பகுதி - 722

உன் பொற்கழல்களைத் தாராய்
பகுதி - 722

தொண்டர்கண்டு அண்டிமொண் டுண்டிருக்குஞ்சுத்த ஞானமெனுந்
தண்டையம் புண்டரி கந்தரு வாய்
சண்ட தண்டவெஞ்சூர்
மண்டலங் கொண்டுபண் டண்டரண் டங்கொண்டு மண்டி மிண்டக்
கண்டுருண் டண்டர்விண் டோடாமல் வேல்தொட்ட காவலனே.

“ஞானமெனும் தண்டைஅம் புண்டரீகம் தருவாய்” என்று கந்தர் அலங்காரத்தில் கேட்டதைப் போல ‘சிவஞானமாகிய உன் பொற்கழல்களைத் தாராய்’ என்று வேண்டுகின்ற இப்பாடல் திருக்காளத்தித் தலத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் இரண்டு குறில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று, ஒரு நெடில் என மூன்றெழுத்துகளும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களில் இரண்டு குறிலும் இரண்டு  (கணக்கில் சேராத) வல்லொற்றும்; மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய சீர்களில் இரண்டு குறிலும் ஒரு நெடிலுமாக மூன்றெழுத்துகளும்; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்களில் இரண்டு குறிலும் இரண்டு  (கணக்கில் சேராத) மெல்லொற்றுமாக இரண்டெழுத்துகளும் அமைந்துள்ளன.


தனத்தா தத்தத் தனனா தந்தத்
      தனத்தா தத்தத் தனனா தந்தத்
      தனத்தா தத்தத் தனனா தந்தத் தனதான

சரக்கே றித்தப் பதிவாழ் தொந்தப்
         பரிக்கா யத்திற் பரிவோ டைந்துச்
         சதிக்கா ரர்ப்புக் குலைமே விந்தச் செயல்மேவிச்

சலித்தே மெத்தச் சமுசா ரம்பொற்
         சுகித்தே சுற்றத் தவரோ டின்பத்
         தழைத்தே மெச்சத் தயவோ டிந்தக் குடிபேணிக்

குரக்கோ ணத்திற் கழுநா யுண்பக்
         குழிக்கே வைத்துச் சவமாய் நந்திக்
         குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப் படுவேனைக்

குறித்தே முத்திக் குமறா வின்பத்
         தடத்தே பற்றிச் சகமா யம்பொய்க்
         குலக்கால் வற்றச் சிவஞா னம்பொற் கழல்தாராய்

புரக்கா டற்றுப் பொடியாய் மங்கக்
         கழைச்சா பத்தைச் சடலா னுங்கப்
         புகைத்தீ பற்றப் புகலோ ரன்புற் றருள்வோனே

புடைத்தே யெட்டுத் திசையோ ரஞ்சத்
         தனிக்கோ லத்துப் புகுசூர் மங்கப்
         புகழ்ப்போர் சத்திக் கிரையா நந்தத் தருள்வோனே

திருக்கா னத்திற் பரிவோ டந்தக்
         குறக்கோ லத்துச் செயலா ளஞ்சத்
         திகழ்ச்சீ ரத்திக் கழல்வா வென்பப் புணர்வோனே

சிவப்பே றுக்குக் கடையேன் வந்துட்
         புகச்சீர் வைத்துக் கொளுஞா னம்பொற்
         றிருக்கா ளத்திப் பதிவாழ் கந்தப் பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com