பகுதி - 447

மயிலை வாகனமாகக் கொண்டு செலுத்துபவனே!

பதச் சேதம்

சொற் பொருள்

மைச்சுனமார் மா மனைச்சியும் மாதாவும் மக்களும் மாறா துயர் கூர

 

மா மனைச்சி: நல்ல இல்லாள்;

மட்டு இலது ஓர் தீயில் இக் குடில் தான் வேவ வைத்தவர் தாம் ஏக மதி மாய

 

மட்டுஇலது: அளவில்லாத; வேவ: வேக; ஏக: செல்ல; மதிமாய: அறிவு கலங்க;

நிச்சயமாய் நாளும் இட்டு ஒரு தூது ஏவு(ம்) நெட்டு அளவாம் வாதை அணுகா முன்

 

நாளும் இட்டு: நாள் குறித்து; நெட்டு அளவாம்: நீண்ட, நெடிய; வாதை: வேதனை;

நெக்கு உருகா ஞானம் உற்று உன தாள் ஓதி நித்தலும் வாழ்மாறு தருவாயே

 

நெக்குருகா: நெக்குருகி; வாழ்மாறு: வாழுமாறு;

நச்சு அணை மேல் வாழும் அச்சுதன் நால் வேதன் நல் தவர் நாட விடை ஏறி

 

நச்சணைமேல்: பாம்புப் படுக்கையின் மேல்; நால்வேதன்: பிரமன்; விடையேறி: ரிஷபத்தை வாகமனாக உடைய சிவ(னுடைய);

நல் புதல்வா சூரர் பட்டிட வேல் ஏவு நல் துணைவா ஞாலம் மிக வாழ

 

 

பச்செனு நீள் தோகை மெய் பரி ஊர் பாக பத்தியது ஆறு முக நாளும்

 

தோகை மெய்ப் பரி: தோகையை உடைய வாகனமான மயில்; பாக!: பாகனே, செலுத்துபவனே (யானைப் பாகன், தேர்ப் பாகன் என்பதைப் போல் மயில் பாகன்); பத்திஅது: வரிசையான;

பக்ஷமும் மேலாய ஷடாக்ஷர சூழ் பாத பத்தி செய் வான் நாடர் பெருமாளே.

 

பக்ஷம்: அன்பு (பட்சத்தொடு ரட்சித்தருள்வதும் ஒருநாளே—முத்தைத்தரு திருப்புகழ்); ஷடாக்ஷர சூழ் பாத: ஆறெழுத்தை உச்சரிக்கும் தேவர்களால் சூழப்பட்ட பாதங்களை உடையவனே;

மைச்சுனமார் மா மனைச்சியு(ம்) மாதாவு(ம்) மக்களும் மாறாத துயர் கூர... மைத்துனர்களும் நல்ல மனைவியும் தாயும் பிள்ளைகளும் ஒருபோதும் ஆறாத துயரத்தை அடைய;

மட்டு இலது ஓர் தீயில் இக் குடில் தான் வேவ வைத்தவர் தாம் ஏக... அளவில்லாமல் பெரிதாக எரிகின்ற தீயில் இந்த உடலை எரியும்படியாக வைத்துவிட்டு, அப்படி வைத்தவர்கள் தங்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல;

மதி மாய நிச்சயமாய் நாளும் இட்டு ஒரு தூது ஏவு(ம்) நெட்டு அளவாம் வாதை அணுகா முன்... என் அறிவிலே கலக்கம் ஏற்படும்படியாக ஒரு நாளைக் குறித்து, நிச்சயமும் செய்து (அந்த நாளிலே யமன் தனது) தூதர்களை அனுப்புவதான பெரிய வேதனைத் துயர்கள் என்னிடத்திலே நெருங்குவதற்கு முன்னாலே;

நெக்கு உருகா ஞானம் உற்று உன தாள் ஓதி நித்தலும் வாழ்மாறு தருவாயே... மனம் நெக்கு நெக்காக உருகி; ஞானத்தை அடைந்து; உன்னுடைய திருவடிகளை அனுதினமும் ஓதியபடி நான் வாழ்கின்ற நிலையைத் தந்தருள வேண்டும்.

