பகுதி - 721

திருமகள் பொருந்திய மார்பையும்
பகுதி - 721

பதச் சேதம்

சொற் பொருள்

குமர குருபர முருக குகனே குற சிறுமி கணவ சரவண நிருதர் கலகா பிறை சடையர் குரு என நல் உரை உதவு மயிலா என தினமும் உருகாதே

 

நிருதர்: அரக்கர்; கலகா: கலக்கியவனே; நல்லுரை: உபதேச மொழி;

குயில் மொழி நல் மடவியர்கள் விழியால் உருக்குபவர் தெருவில் அநவரதம் அ(ன்)னம் எனவே நடப்பவர் நகை கொளும் அவர்கள் உடைமை மனம் உடனே பறிப்பவர்கள் அனைவோரும்

 

மடவியர்கள்: மகளிர்கள்; அநவரதம்: எப்போதும்; நகைகொளும்: புன்னகைப்பவர்களுடைய;

தமது வசம் உற வசிய முகமே மினுக்கியர்கள் முலையில் உறு துகில் சரிய நடு வீதி நிற்பவர்கள் தனம் இலியர் மனம் முறிய நழுவா உழப்பியர் கண் வலையாலே

 

தனம் இலியர்: பொருள் இல்லாதவர்கள்; நழுவா: நழுவியபடி; உழப்பியர்கள்: மழுப்புபவர்கள்;

சதி செய்து அவர் அவர் மகிழ அணை மீது உருக்கியர்கள் வசம் ஒழுகி அவர் அடிமை என மாதர் இட்ட தொழில் தனில் உழலும் அசடனை உன் அடியே வழுத்த அருள் தருவாயே

 

அணை மீது: பஞ்சணை மீது; உருக்கியர்கள்: உருகச் செய்தவர்கள்; வழுத்த: வாழ்த்த, போற்ற;

சமரமொடும் அசுரர் படை களம் மீது எதிர்த்த பொழுது ஒரு நொடியில் அவர்கள் படை கெட வேல் எடுத்து அவனி தனில் நிருதர் சிரம் உருள ரண தூள் படுத்திவிடு செரு மீதே

 

சமரமொடும்: போரோடும்; படைகெட: சேனை சிதற; நிருதர்: அரக்கர்; ரணதூள் படுத்திவிடு: போர்க்களத்தில் தூள்படுத்திய;

தவனமொடும் அலகை நடமிட வீர பத்திரர்கள் அதிர நிணமொடு குருதி குடி காளி கொக்கரி செய் தசை உணவு தனில் மகிழவிடு பேய் நிரை திரள்கள் பலகோடி

 

தவனமொடும்: தாகத்தோடே; அதிர: அதிர்ச்சியை ஏற்படுத்த, கர்ஜிக்க; நிணம்: கொழுப்பு; கொக்கரிசெய்: கொக்கரிக்கின்ற; பேய்நிரை: பேய் வரிசை;

திமிதமிட நரி கொடிகள் கழுகு ஆட ரத்த வெறி வயிரவர்கள் சுழல ஒரு தனி ஆயுதத்தை விடு திமிர தினகர அமரரர் பதி வாழ்வு பெற்று உலவு முருகோனே

 

திமிதம் இட: பேரொலி எழுப்ப; கொடிகள்: காகங்கள்; வயிரவர்கள்: பைரவர்கள்; திமிர: இருள்; தினகர: சூரிய;

திரு மருவு புயன் அயனொடு அயிராவத குரிசில் அடி பரவு பழநி மலை கதிர்காமம் உற்று வளர் சிவ சமய அறுமுகவ திருவேரகத்தில் உறை பெருமாளே.

 

அயிராவதக் குரிசில்: ஐராவதம் ஏறும் இந்திரன்; திருவேரகத்தில்: சுவாமி மலையில்;

குமர குருபர முருக குகனே குறச் சிறுமி கணவ சரவண நிருதர் கலகா பிறைச் சடையர் குரு என நல் உரை உதவு மயிலா எனத் தினமும் உருகாதே... குமரா, குருபரா, முருகா, குகா, குறப்பெண்ணின் கணவா, சரவணா, அசுரர்களைக் கலக்கியவா, பிறைநிலவைச் சூடிய சடையை உடைய சிவனாரின் குருவே என்றும்; அவருக்கு உபதேசித்தருளிய மயில் வாகனனே என்றும் அன்றாடம் உருகி நிற்பதை விடுத்து;

