பகுதி - 453

பருத்த யானைத் தந்தத்தைப் போல

பதச் சேதம்

சொற் பொருள்

பரு தந்தத்தினை தந்து இட்டு இருக்கும் கச்சு அடர்த்து உந்தி பருக்கும் பொன் ப்ரபை குன்ற தனம் மானார்

 

பரு: பருத்த; தந்து: காட்சி தந்து, போலத் தோற்றமளித்து; இட்டிருக்கும் கச்சு: அணிந்திருக்கின்ற கச்சு; உந்தி: தள்ளி; பொன் ப்ரபைக் குன்றம்: பொன்னொளியைக் கொண்ட மலை; மானார்: மான் போன்றோர், பெண்கள்;

பரிக்கும் துற் சரக்கு ஒன்ற திளைத்து அங்கு உற்பல பண்பை பரக்கும்  சக்கரத்தின் சத்தியை நேரும்

 

பரிக்கும்: தாங்கும் (பரிக்கை: தாங்குகை); துற்: கொடிய; சரக்கு: சரத்துக்கு (அத்துச் சாரியை கெட்டது); ஒன்ற: ஒத்ததாக; திளைத்து: விளங்கி; உற்பல: நீலோற்பல மலரின்; பண்பை: தன்மையை; பரக்கும்: விஸ்தரிக்கும், வெல்லும்; சக்கரத்தின்: சக்ராயுதத்தின்; சத்தியை: சக்திவேலை; நேரும்: ஒத்த;

துரை செங்கண் கடைக்கு ஒன்றி பெருத்த அன்பு உற்று இளைத்து அங்கு துணிக்கும் புத்தியை சங்கித்து அறியேனை

 

துரை: வேகம் (பிறவித் துரை துடைத்து ஆட்கொண்ட தொண்டர்பிரான்—சடகோபர் அந்தாதி 47ம் பாடல்); துணிக்கும்: அழிவடையும்; சங்கித்து: சந்தேகித்து;

துணை செம் பொன் பதத்து இன்புற்று எனக்கு என்று அப் பொருள் தங்க தொடுக்கும் சொல் தமிழ் தந்து இப்படி ஆள்வாய்

 

துணை(ச் செம்பொன் பதம்): துணை=இரண்டு; இப்படி: இந்த விதத்தில், இப்பொழுதே;

தரு தங்கு அப் பொலத்து அண்டத்தினை கொண்டு அ சுரர்க்கு அஞ்ச தட துன்பத்தினை தந்திட்டு எதிர் சூரன்

 

தரு: மரம், கற்பக விருட்சம்; பொலத்து அண்டத்தினை: பொன் உலகை (பொலம்: பொன்); அ சுரர்க்கு: அந்த தேவர்களுக்கு; அஞ்ச: அச்சம் ஏற்பட; தடத் துன்பம்: பெருந்துன்பம்;

சமர்க்கு எஞ்சி படி துஞ்ச கதிர் துங்கத்து அயில் கொண்டு அத்தலத்து உம்பர் பதிக்கு அன்புற்று அருள்வோனே

 

சமர்க்கு: போருக்கு, போரில்; எஞ்சி: தாழ்ந்து; படி: பூமி; துஞ்ச: தூங்க, இறக்க; துங்கத்து: தூய்மையை உடைய; அயில்: வேல்; அத்தலத்து: அந்த உலகமான; உம்பர் பதி: தேவர் தலைவன், இந்திரன்;

திரு கஞ்சத்தனை கண்டித்து உற கம் குட்டி விட்டும் சத் சிவற்கு அன்று அ பொருள் கொஞ்சி பகர்வோனே

 

திரு: அழகிய; கஞ்சத்தனை: (கஞ்சம்=தாமரை) தாமரையில் அமர்ந்தவனான பிரமனை; உற: அழுத்தமாக; கம்: கழுத்து, தலை; அப்பொருள்: பிரணவத்தின் பொருள்;

செய துங்க கொடை துங்க திரு தங்கி தரிக்கும் பொன் திருச் செந்திற் பதி கந்த பெருமாளே.