நச்சு அணை மேல் வாழும் அச்சுதன் நால் வேதன் நல் தவர் நாட விடை ஏறி நல் புதல்வா... நஞ்சை உடைய பாம்பைப் படுக்கையாகக் கொண்டு அதன்மேல் துயில்கொள்கிற திருமாலும்; நான்கு வேதங்களிலும் தேர்ந்தவனான பிரமனும்; நல்ல தவசிகளும் நாடுபவரும்; ரிஷப வாகனத்தில் ஏறியிருப்பவருமான சிவபெருமானுடைய மகனே!

சூரர் பட்டிட வேல் ஏவு நல் துணைவா... சூரபதுமன் முதலானோர் அழியும்படியாக வேலை வீசிய நல்ல துணைவனே!

ஞாலம் மிக வாழப் பச்செனு நீள் தோகை மெய்ப்பரி ஊர் பாக... உலகோர் நன்கு வாழும்படியாக, நீண்ட பசுந்தோகையை உடைய மயிலான குதிரையைச் செலுத்துபவனே!

பத்தியது ஆம் ஆறு முக நாளும் பக்ஷமும் மேலாய்... வரிசையாக அமைந்த ஆறுமுகங்களைக் கொண்டவனே!  எப்போதும் அன்பை மேற்கொண்டிருப்பவனே!

ஷடாக்ஷர சூழ் பாத பத்தி செய் வான் நாடர் பெருமாளே.... ‘சரவணபவ’ என்ற ஆறெழுத்தை ஓதியபடி உன் திருப்பாதங்களைச் சூழ்ந்து நிற்கின்ற தேவர்களுடைய பெருமாளே!

சுருக்க உரை

நச்சை உடைய பாம்பின்மீது துயில்கின்ற திருமாலும் பிரமனும் நல்ல தவசிகளும் எப்போது நாடுபவரும் விடையேறுபவருமான சிவபெருமானுடைய புதல்வனே!  சூரபதுமன் முதலானோர் அழியும்படியாக வேலை எறிந்தவனே!  நல்ல துணைவனே!  உலகத்தோர் நன்கு வாழும்படியாக நீண்ட பசிய தோகையை உள்ள மயிலை வாகனமாகக் கொண்டு செலுத்துபவனே!  வரிசையாக அமைந்திருக்கும் ஆறுமுகங்களைக் கொண்டவனே!  எப்போதும் அன்பையே மேற்கொண்டிருப்பவனே!  ‘சரவணபவ’ என்ற ஆறெழுத்து மந்திரத்தை ஓதியபடி உன்னுடைய திருப்பாதங்களைச் சூழ்ந்திருக்கின்ற தேவர்களுடைய பெருமாளே!

மைத்துனர்களும்; நல்ல மனைவியும்; பெற்ற தாயும்; பெற்றெடுத்த குழந்தைகளும் என்றைக்கும் ஆறாத துயரத்தை அடையவும்; அளவில்லாமல் பெரிதாக எரிகின்ற தீயில் இந்த உடலை எரியும்படியாக வைத்துவிட்டு, அப்படி வைத்தவர்கள் அவரவர் வீட்டுக்குத் திரும்பும்படியாகவும்,

அறிவு கலக்கம் எய்தும்படியாக எனக்கென ஒருநாளை நிச்சயித்துக் குறித்துவிட்டு அந்த நாளில் தன் தூதர்களை யமன் அனுப்புவதான (நோய், பிணி போன்ற) நெடிய வேதனைகளை நான் அடைதற்கு முன்னதாகவே

அடியேன் உள்ளம் நெகிழ்ந்து உருகி; ஞான நிலையை அடைந்து; அனுதினமும் உனது தாளைப் போற்றிப் புகழ்ந்தபடி வாழும்படியான கதியை அருளவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com