பகுதி - 479

பூரணமான சிவஞான நூல்களை ஓதும்

பதச் சேதம்

சொற் பொருள்

தாரணிக்கு அதி பாவியாய் வெகு சூது மெத்திய மூடனாய் மன சாதனை களவாணியாய் உறும் மதி மோக

 

தாரணிக்கு: உலகத்தில்; அதி பாவியாய்: பெரிய பாவியாய்; சூது மெத்தின: சூது நிறைந்த; மனசாதனை: மனத்தில் அழுந்திய; களவாணியாய்: திருட்டு புத்தி உடையவனாய்; உறும் மதிமோக: ஏற்படுகின்ற அறிவுமயக்கமும்;

தாப(ம்) மிக்கு உள வீணனாய் பொரு வேல் விழிச்சியர் ஆகு மாதர்கள் தாம் உ(ய்)ய செ(ய்)யும் ஏது தேடிய நினைவாகி

 

தாபம்: தாகம், ஆசை; விழிச்சியர்: விழியை உடையவர்கள்; ஏது: செல்வம்;

பூரண சிவ ஞான காவியம் ஓது(ம்) தற்ப உணர்வான நேயர்கள் பூசும் மெய் திரு நீறு இடா இரு வினையேனை

 

 

பூசி மெய் பதமான சேவடி காண வைத்து அருள் ஞானம் ஆகிய போதகத்தினையே ஏயுமாறு அருள் புரிவாயே

 

போதகத்தினை: போதனையை, உபசேதசத்தை; ஏயுமாறு: அடையுமாறு;

வாரணத்தினையே கராவும் மு(ன்)னே வளைத்திடு போது மேவிய மாயவற்கு இதமாக வீறிய மருகோனே

 

வாரணம்: யானை; கரா: முதலை; மேவிய: வந்த; மாயவன்: திருமால்; வீறிய: மேம்பட்ட (வீறுதல்: மேம்படுதல்);

வாழும் முப்புர(ம்) வீறதானது நீறு எழ புகையாகவே செய்த மா மதி பிறை வேணியார் அருள் புதல்வோனே

 

வீறதானது: பொலிவானது; நீறு எழ; சாம்பலாக; வேணியார்: சடையை உடையவர்;

காரண குறியான நீதியர் ஆனவர்க்கு மு(ன்)னாகவே நெறி காவிய சிவ நூலை ஓதிய கதிர்வேலா

 

காரணக்குறி நீதியர்: மூலகாரணமாக விளங்கும் நீதிப்பெருமானான சிவன்; நெறி காவிய சிவ நூல்: தேவாரம்; ஓதிய கதிர்வேலா: ஞானசம்பந்தராக வந்த முருகனே;

கானக குற மாதை மேவிய ஞான சொல் குமரா பராபர காசியில் பிரதாபமாய் உறை பெருமாளே.

 

பராபரன்: மேலான பொருள்; பிரதாபமாய்: பிரபலமாய்;


தார ணிக்கதி பாவியாய்; வெகு சூது மெத்திய மூட னாய்;...இவ்வுலகிலேயே மிகப் பெரிய பாவியாகவும்; சூது நிறைந்த மூடனாகவும்;  

மன சாதனைக் களவாணியாய்; உறு மதிமோக தாப மிக்குள வீணனாய்... மனத்தில் கள்ளத்தனம் அழுத்தமாக இருப்பவனாகவும்; அறிவிலே கலக்கம் ஏற்பட்டவனாகவும்; அதிகமான ஆசையை உடைய வீணனாகவும்;

பொரு வேல்வி ழிச்சிய ராகு மாதர்கள் தாமுயச்செயும் ஏது தேடிய நினைவாகி... போருக்கு எழுந்த வேலைப் போன்ற கண்களை உடைய, தாம் பிழைப்பதற்காக செல்வத்தைத் தேடும் (எண்ணத்தை உடைய) பொதுப் பெண்டிர்களையே நினைத்தபடி;

பூரணச்சிவ ஞான காவியம் ஓதுதற்புணர்வான நேயர்கள் பூசு மெய்த்திரு நீறி டாஇரு வினையேனை.. பூரணமான சிவஞான நூல்களை ஓதுவதில் விருப்பம் கொண்டுள்ள அன்பர்கள் உடலிலே பூசுவதான திருநீற்றைப் பூசாதவனும் இருவினைகளுக்கு ஆளானவனுமான என்னை,

பூசி மெய்ப்பதமான சேவடி காண வைத்தருள் ஞான மாகிய போத கத்தினையேயு மாறருள் புரிவாயே... (அந்தத் திருநீற்றைப்) பூசச் செய்து மெய்ப்பதமான உன் திருவடிகளின் தரிசனத்தைக் கொடுத்து; மெய்ஞ்ஞானத்துக்கான உபதேசத் அடியேன் அடையுமாறு திருவருள் செய்யவேண்டும். 

