பகுதி  - 486

இதிலே எழுகரை நாடு என்ற தலம்

அருணகிரியாரே தலத்தின் பெயரைக் குறித்திருந்தாலும், ‘இப்பாடலில் குறிக்கப்பட்டிருப்பது இந்தத் தலம்தான்’ என்று உறுதியாகச் சொல்லமுடியாத பாடல்கள் சில இருக்கின்றன.  இன்றைய பாடல் அப்படிப்பட்ட தலத்துக்கானது.  இதிலே எழுகரை நாடு என்ற தலம் குறிப்பிடப்படுகிறது.  ‘இது கொங்கு மண்டலத்தைச்ச் சேர்ந்தது’ என்று குறிப்பிடும் தணிகைமணி வ சு செங்கல்வராய பிள்ளையவர்கள், குடகு நாட்டிலும் எழுகரை நாடு என்ற பெயரில் ஒரு தலம் இருப்பதாகச் சிலர் சொல்வதாக’க் குறிக்கிறார்.  இவையல்லாமல், இத்தலம் இலங்கையில் உள்ளது என்று சொல்வாரும் உளர். 

மிக உருக்கமான இந்தப் பாடலிலே ‘பரகதி காட்டிய விரக சிலோச்சய பரம பராக்ரம’ என்று வருகின்ற மூன்றாம் அடியில் சொல்வதை, அருணகிரி நாதருக்கு முருகன் உபதேசத்தால் பரகதியைக் காட்டியதைக் குறிப்பதாகக் கொள்ளலாம் என்று தணிகைமணியவர்கள் சொல்கிறார்கள். 

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்; ஒன்று, மூன்று, ஐந்தாம் சீர்கள் நான்கு குற்றெழுத்துக்களைக் கொண்டவை; இரண்டு, நான்கு, ஆறாம் சீர்களில் மூன்றெழுத்துகளால் அமைந்தவை; இவற்றில் முதலெழுத்து நெடில்; கணக்கில் வராத இரண்டாம் எழுத்து வல்லொற்று; இரண்டாம் மூன்றாம் எழுத்துகள் குறில் என்ற அமைப்பை உடைய சந்தம். 

தனதன தாத்தன தனதன தாத்தன
      தனதன தாத்தன                    தந்ததான

விரகற நோக்கியு முருகியும் வாழ்த்தியும்
         விழிபுனல் தேக்கிட               அன்புமேன்மேல்
      மிகவுமி ராப்பகல் பிறிதுப ராக்கற
         விழைவுகு ராப்புனை             யுங்குமார
முருகஷ டாக்ஷர  சரவண கார்த்திகை
         முலைநுகர் பார்த்திப             என்றுபாடி
      மொழிகுழ றாத்தொழு தழுதழு தாட்பட
         முழுதும லாப்பொருள்           தந்திடாயோ
பரகதி காட்டிய விரகசி லோச்சய
         பரமப ராக்ரம                    சம்பராரி
      படவிழி யாற்பொரு பசுபதி போற்றிய
         பகவதி பார்ப்பதி                  தந்தவாழ்வே
இரைகடல் தீப்பட நிசிசரர் கூப்பிட
         எழுகிரி யார்ப்பெழ               வென்றவேலா
      இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய
         எழுகரை நாட்டவர்               தம்பிரானே.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com