பகுதி - 609

சிவந்த சொரூபத்தை உடையவனே
பகுதி - 609

பதச் சேதம்

சொற் பொருள்

அரி மருகோனே நமோஎன்று அறுதி 
இலானேநமோ என்று அறு 
முகவேளே நமோ என்று உனபாதம்

 

அறுதி: முடிவு (அந்தம்); உனபாதம்: உன் பாதம்;

அரகர சேயே நமோ என்றுஇமையவர் 
வாழ்வேநமோ என்று அருணசொரூபா நமோ
என்றுஉளது ஆசை

 

அருண சொரூபா: சிவந்த சொரூபத்தை உடையவனே;

பரிபுர பாதா சுரேசன் தருமகள் 
நாதா அராவின் பகை மயில் 
வேலாயுதாஆடம்பர நாளும்

 

பரிபுர பாதா: சிலம்பணிந்த பாதனே; சுரேசன் தரு மகள்: இந்திரன் மகள்—தேவானை; ஆடம்பர: கோலாகலனே;

பகர்தல் இலா  தாளைஏதும் சிலது 
அறியா ஏழைநான் உன் பதி பசு பாச 
உபதேசம்பெற வேணும்

 

பகர்தல் இலா: சொல்லாத, துதிக்காத;

கர தல(ம்) சூலாயுதா முன்சலபதி 
போல் ஆரவாரம் கடின சுரா பானசாமுண்டியும் ஆட

 

கரதல சூலாயுதா: முருகனுக்குச் சூலாயுதமும் உண்டு; சலபதி: கடல்; சுராபான: கள் அருந்தும்; சாமுண்டி: துர்க்கை;

கரி பரி மேல் ஏறுவானும்செய செய 
சேனாபதீ என் களமிசை தான் ஏறியே
அஞ்சிய சூரன்

 

கரிபரி: (ஐராவத) யானையாகிய வாகனம் (பரி இங்கே வாகனத்தைக் குறிக்கிறது—ஆடும்பரி என்று மயிலைச் சொல்வதைப்போல்); கரிபரி ஏறுவான்: இந்திரன்; சேனாபதீயென்: சேனாபதி என்று;

குரல் விட நாய் பேய்கள்பூதம் 
கழுகுகள் கோமாயுகாகம் குடல் 
கொளவேபூசலாடும் பல தோளா

 

குரல்விட: கூச்சலிட; கோமாய்: நரி; பூசலாடும்: போரிடும்; பல தோளா: பலங்கொண்ட தோளனே;

குட திசை வார் ஆழிபோலும் படர் 
நதி காவேரி சூழும்குளிர் வயலூர் 
ஆரமேவும் பெருமாளே.

 

குடதிசை: மேற்கு திசை; வாராழி: பெருங் கடல்;


அரிமருகோனே நமோவென்று அறுதியிலானே நமோவென்று அறுமுக வேளேநமோவென்று உனபாதம்... திருமால் மருகனே நமோ என்றும்; அந்தமில்லாதவனே நாமோ என்றும்; ஆறுமுக வேளே நமோ என்றும் உன்னுடைய பாதத்தில்,

அரகர சேயே நமோவென்று இமையவர் வாழ்வே நமோவென்று அருண சொரூபாநமோவென்று உளதாசை... அரகர என்றும் சேயே என்றும் துதித்தும்; தேவர்களுடைய செல்வமே நமோ என்றும்; சிவந்த மேனியனே நமோ என்றும் போற்றுவதற்கு எனக்கு ஆசை இருக்கிறது.

பரிபுர பாதா சுரேசன் தரு மகள் நாதா அராவின்பகைமயில் வேலாயுத ஆடம்பர... சிலம்பணிந்த பாதனே!  இந்திரனுடைய மகளான தேவானையின் நாதனே!  பாம்புக்குப் பகையான மயிலையும் வேலாயுதத்தையும் கொண்ட கோலாகலனே!

