பகுதி - 449

சொல்லுக்கோ மனத்துக்கோ எட்டாததும்

பதச் சேதம்

சொற் பொருள்

சுட்டது போல் ஆசை விட்டு உலக ஆசார துக்கம் இலா ஞான சுகம் மேவி

 

உலக ஆசார: உலகத்தின் வாழ்க்கை முறை;

சொல் கரண(ம்) அதீத நிற்குணம் ஊடாடும் சுத்த நிராதார வெளி காண

 

கரணம்: மனம்; அதீத: கடந்த; நிற்குணம்: குணமற்ற, குணங்களைக் கடந்த; நிராதார: சார்பற்ற;

மொட்டு அலர் வாரீச சக்ர சடாதார முட்டவும் மீது ஏறி மதி மீதாய்

 

மொட்டு அலர்: மொட்டுகள் மலர்ந்த; வாரீச: தாமரை; சக்ர சடாதார: சக்கரங்களாகிய ஆறு ஆதாரங்கள்; முட்டவும் மீது ஏறி: அத்தனையையும் கடந்து; மதி மீதாய்: சந்திரகலையாகிய அமிர்த நிலைக்கும் மேலாய்;

முப்பதும் ஆறு ஆறும் முப்பதும் வேறான முத்திரையாம் மோனம் அடைவேனோ

 

முப்பதும்: முப்பதுடன்; ஆறுஆறும்: முப்பத்தாறும்; முப்பதும்: (இவற்றோடு) முப்பதும்—ஆக 30+36+30= 96 தத்துவங்கள்; முத்திரையாம்: அடையாளமாகும்;

எட்ட ஒணா வேதனத்தோடு கோ கோ என பிரமா ஓட வரை சாய

 

எட்ட ஒணா: அடைய முடியாத, அளவில்லாத; வேதனத்தோடு: வேதனையோடு, துன்பத்தோடு; வரை சாய: கிரெளஞ்ச மலை சாய;

எற்றிய ஏழு ஆழி வற்றிட மாறு ஆய எத்தனையோ கோடி அசுரேசர்

 

எற்றிய: (அலைகள்) எற்றுகிற, எழுகிற; ஆழி: கடல்; மாறுஆய: பகைவர்களான;

பட்டு ஒரு சூர் மாள விக்ரம வேல் ஏவு பத்து இரு தோள் வீர தினை காவல்

 

பட்டு: இறந்து; ஒரு=ஒப்பற்ற, ஒருசூர்: ஒப்பற்ற சூரன்; விக்ரம வேல்: பராக்கிரமம் நிறைந்த வேல்; பத்திரு தோள்: பத்தும் இரண்டும்=பன்னிரண்டு தோள்;

பத்தினி தோள் தோயும் உத்தம மாறாது பத்தி செய் வான் நாடர் பெருமாளே.

 

மாறாது பத்தி செய் வானாடர்: மாறுதல் இல்லாத பக்தியைச் செய்யும் தேவர்கள்;

சுட்டதுபோல் ஆசை விட்டு... சுடுகின்ற பொருளைத் தொட்ட கை, சட்டென்று எப்படி விலகுகிறதோ அப்படி ஆசை (என்னும் கொதிகலத்தை) உதறியெறிந்து;

உலக ஆசார துக்கமிலா ஞான சுகமேவி... உலக வாழ்க்கை முறையால் ஏற்படுகின்ற துன்பங்கள் இல்லாததான ஞான சுகநிலையை அடைந்து;

சொற்கரண அதீத நிற்குணம் ஊடாடு சுத்த நிராதார வெளிகாண... சொல்லுக்கோ மனத்துக்கோ எட்டாததும்; குணங்களற்றதும்; பரிசுத்தமானதும்; சார்புநிலையில் நில்லாததுமான பரவெளியைக் கண்டு;

மொட்டு அலர் வாரீச சக்ர சட் ஆதார முட்டவுமீதேறி மதிமீதாய்... மொட்டு விரிந்த தாமரைகளாக விளங்குகின்ற ஆறு ஆதாரச் சக்கரங்கள் அனைத்தின் மீதும் ஏறி; அவற்றைக் கடந்து இருப்பதான (அமிர்தம் ததும்புவதான) சந்திர கலைக்கும் மேலானதான,

முப்பதும் ஆறாறு முப்பதும்வேறான முத்திரையா மோனம் அடைவேனோ... தொண்ணூற்றாறு (விளக்கத்தை மேலே பதச் சேதத்தில் காணவும்) தத்துவங்களுக்கும்* மேற்பட்டதான அடையாள முத்திரையாகிய மோன நிலையை அடியேன் அடைவேனோ. (அடைய வேண்டும்).

