பகுதி - 454

திருத்தணிகைத் தலத்துக்கான இந்தப் பாடல்

திருத்தணிகைத் தலத்துக்கான இந்தப் பாடல் ‘நற்றாயிரங்கல்’ என்ற துறையைச் சேர்ந்தது.  இறைவனிடத்திலே காதல்வசப்பட்ட பெண்ணொருத்தி தவிக்கின்ற நிலையை அவளுடைய தாய் இறைவனிடத்திலே எடுத்துச் சொல்லி, ‘இவளுக்கு அருளவேண்டும்’ என்ற பொதுக்கருத்தில் இத்தகைய திருப்புகழ்ப் பாக்கள் அமையும்.  இந்தப் பாடலின் வேண்டுகோளாகிய ‘பஞ்சொன்றிய மயில் நெஞ்சொன்றிய அழல் பொன்றும் தனிமையை நினையாயோ’ என்பதை ஒரு பெண் படுகின்ற வேதனையாகவும் கொள்ளலாம்; ஆதரவற்று, துன்பத்தில் வாடி மனமெல்லாம் வேதனையால் துடிக்கும் அடியாரிடத்திலே கருணைச் செய்யச்சொல்லிக் கோருவதாகவும் கொள்ளலாம்.  இத்தகைய எல்லாத் திருப்புகழ்ப் பாக்களுக்கும் இது பொருந்தும் என்பதைச் சொல்லியிருக்கிறோம்.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகள் உள்ள பாடல்.  இதில் ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் இரண்டாம், நான்காம் எழுத்துகள் மெல்லொற்றாக அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.  நெட்டெழுத்து கலக்காமல் நடக்கின்ற சந்தம், இந்தப் பாடலில் ஊடாடும் மனோநிலைக்குத் தக ஒலிப்பதையும் கவனிக்கலாம்.  நெட்டெழுத்துகள் அதிகமாகக் கலக்கும்போது அது மன எழுச்சியைத் தூண்டுவதாக இருக்கும்.  இங்கே தணித்து ஒலிக்கிறது.

தந்தந் தனதன தந்தந் தனதன
      தந்தந் தனதன                      தனதான
 
வங்கம் பெறுகட லெங்கும் பொருதிரை
         வந்துந் தியதிரு                  மதனாலே
      வஞ்சம் பெறுதிட நெஞ்சன் தழலுற
         வஞ்சம் பதும்விடு                மதனாலே
பங்கம் படுமென தங்கந் தனிலுதி
         பண்பொன் றியவொரு            கொடியான
      பஞ்சொன் றியமயில் நெஞ்சொன் றியெயழல்
         பொன்றுந் தனிமையை           நினையாயோ
தெங்கந் திரளுட னெங்குங் கதலிகள்
         சென்றொன் றியபொழி           லதனூடே
      தெந்தெந் தெனதென என்றண் டுறஅளி
         நின்றுந் திகழ்வொடு              மயிலாடப்
பொங்குஞ் சுனைகளி லெங்குங் குவளைகள்
         என்றும் புகழ்பெற                மலரீனும்
      பொன்றென் றணிகையில் நின்றங் கெழுபுவி
         யென்றுஞ் செயவல              பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com