பகுதி - 725

வேதங்கள் போற்றி மகிழ்கின்ற குமாரா
பகுதி - 725

பதச் சேதம்

சொற் பொருள்

கனக சபை மேவும் எனது குரு நாத கருணை முருகேச பெருமாள் காண்

 

கனகசபை: பொற்சபை;

கனக நிற வேதன் அபயம் இட மோது கர கமலம் சோதி பெருமாள் காண்

 

வேதன்: பிரமன்; மோது: மோதுகின்ற, குட்டுகின்ற;

வினவும் அடியாரை மருவி விளையாடும் விரகு ரச மோக பெருமாள் காண்

 

வினவும் அடியார்: ஆய்ந்து ஓதும் அடியார்; மருவி: பொருந்தி; விரகு: உற்சாகம்; ரச(ம்): இன்பம்; மோக(ம்): ஆசை;

விதி முநிவர் தேவர் அருணகிரி நாதர் விமல சர சோதிப் பெருமாள் காண்

 

விதி: பிரமன்; அருணகிரி நாதர்: அருணாசலேஸ்வரர்; விமல: தூய; சர(ம்): சுவாசம்;

சனகி மணவாளன் மருகன் என வேத சதம் மகிழ் குமார பெருமாள் காண்

 

சனகி: சானகி; சனகி மணவாளன்: ராமன்; வேத சதம்: நூற்றுக்கணக்கான வேதங்களும்;

சரண சிவகாமி இரண குல காரி தரு முருக நாம பெருமாள் காண்

 

சரண சிவகாமி: அடைக்கலம் தரும் சிவகாமி; இரணகுல: போர்செய்யும் (அரக்கர்) குல; காரி: அழித்தவள்;

இனிது வனம் மேவும் அமிர்த குற மாதொடு இயல் பரவு காதல் பெருமாள் காண்

 

 

இணை இல் இப தோகை மதியின் மகளோடும் இயல் புலியுர் வாழ் பொன் பெருமாளே.

 

இப(ம்): யானை; இபதோகை: தேவானை; மதியின் மகள்: வள்ளி (வள்ளி என்றாலே சந்திரன் என்றொரு பொருள் உண்டு—வள்ளி: தண்கதிர் மண்டிலம் என்பது தொல்காப்பிய பொருள் 88 உரை என்பார் உரையாசியர் தணிகைமணியார்.)

கனகசபை மேவும் எனதுகுரு நாத கருணைமுருகேசப் பெருமாள்காண்... பொன்னம்பலத்திலே நடனமாடுகின்ற எனது குருநாதனான கருணை மிகுந்த முருகேசப் பெருமாள் நீயல்லவா.

கனகநிற வேதன் அபயமிட மோது கரகமல சோதிப் பெருமாள்காண்... பொன்னிறம் கொண்ட பிரமன் ‘அபயம்’ என்று சரணடைய, அவனைத் தலையில் குட்டிய தாமரையை ஒத்த கரங்களை உடைய ஜோதிப் பெருமாள் நீயல்லவா.

வினவுமடியாரை மருவிவிளையாடு விரகு ரச மோகப் பெருமாள்காண்... ஆய்ந்து துதிக்கின்ற அடியார்களோடு பொருந்தி விளையாடுகின்ற ஆர்வமும் இன்பமும் ஆசையும் கொண்ட பெருமாள் நீயல்லவா.

விதி முநிவர் தேவர் அருணகிரி நாதர் விமல சர சோதிப் பெருமாள்காண்... பிரமனும் முனிவர்களும் தேவர்களும் அருணாசலேஸ்வரரும்; பரிசுத்தமான என் மூச்சுக் காற்றில் உள்ள ஜோதிப் பெருமாளும் நீயல்லவா.

சனகிமணவாளன் மருகனென வேத சதமகிழ்குமாரப் பெருமாள்காண்... ஜானகியின் மணாளனான ஸ்ரீராமனின் மருகன் என்று நூற்றுக்கணக்கான வேதங்கள் போற்றி மகிழ்கின்ற குமாரப் பெருமாள் நீயல்லவா.

சரணசிவ காமி இரணகுல காரி தருமுருக நாமப் பெருமாள்காண்... அடைக்கலம் அளிப்பவளும்; போர் செய்த அசுரர் குலத்தை சம்ஹரித்தவளுமான சிவகாமியம்மை பெற்ற ‘முருகன்’ என்னும் திருநாமமுடைய பெருமாள் நீயல்லவா.

இனிதுவன மேவும் அமிர்தகுற மாதொடு இயல்பரவு காதற் பெருமாள்காண்... வள்ளிமலைத் தினைப்புனத்திலே இனிதே இருந்த அமுதத்தை ஒத்த குறமாதான வள்ளியோடு விரிந்த நேசம்பூண்ட காதற்பெருமாள் நீயல்லவா.

இணையில் இப தோகை மதியின்மகளோடு இயல்புலியுர் வாழ்பொற் பெருமாளே.... இணையற்ற யானை வளர்த்த தேவானை, ‘சந்திரன்’ என்று பொருள்படும் வள்ளி இருவரோடும் பொருந்தி புலியூரான சிதம்பரத்தில் வாழ்கின்ற அழகிய பெருமாளே!


சுருக்க உரை:

ஒப்பற்ற யானையால் வளர்க்கப்பட்ட தேவானை, வள்ளி இருவரோடும் பொருந்தி சிதம்பரத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

கனகசபையில் நடனம் புரியும் எனது குருநாதனும்; கருணை நிறைந்த முருகேசனும் நீயேதான்; ‘சரணம், சரணம்’ என்று ஓலமிட்ட பொன்னிறமுடைய பிரமனின் தலையில் குட்டிய செந்தாமரைக் கரங்களை உடைய ஜோதிப் பெருமாள் நீயேதான்; ஆய்ந்து ஓதுகின்ற அடியார்களிடத்திலே பொருந்தி விளையாடுகின்ற உற்சாகமும் இன்பமும் ஆசையும் உடைய பெருமாள் நீயேதான்; பிரமனாகவும் முனிவர்களாகவும் தேவர்களாகவும் அருணாசலேஸ்வரராகவும் என் மூச்சினுள்ளே பரிசுத்தமான ஜோதியாகவும் விளங்கும் பெருமாள் நீயேதான்; ஜானகி மணாளனான ஸ்ரீராமசந்திரனுடைய மருகன் என்று நூற்றுக்கணக்கான வேதங்கள் போற்றி மகிழ்கின்ற குமாரப் பெருமாள் நீயேதான்; வள்ளி மலையின் தினைப்புனத்திலே இனிதே இருந்த, அமுதத்தை ஒத்த குறப் பெண்ணான வள்ளியோடு மிகுந்த நேசம்பூண்ட காதற்பெருமாள் நீயேதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com