பகுதி - 719

தேவலோகத்தைக் காத்த முதன்மையானவனே!
பகுதி - 719

பதச் சேதம்

சொற் பொருள்

சந்தன ச(வ்)வாது நிறை கற்பூர குங்கும படீர விரை கத்தூரி தண் புழுகு அளாவு களப சீத வெகு வாச

 

சவாது: ஜவ்வாது; நிறை: நிறைந்த; கற்பூர: பச்சைக் கற்பூரம்; படீர: சந்தனம்; விரை: மணமுள்ள; தண் புழுகு: குளிர்சியான புனுகு; அளாவு: கலந்துள்ள; களப: கலவை; சீத: குளிர்ச்சியான;

சண்பக க(ல்)லாரம் வகுள தாம வம்பு துகில் ஆர வயிர கோவை தங்கிய கடோர தர வித்தார பரிதான

 

கலார(ம்): கல்லாரம்—செங்குவளை; வகுள(ம்): மகிழம்பூ; தாம(ம்): மாலை; வம்பு: கச்சு; துகில்: ஆடை; ஆர: முத்து மாலை; வயிரக்கோவை: வயிர மாலை; கடோரதர: கடினமாய், திண்ணியதாய்; வித்தார: விரிந்ததாய்; பரிதான: பருமை உடையதாய்;

மந்தரம் அது ஆன தன மிக்கு ஆசை கொண்டு பொருள் தேடும் அதி நிட்டூர வஞ்சக விசார இதய பூவை அனையார்கள்

 

மந்தரம் அது ஆன: மந்தர மலையைப் போன்ற; நிட்டூர: கொடிய; விசார இதய: ஆலோசனையுள்ள நெஞ்சம்; பூவை: நாகணவாய்ப்புள் (மைனா);

வந்தியிடும் மாய விரக பார்வை அம்பில் உ(ள்)ளம் வாடும் அறிவற்றேனை வந்து அடிமை ஆள இனி எப்போது நினைவாயே

 

வந்தியிடும்: வருத்தத்தை உண்டாக்கும்;

இந்த்ரபுரி காவல் முதன்மைக்கார சம்ப்ரம மயூர துரகக்கார என்றும் அகலாத இளமைக்கார குற மாதின்

 

இந்த்ரபுரி: இந்திரன் உலகு, தேவலோகம்; சம்ப்ரம: சிறந்த; மயூர: மயில்; துரகக்கார: (துரகம்: குதிரை) வாகனமாக உடையவனே;

இன்ப அநுபோக சரசக்கார வந்த அசுரேசர் கலகக்கார எங்கள் உமை சேய் என அருமைக்கார மிகு பாவின்

 

மிகு பாவின்: மிக்க பா இனங்களில்;

செந்தமிழ் சொல் நாலு கவிதைக்கார குன்று எறியும் வேலின் வலிமைக்கார செம் சொல் அடியார்கள் எளிமைக்கார எழில் மேவும்

 

நாலு கவிதைக்கார:

திங்கள் முடி நாதர் சமயக்கார மந்த்ர உபதேச மகிமைக்கார செந்தில் நகர் வாழும் அருமை தேவர் பெருமாளே.

 

 

சந்தன ச(வ்)வாது நிறை கற்பூர குங்கும படீர விரை கத்தூரி... சந்தனம், சவ்வாது, மிகுதியான பச்சைக் கற்பூரம், குங்குமக் கலவை, சந்தனம், மணமுள்ள கஸ்தூரி,

தண் புழுகு அளாவு களபச் சீத வெகு வாச சண்பக க(ல்)லார வகுளத் தாம... குளிர்ச்சியான புனுகு ஆகியவற்றின் கலவையைப் பூசியதும்; குளிர்ந்ததும் மணமுள்ளதுமான சண்பகப்பூ, செங்குவளைப்பூ, மகிழம்பூ மாலைகளை அணிந்ததும்;

வம்பு துகில் ஆர வயிரக் கோவை தங்கிய கடோர தர வித்தார பரிதானமந்தரம் அது ஆன தன... கச்சுக்கும் ஆடைக்கும் மேலே கிடக்கும் முத்து மாலை, வைர மாலைகளைக் கொண்டதும்; திண்மையும் விரிவும் பருமனும் உடையதும்; மந்தர மலைபோன்ற மார்பகங்களைக் கொண்டவர்களும்;

மிக்கு ஆசை கொண்டு பொருள் தேடும் அதி நிட்டூர வஞ்சக விசார இதயப் பூவை அனையார்கள்... அதிக ஆசையைக் கொண்டு பொருளைத் தேடும் கொடியவர்களும் வஞ்சனை நிறைந்த மனத்தை உடையவர்களும், மைனாவைப் போன்றவர்களுமான பெண்களுடைய,

வந்தியிடும் மாய விரகப் பார்வை அம்பில் உ(ள்)ளம் வாடும் அறிவற்றேனை... வருத்தத்தைத் தூண்டுவதும் மாயமும் விரகமும் நிறைந்ததுமான விழி அம்பால் உள்ளம் வாடுகின்ற அறிவில்லாத என்னிடத்திலே,

வந்து அடிமை ஆள இனி எப்போது நினைவாயே... வந்து அடிமையாக ஆட்கொள்ள எப்போது நினைப்பாய்? (இப்போதே ஆண்டுகொள்ள வேண்டும்.)

