும் நெடியோனும் கரியவனுமான திருமாலின் மருகனே!

திரி புர தகனார் இடம் அதில் மகிழ்வார் திரி புரை அருள் சீர் முருகோனே... திரிபுரங்களைத் தகனம் செய்த சிவனாருடைய இடது பாகத்தில் மகிழ்ந்து அமர்ந்திருக்கும் திரிபுரையான உமையம்மை ஈன்ற சிறப்பு வாய்ந்த அழகனே!

நிசிசரர் உறை மா கிரி இரு பிளவா நிறை அயில் முடுகா விடுவோனே... அசுரர்கள் வாழ்ந்திருந்த கிரெளஞ்சப் பெருங்கிரி இரண்டாகப் பிளக்கும்படியாக நீதி தவறாத வேலை வேகமாக வீசியவனே!

நிலம் மிசை புகழ் ஆர் தலம் எனும் அருணா நெடு மதில் வட சார் பெருமாளே.... உலகத்திலே புகழ்பெற்ற தலமாக விளங்கும் திருவண்ணாமலையுடைய நீண்ட மதிலின் வடபுறத்திலே வீற்றிருக்கின்ற பெருமாளே!


சுருக்க உரை:

 நான்முகனான பிரமனைச் சிறையில் அடைத்தவனே! அழகனும் நெடியவனும் கரியவனுமான திருமாலுக்கு மருகனே! திரிபுரத்தைத் தகனம் செய்த சிவனாருடைய இடதுபாகத்தில் மகிழ்வோடு வீற்றிருக்கும் உமையம்மை அருளிய அழகனே! அசுரர்கள் வாழ்ந்திருந்த கிரெளஞ்ச மலை இரண்டாகப் பிளவுறும்படியாக நீதி தவறாத வேலை வீசியவனே!  உலகிலே புகழ்பெற்ற தலமாக விளங்குகின்ற திருவண்ணாமலைத் தலத்துடைய நீண்ட மதிலுக்கு வடபுறத்திலே வீற்றிருக்கின்ற பெருமாளே!

 பெண்யானையை போன்ற மதர்த்த நடையைக் கொண்ட பெண்களிடம் மனம் வசப்பட்டு உருகி; வருத்தத்தை ஏற்படுத்துகின்ற பாழான வினையின் பயனால் நற்கதியைப் பெற நினைக்காததும்; உன்னைத் துதிப்பதை அறியாததும்; சிற்றின்பத்தில் ஆழ்ந்து அழிந்துபோவதுமான அறிவையும்; நிலையற்றதும் பழிக்கு இடம்தருவதுமான உடலையும் கொண்டு இவ்வுலகிலே நான் திரியலாமோ?  (அவ்வாறு திரியாதபடி) நூறிதழ்த் தாமரையைப் போன்றதும் பிறவிக் கடலுக்குத் தெப்பமாக விளங்குவதுமான உன்னுடைய திருவடி நிழலிலே அடியேன் சேரும்படியாக அருள்செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com