பகுதி - 455

கூட்டமான தென்னை மரங்களும்

பதச் சேதம்

சொற் பொருள்

வங்கம் பெறு கடல் எங்கும் பொரு திரை வந்து உந்தி அதிரும் அதனாலே

 

வங்கம்: கப்பல்; பெறுகடல்: செல்லப் பெறுகின்ற கடல்; பொரு திரை: மோதுகின்ற அலைகள்;

வஞ்சம் பெறு திட நெஞ்சன் தழல் உற அஞ்சு அம்பு அதும் விடு மதனாலே

 

 

பங்கம் படும் எனது அங்கம் தனில் உதி பண்பு ஒன்றிய ஒரு கொடியான

 

பங்கம் படு: நாணம், அவமானம் அடைகின்ற; எனது அங்கம் தனில்: என் அங்கமாகிய வயிற்றில்; உதி: உதித்த;

பஞ்சு ஒன்றிய மயில் நெஞ்சு ஒன்றியே அழல் பொன்றும் தனிமையை நினையாயோ

 

பஞ்சு ஒன்றிய மயில்: பஞ்சை ஒத்த மயில்போன்ற; நெஞ்சு ஒன்றியே அழல்: நெஞ்சில் திரள்கின்ற நெருப்பால்; பொன்றும்: அழியும்;

தெங்கம் திரளுடன் எங்கும் கதலிகள் சென்று ஒன்றிய பொழில் அதனூடே

 

தெங்கம் திரள்: தென்னை மரக்கூட்டம்; கதலி: வாழை; சென்று ஒன்றிய: சென்று பொருந்திய

தெந்தெந் தெனதென என்று அண்டு உற அளி நின்றும் திகழ்வோடு மயில் ஆட

 

அண்டு உற: (அண்டு: அண்டுதல், நெருங்குதல்) நெருக்கமான கூட்டமாக வந்து; அளி: வண்டு; திகழ்வோடு: திகழ்ச்சியோடு, பிரகாசமாக;

பொங்கும் சுனைகளில் எங்கும் குவளைகள் என்றும் புகழ் பெற மலர் ஈனும்

 

 

பொன் தென் தணிகையில் நின்று அங்கு எழு புவி என்றும் செய வ(ல்)ல பெருமாளே.

 

பொன்: அழகிய;

வங்கம் பெறுகட லெங்கும் பொருதிரை வந்து உந்தி அதிரும் அதனாலே... கப்பல்கள் செல்லப்பெற்ற கடலெங்கிலும் மோதுகின்ற அலைகள் கரைக்கு வந்து வீசி ஒலியெழுப்புவதாலும்;

வஞ்சம் பெறு திட நெஞ்சன் தழலுற அஞ்சுஅம்பு அதும்விடு மதனாலே... வஞ்சமும் திடமும் நிறைந்த மனத்தனும்; நெருப்பை ஒத்த ஐந்து மலர்க் கணைகளையும் எய்பவனுமான மன்மதனாலும்;

பங்கம் படுமெனது அங்கந் தனில் உதி பண்பொன்றிய ஒரு கொடியான... நாணமடைகிறவளும்; என் வயிற்றில் பிறந்தவளும்; நற்குணம் நிரம்பியவளும்; கொடிபோன்றவளும்;

பஞ்சொன்றிய மயில் நெஞ்சொன்றியெ அழல் பொன்றுந் தனிமையை நினையாயோ... பஞ்சைப் போல மென்மையானவளும்; மயில் போன்றவளுமான என்னுடைய மகளின் உள்ளத்திலே திரண்டு எழுகின்ற துன்பம் என்னும் தீயாலே அவள் ஆதரவற்ற தனியளாக அழிந்துபோவதைக் கருத மாட்டாயோ! (கருத வேண்டும்).

தெங்கந் திரளுடன் எங்குங் கதலிகள் சென்றொன்றியபொழில் அதனூடே... தென்னை மரக்கூட்டங்களோடு எல்லா இடங்களிலும் வாழைகள் அமைந்து பொருந்தி சோலையினுள்ளே,

தெந்தெந் தெனதென என்று அண்டுற அளி நின்றும் திகழ்வொடு மயிலாட... ‘தெந்தெந் தெனதென’ என்ற ஒலியோடு கூட்டமாக நெருங்கிச் சூழ்ந்து  என்று நெருங்கி வந்து நின்று வண்டுகள் பாடவும், திகழ்ச்சியோடு மயில் ஆடவும்;   

பொங்குஞ் சுனைகளில் எங்குங் குவளைகள் என்றும் புகழ்பெற மலர் ஈனும்... நீர் பொங்குகின்ற சுனைகளிலெல்லாம் குவளைகள் எப்போதும் போற்றத் தக்க மலர்களைத் தருவதும்;

பொன் தென் தணிகையில் நின்றங்கு எழுபுவியென்றுஞ் செயவல பெருமாளே… அழகான திருத்தணிகையிலே எழுந்தருளியவனே!  ஏழு உலகங்களையும் எப்போதும் படைக்கவல்ல பெருமாளே!

சுருக்க உரை

கூட்டமான தென்னை மரங்களும் வாழையும் நெருங்கி அடர்ந்திருக்கும் சோலைகளில் நெருக்கமாகச் சூழ்ந்துகொண்டுள்ள வண்டுகள் பலவிதமான ஓசைககளை எழுப்ப; மயில்கள் திகழ்ச்சியோடு ஆட; எப்போதும் நீர் பெருகும் சுனைகளிலே உள்ள குவளைகள் பூக்க விளங்குகின்ற அழகிய தென் திருத்தணிகையில் வீற்றிருப்பவனே!  ஏழு உலகங்களையும் படைக்க வல்ல பெருமாளே!

கப்பல்கள் செல்கின்ற கடலில் எழுந்து வீசுகின்ற அலைகள் எழுப்பும் ஓசையாலும்; வஞ்சகமும் உறுதியான மனமும் உள்ள மன்மதன் வீசுகின்ற மலர்க் கணைகளாலும், என் வயிற்றில் பிறந்தவளான இந்த மெல்லிய தன்மையை உடைய பெண் நாணமுற்று உள்ளத்தில் திரண்டிருக்கும் துன்பத் தீயால் வாட்டப்படுகிறாள். இவளை நீ கண்பார்த்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com