 

செயத் துங்க: வெற்றியில் தூய்மை; கொடைத்துங்க: கொடையில் தூய்மை; திருத்தங்கி: திருமகள் (செல்வம்) நிலைபெற்றிருக்கும்;  பொன்: அழகிய;

பருத் தந்தத்தினைத் தந்து இட்டு இருக்கும் கச்சு அடர்த்து உந்திப் பருக்கும் பொன் ப்ரபை குன்றத் தனம் மானார்... பருத்த யானைத் தந்தத்தைப் போலக் காட்சி தந்து; அணிந்திருக்கும் கச்சைத் தள்ளி விலக்குவதான பொன்னொளி வீசுகின்ற மலையை ஒத்த தனங்களை உடைய பெண்களுடைய (இதை இரண்டாமடியில் வரும் ‘துரைச் செங்கண் கடை’ என்பதோடு கூட்டிக் கொண்டு, ‘பெண்களுடைய சிவந்த கடைக் கண்கள்’ என்று கொள்ளவேண்டும்);

பரிக்கும் துற் சரக்கு ஒன்றத் திளைத்து அங்கு உற்பலப் பண்பை பரக்கும்... கொடுமையைத் தாங்கியிருக்கிற அம்பை ஒத்து விளங்கி; நீலோற்பலத்தின் தன்மையையும் வெல்லக்கூடியதும்;

சக்கரத்தின் சத்தியை நேரும் துரைச் செங்கண் கடைக்கு ஒன்றி... (திருமாலுடைய) சக்ராயுதத்தைப் போலவும் (முருகனுடைய) சக்தியாயுதமான வேலைப் போலவும் வேகம் நிறைந்ததான் சிவந்த கடைக்கண் பார்வையில் பொருந்தி;

பெருத்த அன்பு உற்று இளைத்து அங்குத் துணிக்கும் புத்தியைச் சங்கித்து அறியேனை... (அவர்கள் மீது) பெரிய அன்பை வைத்தும்; இளைத்தும் அங்கே அழிந்து போவதான இந்த புத்தியைச் (சற்றேனும்) சந்தேகப்பட்டு அறியாதவனான என்னை (ஐயம் கொள்வது, தெளிவடைவதன் முதல் நிலை.  இப்படிப்பட்ட புத்தியை சந்தேகித்தால் தெளிவடையலாம்.  அவ்வாறு சந்தேகப்படாததால், ‘தெளிவற்றவனான என்னை’ என்று பொருள் கொள்ளவேண்டும்.)

துணைச் செம் பொன் பதத்து இன்புற்று எனக்கு என்று அப் பொருள் தங்கத் தொடுக்கும் சொல் தமிழ்த் தந்து இப்படி ஆள்வாய்... செம்பொன்னை ஒத்த உன்னுடைய இரண்டு பாதங்களிலும் (தங்கி) அடியேனை இன்புறச் செய்து; எனக்கென்றே (உள்ளதான தனிப்பட்ட முறையில்) உயர்ந்ததான அப்பொருள் தங்கும்படியாகத் தொடுப்பதற்கான தமிழ்ச் சொற்களைத் தந்து என்னை இப்போதே ஆண்டுகொண்டருள வேண்டும்.

தருத் தங்கு அப் பொலத்து அண்டத்தினைக் கொண்டு அச் சுரர்க்கு அஞ்சத் தடத் துன்பத்தினைத் தந்திட்டு எதிர் சூரன்... கற்பக மரங்கள் இருப்பதான அந்தப் பொன்னுலகத்தைக் கவர்ந்துகொண்டும்; அந்த தேவர்களை அஞ்சச் செய்தும்; பெரிய அளவில் அவர்களுக்குத் துன்பத்தைத் தந்தும் உன்னைப் போரில் எதிர்த்து வந்த சூரன்,

சமர்க்கு எஞ்சிப் படித் துஞ்சக்... போரிலே தாழ்வடைந்து, தோற்று, இறந்து தரையிலே கிடக்குமாறு;

கதிர்த் துங்கத்து அயில் கொண்டு அத் தலத்து உம்பர்ப் பதிக்கு அன்புற்று அருள்வோனே...ஒளியும் தூய்மையும் கொண்டதான வேலாலே (சூரனை மடியச்செய்து, அதனால்) விண்ணுலகோர் தலைவனான இந்திரனிடம் அன்புகொண்டு அருளியவனே!