[* தொண்ணூற்றாறு தத்துவங்கள்: அகத் தத்துவங்கள் 36 (ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5)

பூதங்கள் ஐந்து.  ஒவ்வொன்றுக்கும் உள்ள தன்மைகள் ஐந்தைந்து.  ஆக 25

புறத் தத்துவங்கள் 35 (வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4)]

எட்டவொணா வேதனத்தொடு கோ கோவெனப்பிரமா ஓட வரைசாய... அளவுகடந்த வலியோடு பிரமன் கோகோவென்று கூக்குரலிட்டு ஓடும்படியும்; கிரெளஞ்ச மலை சாய்ந்து விழும்படியும்;

எற்றிய ஏழாழி வற்றிட மாறாய எத்தனையோ கோடி யசுரேசர் பட்டு ஒருசூர் மாள... அலைகள் புரள்கின்ற ஏழுகடல்களும் வற்றிப் போகும்படியும்; பகைமைகொண்டவர்களான எண்ணற்ற கோடி அசுரர்களும் அவர்களுடைய தலைவகர்களும் அழியும்படியும்; ஒப்பற்ற சூரன் மாயும்படியும்,

விக்ரம வேல் ஏவு பத்திருதோள் வீர... பராக்கிரமம் நிறைந்ததான வேலாயுதத்தை வீசிய பன்னிரு தோள்கொண்ட வீரனே!

தினைகாவல் பத்தினிதோள் தோயும் உத்தம! மாறாது பத்திசெய் வான் நாடர் பெருமாளே.... தினைப்புனத்தைக் காத்த தூயவளான வள்ளி தோய்கின்ற தோள்களை உடையவனே! என்றும்  மாறாத பக்தியைக் கொண்டிருக்கும் அமரலோகத்து தேவர்களுடைய பெருமாளே!

சுருக்க உரை

பொறுக்க முடியாத வலியோடு பிரமன் ஓடும்படியாகவும்; கிரெளஞ்ச பர்வதம் சாய்ந்து விழும்படியாகவும்; அலைகள் வீசுவதான ஏழு கடலும் வற்றிப் போகும்படியும்; எண்ணிலடங்காத கோடிகளாகப் பகைமைகொண்டு எதிர்வந்த அசுரர்களும் அவர்களுடைய தலைவர்களும் அழியும்படியாகவும்; ஒப்பற்ற சூரன் மாயும்படியாகவும் பராக்கிரமம் நிறைந்த வேலாயுதத்தை வீசிய பன்னிரு தோளனே!  தினைப்புனத்தைக் காத்தவளும் தூயவளுமான வள்ளி தோய்கின்ற தோள்களை உடையவனே!  மாறாத பக்தியைக் கொண்டிருக்கும் தேவர்களுடைய பெருமாளே!

கொதிக்கின்ற பொருளை எடுக்கின்ற கை, தன்னையறியாமல் அதை வீசியெறிவதைப் போல, ஆசையென்னும் சுடுகலத்தை உதறித் தள்ளி; உலகின் வாழ்க்கை முறைகளால் ஏற்படும் துன்பங்கள் இல்லாத ஞானசுக நிலையை அடைந்து; சொல்லுக்கும் மனத்துக்கம் அப்பாற்பட்டதும்; குணங்களைக் கடந்ததும்; பரிசுத்தமானதும்; சார்பற்றதுமான பரவெளியை காண்பதற்காக ஏறப்படும் மலர்ந்த தாமரைகளான ஆறு ஆதாரச் சக்கரங்களைக் கடந்து; சந்திரகலையின் அமிர்தம் பொங்குகின்ற நிலைக்கும் மேற்பட்டதும்; தொண்ணூற்றாறு வகையான தத்துவங்களுக்கும் வேறுபட்டதுமான அடையாள முத்திரையாகிய மோன நிலையை அடியேன் எய்தப்பெற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com