பகுதி - 483

ஒப்பற்ற பஞ்சபூதங்களும்

பதச் சேதம்

சொற் பொருள்

நிகரில் பஞ்ச பூதமு(ம்) நினையு(ம்) நெஞ்சும் ஆவியு(ம்) நெகிழ வந்து நேர் படும் அவிரோதம்

 

நிகரில்: இணையற்ற; நேர்படும்: ஒன்றுகூடும்; அவிரோதம்: விரோதமற்றதான ஞானம்;

நிகழ் தரும் ப்ரபாகர நிரவயம் பராபர நிருப அம் குமார வெளென வேதம்

 

நிகழ்தரும்: நிகழச் செய்யும்; ப்ராபகர: ஒளி உருவனே; நிரவயம்: அழிவில்லாத; பராபர: மேலான; வெளென: வேள் என;

சகர சங்க(ம்) சாகரம் என முழங்கு வாதிகள் சமய பஞ்ச பாதகர் அறியாத

 

சகர: சகரர்கள் தோண்டியதும்; சங்க: சங்குகளை உடையதும்; சாகரம்: கடல்; வாதிகள்: வாதிடுகின்ற; சமய பஞ்ச பாதகர்: பஞ்சமகா பாதகர்களான சமயவாதிகள்;

தனிமை கண்டதான கிண்கிணிய தண்டை சூழ்வன சரண புண்டரீகம் அது அருள்வாயே

 

தனிமை கண்டதான: (ஊழிக் காலத்தில்) தனித்து நிற்பதான; கிண்கிணிய: கிண்கிணி அணிந்ததும்; தண்டை சூழ்வன: தண்டையால் சூழப்பட்டதும்; சரண புண்டரீகம்: திருவடியாகிய தாமரை;

மகர(ம்) விம்ப சீகரம் முகர(ம்) வங்க(ம்) வாரிதி மறுகி வெந்து வாய் விட நெடு வான

 

மகர(ம்): மகர மீன்களைக் கொண்டதும்; விம்ப: ஒளி படைத்ததும்; சீகரம்: அலை; முகரம்: ஒலியெழுப்புவதும்; வங்கம்: கப்பல்; வாரிதி: கடல்; மறுகி: கலங்கி; வாய்விட: வாய்விட்டு அலற, கொந்தளிக்க;

வழி திறந்து சேனையும் எதிர் மலைந்த சூரனும் மடிய இந்திராதியர் குடி ஏற

 

 

சிகர துங்க மால் வரை தகர வென்றி வேல் விடு சிறுவ சந்த்ர சேகரர் பெரு வாழ்வே

 

சிகர: சிகரங்களை உடைய; துங்க: உயர்ந்த; மால்: மயக்கம், மாயை(யில் வல்ல); வரை: மலை—கிரெளஞ்ச மலை; சந்த்ரசேகரர்: சந்திரனைச் சூடியிருப்பவர்;

திசை தொறும் ப்ரபூபதி திசை முகன் பராவிய திரு விரிஞ்சை மேவிய பெருமாளே.

 

ப்ரபூ பதி: மன்னர்கள்; திசைமுகன்: நான்முகன்; பராவிய: போற்றிய;


நிகரில் பஞ்ச பூதமு நினையு நெஞ்சும் ஆவியு நெகிழ வந்து நேர்படும் அவிரோதம்... ஒப்பற்றதான பஞ்ச பூதங்களும்; நினைக்கின்ற நெஞ்சங்களும்; உயிர்களும் நெகிழ்ந்துபோய் ஒன்றாகக் கூடுவதான ஞானத்தை,

நிகழ் தரும் ப்ரபாகர நிரவயம் பராபர நிருப அங்குமார வெளென வேதம்... நிகழ்விக்கின்ற ஒளி சொரூபனே!  அழியாதவனே!  மேலான பொருளே!  தலைவனே!  அழகிய குமாரவேளே என்று வேதம் (முழங்குவதும்);

சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள் சமய பஞ்ச பாதகர் அறியாத… சகரர்கள் தோண்டியதும், சங்கங்கள் நிறைந்ததுமான கடலைப்போல பெரிய ஓசையோடு வாதிடுபவர்களான சமயவாதிகளாகிய பஞ்ச மகா பாதகர்கள் அறியாததும்;

தனிமை கண்டதான கிண் கிணிய தண்டை சூழ்வன சரண புண்டரீகம் அது அருள்வாயே... (ஊழிக் காலத்திலும்) தனித்து நிற்பவையும்; கிண்கிணி, தண்டைகளால் சூழப்பட்டவையுமான திருவடித் தாமரைகளைத் தந்தருள வேண்டும். 