இந்த்ரபுரி காவல் முதன்மைக்கார சம்ப்ரம மயூர துரகக்கார... இந்திரனுடைய தேவலோகத்தைக் காத்த முதன்மையானவனே!  சிறந்த மயிலாகிய குதிரை வாகனனே!

என்றும் அகலாத இளமைக்கார குற மாதின் இன்ப அநுபோக சரசக்கார... நீங்காத இளமை உடையவனே!  குறமகள் வள்ளியின் இன்ப அனுபோக சரசத்தைக் கொண்டவனே!

வந்த அசுரேசர் கலகக்கார எங்கள் உமை சேய் என அருமைக்கார... எதிர்த்து வந்த அசுரர் தலைவர்களோடு போரிட்டவனே!  எங்கள் உமாதேவியாரின் மதலை என்ற அருமையை உடையவனே!

மிகு பாவின் செந்தமிழ் சொல் நாலு கவிதைக்கார... பலவாக விரியும் பாடல் வகைகளில் செந்தமிழ்ச் சொற்களால் புனையப்படும் ஆசு, மதுர, சித்திர, வித்தார கவிதைகளால் பாடப்படுபவனே!

குன்று எறியும் வேலின் வலிமைக்கார செம் சொல் அடியார்கள் எளிமைக்கார... கிரெளஞ்ச மலையைப் பிளந்த வலிமையான வேலை ஏந்தியவனே! செஞ்சொல்லைக் கொண்ட அடியார்களுக்கு எளியவனே!

எழில் மேவும் திங்கள் முடி நாதர் சமயக்கார மந்த்ர உபதேச மகிமைக்கார... அழகு நிறைந்த நிலவைச் சடையிலே தரித்த சிவபிரானின் சமயத்தவனே! (அவருக்கு) மந்திரோபதேசம் செய்த மகிமையை உடையவனே!

செந்தில் நகர் வாழும் அருமைத் தேவர் பெருமாளே.... திருச்செந்தூரில் வீற்றிருப்பவனே!  அருமையான தேவர்களின் பெருமாளே!


சுருக்க உரை:

 இந்திரனுடைய பொன்னுலகைக் காத்த முதன்மையானவனே!  சிறந்த மயிலை வாகனமாகக் கொண்டவனே! நீங்காத இளமை நிறைந்தவனே! குறமகளோடு இன்ப அனுபோக சரசங்களைப் புரிபவனே!  எதிர்த்து வந்த அசுரர் தலைவர்களோடு போரிட்டவனே! உமையம்மையின் அருமைப் பிள்ளையே!  செந்தமிழ்ச் சொற்களால் புனையப்படும் (ஆசு, மதுர, சித்திர, வித்தார என்னும் நாலு வகையான) கவிதைகளால் பாடப்படுபவனே!  கிரெளஞ்ச மலையை பிளந்த வலிய வேலை ஏந்துபவனே!  செஞ்சொல்லை உடைய அடியார்களுக்கு எளியவனே!  நிலவைச் சடையிலே தரித்த சிவனாரின் சமயத்தவனே!  அவருக்கு மந்திரோபதேசம் செய்தவனே!  திருச்செந்தூரில் வீற்றிருப்பவனே! அருமையான தேவர்களுடைய பெருமாளே!

சந்தனம், ஜவ்வாது, பச்சைக் கற்பூரம், செஞ்சாந்து, மணமுள்ள கஸ்தூரி, புனுகு ஆகியவற்றின் கலவை பூசப்பட்டதும்; சண்பம், செங்குவளை, மகிழம்பூ மாலைகளை அணிந்ததும்; கச்சையும் ஆடையையும் கொண்டதும்; முத்து மாலை, வைர மாலைகளைப் பூண்டதும்; திண்மையும் விரிவும் பருமையும் கொண்டதும்; மந்தர மலைக்கு நிகர்த்ததும்ன மார்பங்களைக் கொண்டவர்களும்; பேராசையோடு பொருள் தேடும் வஞ்சக எண்ணம் கொண்டவர்களும்; மைனாவை ஒத்தவர்களுமான பெண்களுடைய வருத்தை உண்டு பண்ணுகின்ற மாயமும் விரகமும் நிறைந்த விழியம்பால் தாக்கப்பட்டடு வாடுகின்ற அறிவிலியான என்னிடத்திலே வந்து என்னை எப்போது ஆட்கொள்ளப் போகிறாய்? (உடனே ஆட்கொள்ள வேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com