வாரணத்தினையே கராவுமுனே வளைத்திடு போதுமேவிய மாயவற்கு இதமாக வீறிய மருகோனே... கஜேந்திரனாகிய யானையை அன்றொருநாள் ஒரு முதலை கவ்விய போது அங்கே தோன்றியவனான திருமாலுடைய மனத்துக்கு இனியவனும் மேம்பட்டவனுமான மருமகனே!  

வாழு முப்புர வீற தானது நீறெழப்புகையாக வேசெய்த... செழிப்பாக வாழ்ந்திர முப்புரங்களுடைய பொலிவெல்லாமும் சாம்பலாகப் போய் புகை எழுமாறு செய்த,

மாமதிப்பிறை வேணியார் அருள் புதல்வோனே... இளம்பிறையை அணிந்திருக்கும் சடாமுடியை உடையவரான சிவபெருமான் அருளிய மகனே! 

காரணக்குறி யான நீதியர் ஆனவர்க்கு முனாகவே நெறிகாவியச்சிவ நூலை யோதிய கதிர்வேலா... எல்லாவற்றுக்கும் மூலகாரணமாகவும் தேடும் இலக்காகவும் உள்ள நீதிப் பெருமானான சிவபெருமானின் சந்நிதானங்களில், அறநெறியைச் சொல்வதான சிவநூலாகிய தேவாரத்தை (திருஞானசம்பந்தராக வந்து) ஓதிய கதிர்வேலனே!

கானகக்குற மாதை மேவிய ஞான சொற்குமரா பராபர காசியிற் பிரதாப மாயுறை பெருமாளே... காட்டைச் சேர்ந்த குறப்பெண்ணான வள்ளியை அடைந்தவனே!  ஞனாமொழிகளைப் பேசுகின்ற குமரனே!  யாவர்க்கும் மேலானவனே!  காசியிலே பிரபலமாக விளங்குகின்ற பெருமாளே! 

சுருக்க உரை

கஜேந்திரனாகிய யானையை முதலையொன்று கவ்வியபோது அங்கே வந்து தோன்றி உதவியவரான திருமாலுடைய மனத்துக்கு இதமானவனும் மேம்பட்டவனுமான மருமகனே!  பெருவாழ்வு வாழ்ந்திருந்த முப்புரங்களுடைய பொலிவு சாம்பலாகும்படியும் புகையெழும்படியும் செய்தவரும்; பிறைச்சந்திரனை அணிந்த சடையை உடையவருமான சிவபிரானுடைய மகனே!  அனைத்துக்கும் மூலகாரணமாகவும் அனைவருக்கும் அடைவதற்கான இலக்காகவும் உள்ள நீதிப் பிரானான சிவனாருடைய சந்நிதிகளிலே அறநெறியை ஓதுகின்ற சிவநூலான தேவாரத்தை திருஞான சம்பந்தராக வந்து ஓதிய கதிர்வேலனே!  காடுகளைச் சேர்ந்த குறப்பெண்ணான வள்ளியை விரும்பி அடைந்தவனே!  ஞானப்பொருளைப் பேசுகின்ற குமரனே!  மேலான பொருளே!  காசித் தலத்திலே பிரபலமாக விளங்குகின்ற பெருமாளே! 

இந்த உலகத்திலேயே பெரிய பாவியாகவும்; வஞ்சனை நிறைந்த மூடனாகவும்; தீய எண்ணங்களை உடையவனாகவும்; ஆசையும் தாகமும் நிறைந்தவனாகவும்; வேல்போன்ற கண்களையுடைவர்களும், தாம் பிழைப்பதற்காகச் செல்வத்தைத் தேடுவதைய எண்ணமாகக் கொண்டவர்களுமான பொதுப்பெண்டிர்களின் மேலேயே நினைவை வைத்து; பூரணமான சிவஞான நூல்களை ஓதும் அடியவர்கள் மேனியில் பூசுகின்ற திருநீற்றை இட்டுக்கொள்ளாத இருவினையாளனான அடியேனை,

அந்தத் திருநீற்றை அணியச் செய்து உண்மைப் பதவியான உன்னுடைய திருவடிகளின் தரிசனத்தைக் கொடுத்து திருவருளின் மயமாக விளங்குகின்ற ஞானம் கிட்டும்படியாக அடியேனுக்கு உபதேசித்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com