பகுதி - 452

எனக்கென்றே அமைந்திருக்கும் சிறப்பான

‘எனக்கென்றே அமைந்திருக்கும் சிறப்பான வழியில் அந்தப் பெரிய பொருள் நிரம்பித் தங்கும்படியாகத் தொடுக்கப்படும் தமிழ்ச் சொற்களைத் தந்து, இப்பொழுதே என்னை ஆண்டருள்வாயாக’ என்று இறைவனிடத்திலே சற்று அழுத்தமாகவும் உரிமையாகவும் அதட்டலாகவும் கோருகின்ற இந்தப் பாடல் திருச்செந்தூருக்கானது. 

சந்த அமைப்பில், நம்முடைய 444ம் தவணையில் இடம்பெற்றுள்ள ‘பெருக்கச்சஞ் சலித்துக்கந்’ என்று தொடங்கும் திருச்செந்தூர்த் தலத்துக்கான பாடலை ஒத்தது.  இந்த சந்த அமைப்பிலுள்ள நுட்பத்தை மேலும் பார்ப்போம்.  அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகள், ஒவ்வொரு சீரிலும் மூன்றாவது, ஐந்தாவது எழுத்துகள் வல்லொற்று; கடைசியாக வரும் எழுத்து மெல்லொற்று என்று கலந்து நடக்கும் சந்தம் என்று நாம் முன்னரேயே குறிப்பிட்டிருந்ததோடு, ஒவ்வொரு சீரையும் ஒற்றெழுத்து உட்பட எண்ணிப் பார்த்தால், ஒவ்வொரு சீரும் (ஒற்றையும் சேர்த்து) ஏழே ஏழு எழுத்துகளால் அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.  நறுக்கி எடுத்ததைப் போன்ற கறாரான இந்த அமைப்பு முறை ‘பெருக்கச்சஞ் சலித்துக்கந்’ என்ற பாடலுக்கும் பொருந்தும்.  இதே சந்த அமைப்பில் வேறு சில பாடல்களும் உள்ளன.

தனத்தந்தத் தனத்தந்தத்
      தனத்தந்தத் தனத்தந்தத்
      தனத்தந்தத் தனத்தந்தத்             தனதான

பருத்தந்தத் தினைத்தந்திட்
         டிருக்குங்கச் சடர்த்துந்திப்
         பருக்கும்பொற் ப்ரபைக்குன்றத்    தனமானார்
      பரிக்குந்துற் சரக்கொன்றத்
         திளைத்தங்குற் பலப்பண்பைப்
         பரக்குஞ்சக் கரத்தின்சத்           தியைநேரும்
துரைச்செங்கட் கடைக்கொன்றிப்
         பெருத்தன்புற் றிளைத்தங்குத்
         துணிக்கும்புத் தியைச்சங்கித்      தறியேனைத்
      துணைச்செம்பொற் பதத்தின்புற்
         றெனக்கென்றப் பொருட்டங்கத்
      தொடுக்குஞ்சொற் றமிழ்த்தந்திப்     படியாள்வாய்
தருத்தங்கப் பொலத்தண்டத்
         தினைக்கொண்டச் சுரர்க்கஞ்சத்
         தடத்துன்பத் தினைத்தந்திட்       டெதிர்சூரன்
      சமர்க்கெஞ்சிப் படித்துஞ்சக்
         கதிர்த்துங்கத் தயிற்கொண்டத்
         தலத்தும்பர்ப் பதிக்கன்புற்         றருள்வோனே
திருக்கஞ்சத் தனைக்கண்டித்
         துறக்கங்குட் டிவிட்டுஞ்சற்
         சிவற்கன்றப் பொருட்கொஞ்சிப்    பகர்வோனே
      செயத்துங்கக் கொடைத்துங்கத்
         திருத்தங்கித் தரிக்கும்பொற்
         றிருச்செந்திற் பதிக்கந்தப்         பெருமாளே.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com