நாளும் பகர்தலிலா தாளை ஏதுஞ் சிலதறியா ஏழை நானுன் பதிபசு பாச உபதேசம் பெறவேணும்...தினந்தோறும் போற்றிப் பாடாத உன்னுடைய திருவடிகளைச் சிறிதேனும் அறியாத ஏழையாகிய நான், உன்னுடைய பதி, பசு, பாசம் (எனப்படும் நித்தியப் பொருள்களின் இலக்கணத்தைக் குறித்த) உபதேசத்தைப் பெறவேண்டும்.  (எனக்கு உபதேசித்து அருள வேண்டும்)

கரதல சூலாயுதா முன் சலபதி போல் ஆரவாரம் கடினசுராபான சாமுண்டியும் ஆட... கையிலே திரிசூலத்தை ஏந்தியவனே!* முன்னர் கடலைப் போன்ற பேரொலியோடு, கள்ளை அருந்தியவளான துர்க்கை ஆடவும்;  

(முருகனுடைய சூலாயுதத்தை ‘வடிக்கொள் சூலமும்’ (மதிக்கு நேரெனும்) என்றும்  ‘சூலம்வாள் தண்டு’ (காலனார் வெங்கொடும்—தவணை எண் 514) என்றும் பிற பாடல்களிலும் குறித்திருக்கிறார்.)

கரிபரி மேலேறுவானும் செயசெய சேனா பதீயென் களமிசை தானேறியே அஞ்சிய சூரன்குரல்விட...ஐராவதத்தை வாகனமாக உடைய இந்திரன், ‘ஜெயஜெய சேனாபதியே!’ என்று ஆரவாரம் செய்யவும்; போர்க்களத்துக்கு (நீ) வந்ததும் பயங்கொண்டவனான சூரன் கூக்குரலெழுப்பவும்;

நாய்பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகம் குடல்கொளவே பூசலாடும் பலதோளா... நாய்களும் பேய்களும் பூதங்களம் கழுகுகளும் நரிகளும் காகங்களும் (அரக்கர்களுடைய) குடலைப் பறித்துத் தின்னும்படியாகப் போரிட்ட பலம் வாய்ந்த தோள்களை உடையவனே!

குடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி சூழும் குளிர்வயலூர் ஆர மேவும் பெருமாளே... மேற்கு திசையிலிருந்து கடலைப் போலப் பெருகிவருகின்ற காவேரி சூழ்ந்திருப்பதும் குளிர்ச்சியானதுமான வயலூரில்  உளமார வீற்றிருக்கும் பெருமாளே!


சுருக்க உரை

சூலாயுதத்தைத் திருக்கரத்தில் ஏந்தியவனே!  கள்ளை உண்டும் கடல்போல ஆரவாரம் செய்துகொண்டும் துர்க்கை ஆடும் போர்க்களத்தில் நீ நுழைந்ததும் அச்சம் கொண்ட சூரன் கூக்குரலிட; ‘ஜய ஜய சேனாபதீ’ என்று ஐராவதத்தின் மீதமர்ந்தவனான இந்திரன் ஆரவாரிக்க; நாய்களும் பேய்களும் பூதங்களும் கழுகுகளும் நரிகளும் காக்கைகளும் போர்க்களத்தில் அரக்கர்களுடைய குடலைப் பறித்துத் தின்னும்படியாகப் போர்புரிந்த பலங்கொண்ட தோள்களை உடையவனே!  மேற்கிலே கடலைப்போலப் பெருகுகின்ற காவேரி சூழ்ந்ததும் குளிர்ச்சி பொருந்தியதுமான வயலூரில் வீற்றிருக்கும் பெருமாளே!

திருமால் மருகனே!  அந்தமில்லாதவனே!  ஆறுமுகனே! வேளே! அரகரா! சேயே! என்றெல்லாம் உன்னைப் போற்றித் துதிக்கும் ஆசையுடையவனாக இருக்கிறேன்.  சிலம்பணிந்த பாதனே!  தேவசேனை நாதனே! பாம்பின் பகையான மயிலையும் வேலையும் கொண்ட கோலாகலனே என்றெல்லாம் ஒருநாளும் நினைந்தறியாதவனும்; உன் தாளைச் சிறிதேனும் அறியாத ஏழையுமான எனக்கு உன்டைய திருவாயால் பதி, பசு, பாசம் பற்றி உபதேசித்து அருளவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com