திருக் கஞ்சத்தனைக் கண்டித்து உறக் கம் குட்டி விட்டும் சத் சிவற்கு அன்று அப் பொருள் கொஞ்சிப் பகர்வோனே... அழகிய தாமரை மலரில் வீற்றிருப்பவனாகிய பிரமனைக் கண்டித்து; தலையில் அழுத்தமாகக் குட்டிவிட்டு; (அவன் சொல்லாததான) பிரணவத்தின் அந்தப் பொருளை சிவபெருமானுக்கு அன்புடன் எடுத்துச் சொன்னவனே!

செயத் துங்கக் கொடைத் துங்கத் திருத் தங்கித் தரிக்கும் பொன் திருச்செந்திற் பதிக் கந்தப் பெருமாளே.... வெற்றித் தூய்மையும் கொடைத் தூய்மையும் செல்வமும் நிலைபெற்றிருப்பதான அழகிய திருச்செந்தூர்பதியில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே!

சுருக்க உரை

கற்பக மரங்கள் நிறைந்த பொன்னுலகத்தைக் கவர்ந்துகொண்டும்; அங்குள்ள தேவர்கள் அஞ்சுமாறு அவர்களுக்குப் பெரிய துன்பத்தை விளைத்தும் உன்னைப் போரிலே எதிர்த்துவந்த சூரன், போரிலே தாழ்வுபட்டுத் தரையிலே விழுந்து இறக்கும்படியாக, ஒளியும் தூய்மையும் கொண்ட வேலாலே அவனை வீழ்த்தி; தேவர் தலைவனான இந்திரனிடத்திலே அன்புகொண்டு அருளியவனே!  தாமரைப் பூவிலே வீற்றிருப்பனான பிரமனைக் கண்டித்தும்; அவன் தலையிலே அழுத்தமாகக் குட்டியும்; (அவனாலே சொல்லமுடியாமல் போன) பிரணவத்தின் பொருளை சிவபெருமானுக்கு அன்போடு உபதேசித்தவனே!  தூய வெற்றியும் தூய கொடையும் செல்வமும் எப்போதும் நிலைத்திருக்கின்ற திருச்செந்தூர்ப் பதியிலே வீற்றிருக்கின்ற கந்தப் பெருமாளே!

யானையின் பருத்த தந்தங்களைப் போன்றவையும்; அணிந்திருக்கும் கச்சையும் மீறி எழுகின்றவையுமான தனங்களை உடைய பெண்களின்—

திருமாலுடைய சக்கரப்படையையும் முருகனுடைய சக்தியாயுதத்தையும்போல வேகம் கொண்ட சிவந்த கடைக்கண் பார்வைக்கு வசப்பட்டும் அவர்கள்மேல் அன்புகொண்டும் இளைத்து அழிவுபடுவதான இந்த புத்தியை ஒருபோதும் சந்தேகித்து அறியாதவனான என்னை,

உன்னுடைய இரண்டு பொற்பாதங்களிலும் தங்கிக் கிடப்பதால் இன்புறச் செய்து; (வேறு யாருக்கும் கிட்டாத) எனக்கென்றே உள்ள சிறப்பான வழியிலே பெரிய பொருட்களைக் கொண்ட தமிழ்ச் சொற்களை உன்மீது பாடல்களைத் தொடுப்பதற்காகத் தந்து என்னை இப்போதே ஆண்டுகொண்டருள்வாயாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com