பகுதி - 460

பாலைவனத்திலே வற்றிப்போன மரமானது

‘முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே’ என்ற அதே ஈற்றடியையும் சந்தத்தையும் கொண்ட இந்தப் பாடல் திருச்செங்கோடு தலத்துக்கானது.  இதே சந்த அமைப்பைக் கொண்ட பாடல்களில் ஒன்றை 456ம் தவணையில் பார்த்தோம்.  ‘வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று’ என்றார் வள்ளுவர்.  பாலைவனத்திலே வற்றிப்போன மரமானது தளிர்த்ததைப் போன்று என்று அன்பு அகத்தில்லா உயிர் வாழ்க்கையை வருணித்தார்.  இங்கே அருணகிரியார் முருகனை, ‘பாலைவனத்தில் நிற்கின்ற கற்பக விருட்சம்’ என்று பாடுகிறார். 

அமைப்பு முறையில் இதுவும் அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகளைக் கொண்டது; ஒவ்வொரு சீரிலும் இரண்டாமெழுத்து வல்லொற்று; மூன்றாமெழுத்து நெடில்.  ஒவ்வொரு ஆறாம் சீரிலும் இரண்டு, நான்கு ஆகிய இரண்டெழுத்துகளும் வல்லொற்று.  முதல் சீரில் இரண்டாமெழுத்து வல்லொற்றாக இல்லாமல் இடையொற்றாக அமைந்தும், வல்லொற்று மூன்றாம் எழுத்தாக இருப்பதையும் பார்க்கலாம்.  இடையின மெய்யெழுத்துகள் ஒலிப்பு முறையில் ஓசை பெறுவதில்லை என்பதால் இது தாள அமைப்பின்படி விலக்குப் பெறுகிறது.  சொல்லும்போது ‘மெச்சார் வற்றே’ என்பதை ஒத்து ஒலிக்கும்.  இதைப் போலவே முதலடியின் மடக்கில் ‘தையர்மேலே’ என்பதிலுள்ள ஐகாரம் குறுகி (ஐகாரக் குறுக்கமாகி), ‘தயர்மேலே’ என்பதையொத்து ஒலிக்கும்.

தத்தா தத்தா தத்தா தத்தா
      தத்தா தத்தா தத்தா தத்தா           தனதான

மெய்ச்சார் வற்றே பொய்ச்சார் வுற்றே
         நிச்சார் துற்பப்                    பவவேலை
      விட்டே றுப்போ கொட்டா மற்றே
         மட்டே யத்தத்                   தையர்மேலே
பிச்சா யுச்சா கிப்போ ரெய்த்தார்
         பத்தார் விற்போற்                கழல்பேணிப்
      பிற்பால் பட்டே நற்பால் பெற்றார்
         முற்பா லைக்கற்                 பகமேதான்
செச்சா லிச்சா லத்தே றிச்சே
         லுற்றா ணித்துப்                  பொழிலேறுஞ்
      செக்கோ டைக்கோ டுக்கே நிற்பாய்
         நித்தா செக்கர்க்                  கதிரேனல்
முச்சா லிச்சா லித்தாள் வெற்பாள்
         முத்தார் வெட்சிப்                புயவேளே
      முத்தா முத்தீ யத்தா சுத்தா
         முத்தா முத்திப்                  பெருமாளே.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com