பகுதி - 723

சிவகதியை அடையும் பேற்றுக்காக
பகுதி - 723

பதச் சேதம்

சொற் பொருள்

சரக்கு ஏறி இத்த பதி வாழ் தொந்த பரி காயத்தில் பரிவோடு ஐந்து சதி காரர் புக்கு உலை மேவு இந்த செயல் மேவி

 

சரக்கு: பொருள்; ஏறி: மிகுந்த; இத்த: இந்த; பதி: உலகில்; தொந்த(ம்) பரி: சம்பந்தம் வகிக்கின்ற (தொந்தம்: சம்பந்தம், தொடர்பு); காயத்தில்: உடலில்; ஐந்து சதிகாரர்: சதி செய்கின்ற ஐம்புலன்கள்; உலைமேவு: உலைவுக்குக் (அழிவுக்குக்) கராணமான;

சலித்தே மெத்த சமுசாரம் பொன் சுகித்தே சுற்றத்தவரோடு இன்ப(ம்) தழைத்தே மெச்ச தயவோடு இந்த குடி பேணி

 

 

குரக்கோணத்தில் கழு நாய் உண்ப குழிக்கே வைத்து சவமாய் நந்து இ குடிற்கே நத்தி பழுதாய் மங்க படுவேனை

 

குரக்கோணத்தில்: (குரக்கு: குளம்பு) குளம்பின் வடிவத்தைக் கொண்ட (கோணம்: மூக்கு) மூக்கு; கழு: கழுகு; நந்து: நந்துகின்ற, மங்குகின்ற; நத்தி: விரும்பி;

குறித்தே முத்திக்கு மறா இன்ப தடத்தே பற்றி சக மாயம் பொய் குலம் கால் வற்ற சிவ ஞானம் பொன் கழல் தாராய்

 

மறா: மாறா, மாறாத; குலக்கால்: குலமாகிய பற்றுக்கோடு;

புர காடு அற்று பொடியாய் மங்க கழை சாபத்து ஐ சடலான் உங்க புகை தீ பற்ற அ புகலோர் அன்புற்று அருள்வோனே

 

புரக்காடு: (திரி)புரமாகிய காடு; கழை சாபத்து: கரும்பு வில்லை உடைய; ஐ சடலான்: அழகிய தேகத்தைக் கொண்ட (மன்மதன்); உங்க: அழிய; புகலோர்: வெற்றியாளர்;

புடைத்தே எட்டு திசையோர் அஞ்ச தனி கோலத்து புகு சூர் மங்க புகழ் போர் சத்திக்கு இரையா ஆநந்தத்து அருள்வோனே

 

 

திரு கானத்தில் பரிவோடு அந்த குற கோலத்து செயலாள் அஞ்ச திகழ் சீர் அத்திக்கு அழல் வா என்ப புணர்வோனே

 

திருக்கானத்தில்: அழகிய காட்டில்; பரிவோடு: அன்போடு; திகழ்சீர்: புகழ் விளங்கும்; அத்திக்கு: யானைக்கு (விநாயகனுக்கு); அழல்: அழாதே;

சிவ பேறுக்கு கடையேன் வந்து உள் புக சீர் வைத்து கொ(ள்)ளு ஞானம் பொன் திரு காளத்தி பதி வாழ் கந்த பெருமாளே.

 

 

சரக்கு ஏறி இத்தப் பதி வாழ் தொந்தப் பரிக் காயத்தில் பரிவோடு ஐந்து சதிகாரர் புக்கு... பொருள் நிறைந்திருக்கின்ற இந்த உலகத்தில் வாழும் தொடர்பைக் கொண்டுள்ள இந்த உடலிலே அன்புடையவர்களைப் போல ஐந்து சதிகாரர்களாகிய ஐம்புலன்களும் புகுந்து,

உலை மேவு இந்தச் செயல் மேவி. சலித்தே மெத்தச் சமுசாரம் பொன் சுகித்தே.. அழிவை ஏற்படுத்துகின்ற இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டு, சலிப்பெய்தி; குடும்பத்தையும் செல்வத்தையும் பெரிதும் அனுபவித்து,

சுற்றத்தவரோடு இன்ப(ம்) தழைத்தே மெச்ச தயவோடு இந்தக் குடி பேணி... உறவினர்களோடு மிகுந்த மகிழ்ச்சியாகவும் மெச்சத்தக்கபடியும் இந்த வாழ்க்கையைப் போற்றி,

குரக்கோணத்தில் கழு நாய் உண்ப குழிக்கே வைத்துச் சவமாய் நந்து... குளம்பைப் போல பிளவுபட்டதும் கூர்மையானதுமான மூக்கையுடைய கழுகும் நாயும் தின்னும்படியாகக் குழியிலே கிடக்கின்ற சவமாக அழிகின்ற,

இக் குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப் படுவேனை... குடிலான இந்த உடலைப் போற்றுகின்ற குற்றமுடையவனாய் அழிந்துபோகின்ற நான்,

குறித்தே முத்திக்கு ம(மா)றா இன்பத் தடத்தே பற்றி... குறிக்கோளுடன் முக்திக்கு மாறுதலில்லாத இன்பப் பாதையை அடைந்து,

சக மாயம் பொய்க் குலம் கால் வற்ற சிவ ஞானம் பொன் கழல் தாராய்... உலக மாயையும் பொய்யான குலம், குடி என்ற பற்றுக்கோடுகளும் இற்றுப் போகும்படியாக சிவஞானமாகிய உன்னுடைய பொற்பாதங்களைத் தந்தருள வேண்டும்.

