பகுதி - 720

உனது திருவடியைப் போற்ற அருள்புரியவேண்டும்
பகுதி - 720

‘உனது திருவடியைப் போற்ற அருள்புரியவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவேரகத்துக்கானது.  ‘குமர குருபர முருக’ என்று தொடங்குகிற இரண்டு சுவாமிமலைத் திருப்புகழ்களில் ஒன்று இது.  இப்படித் தொடங்குகிற இன்னொரு பாடலை நம் 550வது தவணையில் பார்த்தோம்.  இவற்றைத் தவிர, ‘குமர குருபர குணதர’ என்று தொடங்கும் திருவண்ணாமலைத் திருப்புகழ் ஒன்றும் இருக்கிறது.

அடிக்கு ஒற்றொழித்து 58 எழுத்துகளைக் கொண்ட சற்றே நீளமான அமைப்பைக் கொண்ட பாடல்.  ஒன்று, இரண்டு, ஐந்து, ஆறு, ஒன்பது பத்து ஆகிய ஆறு சீர்களிலும் ஐந்தைந்து குற்றெழுத்துகளும்; மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய சீர்களில் ஒரு நெடிலோடு முடியும் மூன்றெழுத்துகளும்; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்களில் (கணக்கில் சேராத) ஒரு வல்லொற்றுடன் கூடிய ஐந்து குற்றெழுத்துகளுமாய் அமைந்து நடக்கின்ற பாடல்.


தனனதன தனனதன தனனா தனத்ததன
      தனனதன தனனதன தனனா தனத்ததன
      தனனதன தனனதன தனனா தனத்ததன தனதான

குமரகுரு பரமுருக குகனே குறச்சிறுமி
         கணவசர வணநிருதர் கலகா பிறைச்சடையர்
         குருவெனந லுரையுதவு மயிலா எனத்தினமு முருகாதே

குயில்மொழிநன் மடவியர்கள் விழியா லுருக்குபவர்
         தெருவிலந வரதமன மெனவே நடப்பர்நகை
         கொளுமவர்க ளுடைமைமன முடனே பறிப்பவர்க   ளனைவோரும்

தமதுவச முறவசிய முகமே மினுக்கியர்கள்
         முனையிலுறு துகில்சரிய நடுவீதி நிற்பவர்கள்
         தனமிலியர் மனமுறிய நழுவா வுழப்பியர்கண்       வலையாலே

சதிசெய்தவ ரவர்மகிழ அணைமீ துருக்கியர்கள்
         வசமொழுகி யவரடிமை யெனமாத ரிட்டதொழில்
         தனிலுழலு மசடனையு னடியே வழுத்தஅருள்       தருவாயே

சமரமொடு மசுரர்படை களமீ தெதிர்த்தபொழு
         தொருநொடியி லவர்கள்படை கெடவே லெடுத்தவனி
         தனில்நிருதர் சிரமுருள ரணதூள் படுத்திவிடு        செருமீதே

தவனமொடு மலகைநட மிடவீர பத்திரர்க
         ளதிரநிண மொடுகுருதி குடிகாளி கொக்கரிசெய்
         தசையுணவு தனின்மகிழ விடுபேய் நிரைத்திரள்கள்  பலகோடி

திமிதமிட நரிகொடிகள் கழுகா டரத்தவெறி
         வயிரவர்கள் சுழலவொரு தனியா யுதத்தைவிடு
         திமிரதிந கரஅமரர் பதிவாழ்வு பெற்றுலவு           முருகோனே

திருமருவு புயனயனொ டயிரா வதக்குரிசி
         லடிபரவு பழநிமலை கதிர்காம முற்றுவளர்
         சிவசமய அறுமுகவ திருவேர கத்திலுறை           பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com