பகுதி - 485

படங்கொண்ட பாம்பைப் போல

பதச் சேதம்

சொற் பொருள்

பை அரவு போலும் நொய்ய இடை மாதர் பைய வரு கோலம் தனை நாடி

 

பையரவு: படங்கொண்ட பாம்பு; நொய்ய இடை: மெலிந்த இடை; பையவரு கோலம்: மெல்லச் செய்துகொள்கின்ற அலங்காரம்;

பையல் என ஓடி மையல் மிகு மோக பவ்வம் மிசை வீழும் தனி நாயேன்

 

பையல்: பயல், சிறுவன், அற்பன்; பவ்வம்: பௌவம், கடல்;

உய்ய ஒரு காலம் ஐய உபதேசம் உள் உருக நாடும்படி பேசி

 

 

உள்ளதும் இ(ல்)லாதும் அல்லத அவிரோத உல்லச விநோதம் தருவாயே

 

அல்லத: அல்லாத; உல்லச: உல்லாசம், களிப்பு; விநோதம்: வியப்பு;

வையம் முழுது ஆளும் ஐய குமரேச வள்ளி படர் கானம் புடை சூழும்

 

 

வள்ளி மலை வாழும் வள்ளி மணவாளா மை உததி ஏழும் கனல் மூள

 

மை உததி: கரிய கடல்;

வெய்ய நிருதேசர் சையமுடன் வீழ வெல்ல அயில் விநோதம் புரிவோனே

 

நிருதேசர்: நிருத ஈசர், அரக்கர்களின் தலைவர்கள்; சையமுடன்: (கிரெளஞ்ச) மலையுடன்; அயில் விநோதம்: வேலாயுத விளையாடல்;

வெள்ளி மணி மாடம் மல்கு திரு வீதி வெள்ளி நகர் மேவும் பெருமாளே.

 

மல்கு: நிறைந்த;


பை அரவு போலும் நொய்ய இடை மாதர் பைய வரு கோலம் தனை நாடிப் பையல் என ஓடி மையல் மிகு மோக பவ்வம் மிசை வீழும் தனி நாயேன்... படங்கொண்ட பாம்பைப் போல மெல்லிய இடையை உடைய பெண்கள் நிதானமாக அலங்கரித்துக்கொள்கிற கோலத்தை விரும்பி, அற்பமான சிறுவனைப்போல ஓடி, மோகம்மிக்க காமக் கடலில் விழுகின்ற தனித்த நாயைப் போன்றவனான நான்,

உய்ய ஒரு காலம் ஐய உபதேசம் உள் உருக நாடும்படி பேசி உள்ளதும் இ(ல்)லாதும் அல்லத அவிரோத உல்லச விநோதம் தருவாயே... என்றேனும் உய்வடையுமாறும்; ஐயனே, உன்னுடைய உபதேசத்தை என் உள்ளமானது உருகி விரும்பிப் பேசுமாறும் ஓதியருளி; உள்ளது, இல்லாதது இரண்டும் அற்றதும்; அவிரோதமானதும் (மாறுபாடற்றதும்); உள்ளக் களிப்பைத் தருவதுமான ஆச்சரியமான நிலையைத் தந்தருள வேண்டும்.

வையம் முழுது ஆளும் ஐய குமரேச வள்ளி படர் கானம் புடை சூழும் வள்ளி மலை வாழும் வள்ளி மணவாளா... உலகம் முழுவதையும் ஆளுகிற ஐயனே!  குமரேசனே!  வள்ளிக் கொடிகள் படர்ந்திருக்கின்ற காடுகள் சூழ்ந்திருக்கின்ற வள்ளி மலையிலே வாழ்பவளான வள்ளியம்மையின் மணவாளனே!

மை உததி ஏழும் கனல் மூள வெய்ய நிருதேசர் சையமுடன் வீழ வெல்ல அயில் விநோதம் புரிவோனே... ஏழு கருங்கடல்களிலும் தீ மூளும்படியாகவும்; கொடிய அசுரர்களின் தலைவர்கள், அவர்களிருந்த கிரெளஞ்ச மலையோடு வீழும்படியாக வெற்றிவேலைக் கொண்டு விளையாடல் புரிந்தவனே!

வெள்ளி மணி மாடம் மல்கு திரு வீதி வெள்ளி நகர் மேவும் பெருமாளே.... வெள்ளை நிறத்தையுடைய மணிமாடங்கள் நிறைந்ததும் செல்வம் மிகுந்ததுமான வீதிகளைக் கொண்ட வெள்ளிகரம் தலத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

உலகம் முழுவதையும் ஆளுகின்ற ஐயனே!  குமரேசனே!  வள்ளிக்கொடிகள் படர்ந்திருக்கின்ற, காடுகள் சூழ்ந்த வள்ளி மலையில் வாழ்பவளான வள்ளியம்மையின் மணாளனே! கரியதான ஏழு கடல்களிலும் தீப்பற்றிக் கொள்ளும்படியும்; கொடிய அசுரர்களின் தலைவர்கள் மாண்டு விழும்படியும் வெற்றிதரும் வேலாயுதத்தைக் கொண்டு விளையாடல் புரிந்தவனே!  வெள்ளை நிறத்தையுடைய மணிமாடங்கள் நிறைந்ததும்; செல்வம் மிகுந்ததுமான வீதிகளைக் கொண்ட வெள்ளிகரத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

படங்கொண்ட பாம்பைப் போல மெல்லிய இடையைக் கொண்ட பெண்கள் நிதானமாகச் செய்துகொள்ளும் அலங்காரங்களை விரும்பி, அற்பமான சிறுவனைப் போல மோகம் நிறைந்ததான காமக்கடலிலே விழுகின்ற நாயைப் போன்றவனான அடியேன் உய்யும்படியாக உபதேசித்து; அந்த உபதேசத்தை அடியேன் மனமருகி ஓதி; அதனாலே உள்ளது, இல்லாதது என்ற இரண்டு நிலைகளுமற்றதும்; மாறுபாடில்லாததும்; என்றும் மனத்துக்குக்கு களிப்பைத் தருவதுமான மெய்ப்பொருளை அடியேனுக்குத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com