மகர விம்ப சீகர முகர வங்க வாரிதி மறுகி வெந்து வாய்விட... மகர மீன்கள் நிறைந்ததும்; ஒளிபடைத்ததும்; அலை வீசுவதும்; ஒலி மிகுந்ததும்; கப்பல்கள் செல்வதுமான கடல் கலங்கிப்போய், வெந்து கொந்தளிக்கும்படியாகவும்;

நெடுவான வழிதிறந்து சேனையும் எதிர்மலைந்த சூரனு மடிய இந்தி ராதியர் குடியேற... நீண்ட வானத்தின் வாசலைத் திறந்துகொண்டு வந்த சேனைகளும் எதிர்த்துப் போரிட்ட சூரனும் மடியும்படியாகவும்; இந்திராதி தேவர்கள் அந்த வானலோகத்திலே மீண்டும் குடியேறும்படியாகவும்;

சிகர துங்க மால்வரை தகர வென்றி வேல்விடு சிறுவ சந்த்ர சேகரர் பெருவாழ்வே... சிகரங்களை உடையதும்; உயர்ந்ததும்; மாயை நிறைந்ததுமான கிரெளஞ்ச பர்வதம் தகர்ந்து போகும்படியாகவும் வெற்றிவேலை வீசிய சிறுவனே!  சந்திரப் பிறையை முடியிலே தரித்தவரான சிவபிரானுடைய பெருஞ்செல்வமே!

திசைதொறும் ப்ர பூபதி திசைமுகன்பராவிய திருவிரிஞ்சை மேவிய பெருமாளே … எல்லாத் திசைகளிலும் உள்ள புகழ்வாய்ந்த மன்னர்களும் திசைமுகனாகிய பிரமனும் போற்றுவதான திருவிரிஞ்சைத் தலத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

வானத்தின் வாசலைத் திறந்துகொண்டு வந்த சேனைகளும்; எதிர்த்துப் போரிட்டவனான சூரனும் மடியும்படியாகவும்; இந்திராதி தேவர்கள் மீண்டும் அந்த வானலோகத்திலே குடியேறும்படியாகவும்; சிகரங்களை உடையதும்; உயரமானதும்; மாயை நிறைந்ததுமான கிரெளஞ்ச பர்வதம் தகர்ந்து போகும்படியாகவும் வெற்றிவேலை வீசிய சிறுவனே! பிறைச் சந்திரனைத் தரித்திருக்கும் சிவனாருடைய பெருஞ்செல்வமே!  எல்லாத் திசைகளிலும் உள்ள அரசர்களும் பிரமனும் போற்றுவதான திருவிரிஞ்சைத் தலத்தில் வீற்றிருக்கின்ற பெருமானே!

ஒப்பற்ற பஞ்சபூதங்களும்; நினைப்பதாகிய நெஞ்சங்களும்; உயிர்களும் ஒன்றாக வந்து கூடும்படியான விரோதமற்ற ஞானத்தைக் கூட்டுவிக்கின்ற ஒளி சொரூபனே!  தலைவனே!  அழிவற்றதும் மேலானதுமான பரம்பொருளே!  அழகிய குமாரவேளே என்று வேதங்கள் முழங்குவதும்; சகரர்கள் தோண்டியதும்; சங்குகள் நிரம்பியதும்; அலை வீசுவதும் ஒளி நிறைந்ததுமான கடலைப் போல ஒலியெழுப்பிக்கொண்டு வாதிடுகின்ற சமயவாதிகளான பஞ்சமகா பாதகர்களால் அறியப்படாததும்; ஊழிக்காலத்தில் தனித்து நிற்பதும்; கிண்கிணி தண்டைகளை அணிந்ததுமான உன் தாமரைத் திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com