பகுதி - 611

காரணமான துர்குணம்
பகுதி - 611

பதச் சேதம்

சொற் பொருள்

கருமமான பிறப்பு அறஒரு கதி காணாது எய்த்துதடுமாறும்

 

கருமமான: வினையின் பயனாக; எய்த்து: இளைத்து, மெலிந்து;

கலக காரண துற்குணசமயிகள் நானா வர்க்ககலை நூலின்

 

துற்குண: துர்குண; நானா வர்க்க: பலவிதமான; கலை நூல்: சாத்திரங்கள்;

வரும் அநேக விகற்பவிபரித மனோபாவத்துக்கு அரிதாய

 

விகற்ப: மாறுபாடு; விபரித: விபரீத, பொருந்தாத;

மவுன பூரித சத்தியவடிவினை மாயாமற்குபுகல்வாயே

 

பூரித: நிரம்பிய, நிறைந்த; மாயாமற்கு: மாயாமல் இருப்பதற்கு;

தரும வீம அருச்சுனநகுல சகாதேவர்க்குபுகலாகி

 

 

சமர பூமியில் விக்ரமவளை 
கொடு நாளோர்பத்தெட்டினில் 
ஆளும்

 

சமர பூமி: போர்க்களத்தில்; விக்ரம: வலிமை நிறைந்த; வளை: சங்கு—பாஞ்சஜன்யம்; பத்தெட்டினில்: பதினெட்டு (நாளில்);

குரு மகீதலம் முள் படஉளமது கோடாமல்க்ஷத்ரியர் மாள

 

குரு மகீதலம்: குருக்ஷேத்திரம்; முள்பட: பாழ்நிலமாக; கோடாமல்: கோணாமல், நெறிமுறையில் நின்று;

குலவு தேர் கடவுஅச்சுதன்
மருக குமாராகச்சி பெருமாளே.

 

 

கருமமான பிறப்பற ஒருகதி காணாது எய்த்துத் தடுமாறும்... வினைகளின் காரணமாக ஏற்படும் இந்தப் பிறப்பு (இறப்பு என்னும் தொடர்) தொலைவதற்கு ஒருவழியும் புலப்படாமல் இளைத்துத் தடுமாறுபவர்களும்;

கலக காரண துற்குண சமயிகள் நானா வர்க்கக் கலைநூலின்… குழப்பத்துக்குக் காரணமான துர்குணம் உடையவர்களான சமயவாதிகளுடைய பலவிதமான சாத்திர நூல்களில்,

வரும் அநேக விகற்ப விபரித மனோபாவத்துக்கு அரிதாய... சொல்லப்பட்டுள்ள பலவிதமான மாறுபாடுகளையும் பொருந்ததாத தன்மையை உடையதும், மனோபாவத்துக்கு எட்டாததுமான(வற்றை ஒழித்து),

மவுன பூரித சத்திய வடிவினை மாயா மற்குப் புகல்வாயே... மௌனத்தால் நிறைவடைந்ததும் சத்தியமானதுமான (உன்னுடைய) வடிவத்தை நான் இறப்பின்றி விளங்குவதற்காக உபதேசித்து அருளவேண்டும்.

தரும வீம அருச்சுன நகுல சகாதேவர்க்குப் புகலாகி... தருமன், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன்என்னும் ஐந்து பாண்டவர்களுக்கும் சரணளிப்பவனாகி, 

சமர பூமியில் விக்ரம வளைகொடு நாளோர் பத்தெட்டினிலாளும்... போர்க்களத்திலே வலிமை நிறைந்ததான பாஞ்சஜன்யத்தை ஊதி, பதினெட்டு நாட்களுக்கு நடந்த போரிலே,

குரு மகீதல முட்பட உளமது கோடாமல் க்ஷத்ரியர்மாள... குருக்ஷேத்திரம் பாழ் நிலமாகவும்; (பாண்டவர்கள்) தமது உள்ளம் கோணாமல் நெறிமுறையுல் நிற்கவும்; கௌரவ வம்சத்தவர் அனைவரும் இறந்து போகவும்,

குலவு தேர்கடவு அச்சுதன் மருக குமாரா கச்சிப் பெருமாளே...  (சிறந்து) விளங்குவதான (அர்ஜுனனுடைய) தேரைச் செலுத்திய அச்சுதனுடைய மருகனே!  குமரனே!  கச்சித் தலத்துப் பெருமாளே! 

சுருக்க உரை

தருமன், வீமன், அர்ஜுனன், நகுல-சகதேவர் ஆகிய ஐந்து பாண்டவர்களுக்கும் புகலிடமாக அமைந்தவனும்; போர்க்களத்திலே பராக்கிரமம் நிறைந்த பாஞ்சஜன்யத்தை முழங்கியவனும்; பதினெட்டு நாட்களுக்கு நடந்த பாரதப் போரிலே குருக்ஷேத்திரம் பாழ்படும்படியாகவும்; பாண்டவர்கள் ஐவரும் நெறியில் நிற்கும்படியாகவும்ம்; ஏனைய மன்னர்கள் இறந்து போகும்படியாகவும் அர்ஜுனனுடைய தேரைச் செலுத்திய அச்சுதனுடைய மருகனே!  குமரனே!  கச்சித் தலத்துப் பெருமாளே!

வினைகளின் காரணமாக ஏற்பட்டட பிறவிகள் தொலைவதற்கு ஒருவழியை அறியமாட்டாமல் தடுமாறுபவர்களும்; கலகங்களுக்குக் காரணமான துர்குணங்களை உடையவர்களுமான சமயவாதிகளின் பலவகையான சாத்திர நூல்களில் சொல்லப்பட்டுள்ள பலவிதமான மாறுபாடுகளையும் பொருந்தாமையையும் கொண்ட (விஷயங்களை ஒழித்து); மன உணர்ச்சிக்கு எட்டாததும் மௌனத்தால் நிறைந்ததுமான உன் உண்மை வடிவத்தை அடியேன் இறப்பின்றித் துலங்குமாறு உபதேசித்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com