பகுதி - 450

இன்றைய பாடல் திருவருணைத் தலத்துக்கானது

திருப்புகழில் சில அகத்துறைப் பாடல்கள் இடம்பெற்றிருப்பதைப் பார்த்திருக்கிறோம். 

‘உன்மீது எழுந்த காதலால் துன்புறும் இந்தப் பெண்ணுக்கு அருள்செய்வாய்’ என்பதை ஒத்து அந்தப் பெண்ணுடைய தாய் வேண்டிக் கொள்வதாக அமைந்திருக்கும்.  காதல் கொண்ட பெண்ணே நேரடியாக இறைவனிடம் கோரிக்கை விடுப்பதுபோன்ற பாவனையில் செய்யப்பட்ட சில பாடல்களும் ஒன்று.  பொதுப் பாடல்கள் வரிசையில் இடம்பெறும் ‘நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே’ என்று தொடங்கும் பாடலும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.  இன்றைய பாடல் திருவருணைத் தலத்துக்கானது.  இதுவும் நாயக-நாயகி பாவத்தில் முருகன்மேல் காதல்கொண்ட பெண் பாடுவதான கருத்தில் இயற்றப்பட்டதுதான்.  நாம் முன்பே சொன்னதைப் போல, இத்தகைய பாடல்களில் முருகன் தலைவனென்றால், தலைவியாக இடம்பெறுவது அனைத்து அடியார்களும்தான்.

அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒவ்வொரு மடக்கிலும் முதல்சீரின் மூன்றாமெழுத்தும் இரண்டாம் சீரின் முதலெழுத்தும் நெடில்.  மூன்றாவது சீரில் ஒரு வல்லொற்றும் அதைத் தொடர்ந்து மெல்லொற்றும் பயில்கின்றன.

தனதானன தான தனத்தந்                 தனதானா
      தனதானன தான தனத்தந்           தனதானா

இமராஜனி லாவதெ றிக்குங்               கனலாலே
         இளவாடையு மூருமொ றுக்கும்   படியாலே
சமராகிய மாரனெ டுக்குங்                 கணையாலே
         தனிமானுயிர் சோரும தற்கொன் றருள்வாயே
குமராமுரு காசடி லத்தன்                 குருநாதா
      குறமாமக ளாசைத ணிக்குந்         திருமார்பா
அமராவதி வாழ்வம ரர்க்கன்               றருள்வோனே
      அருணாபுரி வீதியி னிற்கும்          பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com