குயில் மொழி நல் மடவியர்கள் விழியால் உருக்குபவர் தெருவில் அநவரதம் அ(ன்)னம் எனவே நடப்பர்... குயிலைப் போல இனிய மொழி பேசுபவர்கள், பார்வையாலேயே உருக்குபவர்கள், தினந்தோறும் வீதியில் அன்னம்போல நடப்பவர்கள்;

நகை கொளும் அவர்கள் உடைமை மனம் உடனே பறிப்பவர்கள்... சற்றே புன்னகைப்பவர்களுடைய உடைமையையும் மனத்தையும் உடறே பறித்துக்கொள்பவர்கள்;

அனைவோரும் தமது வசம் உற வசிய முகமே மினுக்கியர்கள் முலையில் உறு துகில் சரிய நடு வீதி நிற்பவர்கள்... எல்லோரும் தம்முடைய வசப்படுமாறு வசீகரமாக முகத்தை மினுக்குபவர்கள்; மார்பின் மீதுள்ள ஆடையைச் சரியவிட்டபடி நடுத்தெருவில் நிற்பவர்கள்;

தனம் இலியர் மனம் முறிய நழுவா உழப்பியர்... பொருள் இல்லாது தம்மிடம் வருபவர்களுடைய மனம் புண்படுமாறு நழுவியும் மழுப்பியும் செல்பவர்கள், 

கண் வலையாலே சதி செய்து அவர் அவர் மகிழ அணை மீது உருக்கியர்கள்... கண் என்னும் வலையை வீசி வஞ்சனை செய்து மகிழ்ச்சியுறுமாறு பஞ்சணையின் மீது மனத்தை உருக்குபவர்கள் (என்று இப்படிப்பட்டவர்களுடைய)

வசம் ஒழுகி அவர் அடிமை என மாதர் இட்ட தொழில் தனில் உழலும் அசடனை உன் அடியே வழுத்த அருள் தருவாயே... வசப்பட்டு அவர்களுக்கு அடிமையாகி, அப்பெண்கள் இட்ட ஏவலைச் செய்து உழன்றுகொண்டிருக்கும் அசடனாகிய என்னை உன் திருவடிகளைப் போற்றும்படியாக அருள்புரிய வேண்டும்.

சமரமொடும் அசுரர் படை களம் மீது எதிர்த்த பொழுது... போர் தொடுப்பதற்காக அசுர்களுடைய சேனை போர்க்களத்தில் எதிர்த்துவந்த போது,

ஒரு நொடியில் அவர்கள் படை கெட வேல் எடுத்து அவனி தனில் நிருதர் சிரம் உருள ரண தூள் படுத்திவிடு செரு மீதே... அந்தச் சேனை ஒருநொடியில் அழியும்படியாக வேலாயுதத்தை வீசி, அந்த அசுரர்களுடைய தலைகள் பூமியில் உருண்டோடும்படியாக தூள்படுத்திய போர்க்களத்திலே,

 தவனமொடும் அலகை நடமிட வீர பத்திரர்கள் அதிர நிணமொடு குருதி குடி காளி கொக்கரி செய்... பேய்கள் தாகத்தோடு கூத்தாடவும்; வீரபத்திரர்கள் கர்ஜிக்கவும்; கொழுப்பையும் ரத்தத்தையும் சேர்த்துக் குடிக்கின்ற காளி கொக்கரிக்கவும்;

தசை உணவு தனின் மகிழவிடு பேய் நிரைத் திரள்கள் பலகோடி திமிதமிட... தசையைத் தின்று மகிழ்கின்ற வரிசையான பேய்க்கூட்டங்கள் கோடிக் கணக்கில் ஆரவாரம் செய்யவும்;

நரி கொடிகள் கழுகு ஆட ரத்த வெறி வயிரவர்கள் சுழல ஒரு தனி ஆயுதத்தை விடு திமிர தினகர... நரிகளும் காகங்களும் கழுகுகளும் கூத்தாடவும்; ரத்தவெறியோடு பைரவர்கள் சுழன்று திரியவும்; ஒப்பற்ற வேலாயுதத்தை வீசியவனே! (அஞ்ஞான) இருளை நீக்கும் சூரியனே!