புரக் காடு அற்றுப் பொடியாய் மங்க, கழைச் சாபத்து ஐச் சடலான் உங்க.. திரிபுரமாகிய காடு அழிந்து பொடியாகவும்; கரும்பு வில்லையும் அழகிய உடலையும் கொண்ட மன்மதன் அழிந்துபடவும்,

புகைத் தீ பற்ற அப்புகலோர் அன்புற்று அருள்வோனே... (நெற்றிக் கண்ணின்) புகைகொண்ட தீ பற்றிக்கொள்ளுமாறு செய்த சிவபெருமான் அன்போடு அருளியவனே!

புடைத்தே எட்டுத் திசையோர் அஞ்ச தனிக்கோலத்துப் புகு சூர் மங்க... அடித்து வீழ்த்துவதால் எட்டுத் திசையில் உள்ளவர்களும் நடுங்கும்படியான பயங்கரமான உருவத்தோடு வருகின்ற சூரன் அழியும்படியாக,

புகழ்ப் போர் சத்திக்கு இரையா ஆநந்தத்து அருள்வோனே... புகழ்மிக்க போர்த்திறன்கொண்ட சக்தியான வேலாயுதத்துக்கு இரையாக மகிழ்ச்சியோடு அருளியவனே!

திருக் கானத்தில் பரிவோடு அந்தக் குறக் கோலத்துச் செயலாள் அஞ்ச திகழ்ச்சீர் அத்திக்கு அழல் வா என்பப் புணர்வோனே... வள்ளி மலையான திருக் கானகத்திலே நீ அன்பு பூண்டிருந்தவளும் குறக்கோலத்தில் (தினைப்புனம் காக்கும்) செயலில் ஈடுபட்டிருந்தவளுமான வள்ளி (யானை வடிவில் வந்த விநாயகனைக் கண்டு) அஞ்சவும், (போரில்) ‘புகழ்மிக்க இந்த யானைக்கு பயந்து நீ அழவேண்டாம், வா’ என்று அவளை அணைத்தவனே!

சிவப் பேறுக்குக் கடையேன் வந்து உள் புக... சிவகதியை அடையும் பேற்றுக்காகக் கடையவனா அடியேன் உள்ளே புகுவதற்கான,

சீர் வைத்துக் கொ(ள்)ளு ஞானம் பொன் திருக் காளத்திப் பதி வாழ் கந்தப் பெருமாளே... சிறப்பினைத் தந்து என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்—ஞானமும் பொலிவும் நிறைந்ததான திருக்காளத்தித் தலத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!


சுருக்க உரை:

 திரிபுரமாகிய காடு அழிந்து பொடியாகும்படியும்; கரும்பு வில்லையும் அழகிய உடலையும் கொண்ட மன்மதன் அழியும்படியாகவும் நெற்றிவிழித் தீயால் எரித்த வெற்றியாளரான சிவனார் அன்போடு அருளியவனே!  எட்டுத் திக்குகளிலும் உள்ளவர்கள் அஞ்சும்படியாக அடித்துப் புடைத்தவனும் பயங்கரமான தோற்றத்தோடு வந்தவனுமான சூரன் அழியும்படியாக அவனைச் சக்திவேலுக்கு உணவாக மகிழ்ச்சியோடு கொடுத்தவனே!  வள்ளி மலைக் காட்டிலே குறக்கோலம் பூண்டிருந்த வள்ளி அஞ்சும்படியாக (அவளெதிரில் விநாயகப் பெருமான் யானை வடிவில் தோன்றியபோது) ‘போரில் புகழ்பெற்ற இந்த யானைக்கு அஞ்சி நீ அழவேண்டாம்’ என்று சொன்னபடி அவளை அணைத்தவனே!  சிவகதிஅடையும் பேற்றுக்குக் கடையேனாகிய நான் உள்ளே பிரவேசிப்பதற்கு வேண்டிய சிறப்பைத் தந்து என்றை ஏற்றுக்கொள்ள வேண்டும், ஞானமும் பொலிவும் நிறைந்த திருக்காளத்தியில் வீற்றிருக்கும் பெருமாளே!

 பொருளால் நிறைந்த இந்த உலகத்திலே வாழ்கின்ற தொடர்பை உடையதான இந்த உடலுக்குள்ளே, மிகுந்த அன்புடையவர்களைப்போல ஐம்புலன்களாகிய சதிகாரர்கள் புகுந்து; அழிவுக்குக் காரணமான தொழில்களை மேற்கொண்டு; சஞ்சல வசப்பட்டு; குடும்பம், செல்வம் எல்லாவற்றையும் மிகுந்த சுகத்தோடு அனுபவித்துச் சுற்றத்தாரோடு மகிழ்ந்திருந்து; வளைந்து பிளவுபட்டதும் கூர்மையானதுமான அலகால் கொத்தித் தின்னும் கழுகும் நாயும் தின்னும்படியாக சவக்குழிக்குள்ளே வெற்று உடலமாக அழிந்துபோகக்கூடிய இந்தக் குடிலையே விரும்பி அழிந்துபோகின்ற எனக்கு,

 குறிக்கொண்டு முத்திக்கு மாறுபாடில்லாத இன்பவழியை மேற்கொண்டு; உலக மாயை, பொய், குலம், குடி என்பன போன்ற பற்றுக்கோடுகளை வற்றச் செய்வதற்காகச் சிவஞானமாகிய உன்னுடைய திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com