அமரர் பதி வாழ்வு பெற்று உலவு முருகோனே... தேவர்களின் தலைவனான இந்திரன் தன் தேவலோகத்தை மீண்டும் பெற்று உலவும்படியாக உதவிய முருகனே!

திரு மருவு புயன் அயனொடு அயிராவதக் குரிசில் அடி பரவு... திருமகள் பொருந்திய மார்பையும் திரண்ட புயங்களையும் உடைய திருமாலும்; பிரமனும்; ஐராவதத்தின் மீது ஏறுகின்ற இந்திரனும் உன் அடியிணைகளைப் போற்றி நிற்க,

பழநிமலை கதிர்காமம் உற்று வளர் சிவ சமய அறுமுகவ திருவேரகத்தில் உறை பெருமாளே.... பழனி மலையிலும் கதிர்காமத்திலும் உறைகின்ற சிவ சமயத்தவனே! ஆறுமுகனே!  திருவேரகத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!


சுருக்க உரை:

போர்செய்வதற்காக எழுந்த அசுரர் சைனியங்கள் ஒரு நொடிப் பொழுதில் அழியும்படியாக வேலை விடுத்து அவர்களுடைய தலைகளைத் தரையில் உருளும்படி தூள்பறக்க நீ போர் புரிந்த போர்க்களத்தில் பேய்கள் தாகத்தோடு கூத்தாடவும்; ரத்தத்தையும் கொழுப்பையும் ஒன்றாகக் குடிக்கும் காளி கொக்கரிக்கவும்; வீரபத்திரர்கள் கர்ஜிக்கவும்; தசையைத் தின்று மகிழ்ச்சியோடு கோடிக்கணக்கான பேய்க்கூட்டங்கள் ஆரவாரிக்கவும்; நரிகளும் காகங்களும் கழுகுகளும் ஆடித் திரியவும்; ரத்தவெறி கொண்ட பயிரவர்கள் சுழன்று திரியவும் வேலாயுதத்தை வீசியவனே!  அஞ்ஞான இருளைப் போக்கும் கதிரவனே! தேவர்களின் தலைவனான இந்திரன் தன் பொன்னுலகத்தைத் திரும்பப்பெற உதவிய முருகனே!  திருமகள் உறையும் மார்பையும் திரண்ட புயங்களையும் உடைய திருமாலும் பிரமனும் ஐராவதத்தின்மீது ஏறுகின்ற இந்திரனும் அடியிணைகளைப் போற்றிநிற்க, பழனி மலையிலும் கதிர்காமத்திலும் உறைகின்ற சைவ சமயத்தவனே! ஆறுமுகனே!  சுவாமிமலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

 குமரா! குருபரா! முருகா! குகா! குறமகள் மணாளா! சரவணா! அசுரர்களைக் கலக்கியவா!  சடையில் பிறைசூடிய பெம்மானின் குருவே! அவருக்கு உபதேசித்தவனே! மயில் வாகனனே என்றெல்லாம் கூறி அனுதினமும் உருகாமல் அதற்கு மாறாக,

குயில்போலப் பேசி கண்பார்வையால் உருக்குபவர்களும்; எப்போதும்தெருவிலே அன்னங்களைப் போல நடப்பவர்களும்; தம்மைப் பார்த்துப் புன்னகைப்பவர்களுடைய உடைமைகளையும் மனங்களையும் ஒன்றாகக் கொள்ளையடிப்பவர்களும்; எல்லோரும் தம்முடைய வசத்தில் அகப்படும்படியாக வசீகரமாக முகத்தை மினுக்குபவர்களும்; மார்பிலிருக்கும் ஆடை சரியும்படியாக நடுவீதியில் நிற்பவர்களும்; பொருள் இல்லாமல் தம்மிடத்திலே வருகின்றவர்களுடைய மனம் ஒடிந்துபோகும்படி நழுவியும் மழுப்பியும் கண்வலையை வீசி வஞ்சனை செய்தும்; மகிழ்ச்சி தரும்படியாகப் பஞ்சணையில் மனத்தை உருக்கியும் திரிகின்றவர்களுக்கு வசப்பட்டு அவர்கள் இட்ட குற்றேவல்களைச் செய்துகொண்டிருக்கின்ற அசடனான அடியேனுக்கு எப்போதும் உன் திருவடிகளையே போற்றும்படியாகத் திருவருள் செய்தருளவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com