பகுதி - 613

உத்தமன் என்று சொல்வது
பகுதி - 613

பதச் சேதம்

சொற் பொருள்

இலாபம் இல் பொலாஉரை சொலா 
மனதபோதனர்இயாவரும்இராவு
பகல் அடியேனை

 

இலாபமில்: பயனற்ற; இயாவரும்: யாவரும்;

இராகமும் விநோதமும்உலோபமும் 
உடன்மோகமும்இலான்இவனும் மா
 புருஷன் எனஏய

 

இராகம்: ஆசை; விநோதம்: விளையாட்டு (பொழுதுபோக்கு); உலோபம்: கருமித்தனம், ஈயாமை; மாபுருஷன்: சத்புருஷன்; ஏய: இயைய, பொருந்தும்படியாக, சொல்லும்படியாக;

ச(ல்)லாபம் அமலாகரசசீதர விதாரண சதாசிவமயேசுர சகல லோக

 

சல்லாபம்: இனிய குணம்; அமலாகர: அமல (பரிசுத்தமான) ஆகர வடிவுடைய—பரிசுத்தமே வடிவான; சசீதர: சந்திரனைத் தரித்தவனே (சிவனுக்குரியதெல்லாம் முருகனுக்கும் பொருந்தும்); விதாரண: போர் புரிபவனே (விதாரணம்: போர்);

சராசர வியாபக பராபரமநோலய சமாதிஅனுபூதி பெறநினைவாயே

 

சராசர: சர, அசர—இயங்குவனவும் நிலைத்திருப்பனவும்; வியாபக: அனைத்திலும் கலந்ததான; பராபர: பரம்பொருளாய் உள்ள; மனோலய: மனம் ஒடுங்கிய; நினைவாயே: நினைக்கவேண்டும், திருச்சித்தம் செய்யவேண்டும்;

நிலா விரி நிலா மதிநி(ல்)லாத அநில 
அசன நியாய பரிபால அர நதிசூடி

 

நிலாவிரி: கிரணங்கள் விரியும் (சந்திரனுடைய கிரணத்துக்கு நிலா என்று பெயர்); நிலாமதி: ஒளியை உடைய சந்திரப் பிறையையும்; நிலாத: ஓரிடத்தில் நிற்காத; அநில: காற்று; அசன(ம்): உணவு, உணவாகப் பருகும்; அர(வு): பாம்பை (இங்கே ஆதிசேஷனை என்பது உரையாசிரியர் குறிப்பு.  விளக்கத்தில் காண்க);

நிசாசர குல அதிபதிராவண புய அரிட நிரஆமய சரோருக அரன்அருள் பாலா

 

நிசாசர: இரவில் உலவும்—அரக்கர்கள்; புய: தோளுக்கு; அரிட: அரிட்டத்தை, கேட்டை; நிராமய: நோயற்ற; சரோருக: தாமரை (தாமரையில் வீற்றிருக்கும்); அரன்: சிவன்;

வில் ஆசுகம் வலார்எனும் உலாச 
இதம்ஆகவம்வியாதர்கள்விநோத
மகள் மணவாளா

 

ஆசுகம்: அம்பு; வலார்: வல்லவர்கள்; உ(ல்)லாச: களிப்பு; இதம்: இன்பம்; ஆகவம்: போரிடும்; வியாதர்கள்: வேடர்கள்;

விராவு வயல் ஆர் புரிசிரா மலை பிரான்
 மலைவிராலி மலை மீதில்உறை 
பெருமாளே.

 

 

இலாபமில் பொ(ல்)லாவுரை சொலாமன தபோதனர்... பயனற்றதும் பொல்லாததுமான பேச்சுகளைப் பேசாத மனத்தை உடைய தவத்தினோர்கள்,

இயாவரும் இராவுபகல் அடியேனை... அனைவரும் இரவு, பகல் எல்லாக் காலத்திலும் என்னை, (இவன்)

இராகமும் விநோதமும் உலோபமுடன்மோகமும்... ஆசையும்; விளையாடலில் மகிழ்ச்சியும்; கருமித்தனமும்; மோகமும் (ஆகிய இவையெல்லாம்),

இலான் இவனு மாபுருஷன் எனஏய... இல்லாத இவன் ஒரு உத்தமன் என்று சொல்வது பொருந்தும்படியாகச் செய்து;

சலாப அமலாகர சசீதர விதாரண... இனியவனே!  தூய்மையே வடிவெடுத்தவனே!  பிறைச்சந்திரனை அணிந்தவனே*!  போர்புரிவதில் வல்லவனே!

(* சிவனுக்கு உரியதெல்லாம் முருகனுக்கும் பொருந்தும்.)

சதாசிவ மயேசுர சகலலோக சராசர வியாபக பராபர மநோலய சமாதி யநுபூதிபெற நினைவாயே...சதாசிவனே!  மஹேஸ்வரனே! எல்லா உலகங்களிலும் இருக்கிற அசையும், அசையாப் பொருட்களிலெல்லாம் நிறைந்திருக்கிற பரம்பொருளாக நிற்கின்ற; மனம் ஒடுங்கிய சமாதி அனுபூதி நிலையை அடியேன் அடைவதற்கு அருள்புரிய வேண்டும்.

நிலாவிரி நிலாமதி நிலாத அநில அசன நியாயப ரிபாலஅர நதிசூடி... ஒளி சிந்துகின்ற பிறைச் சந்திரனையும்; நில்லாது திரிவதான காற்றை உணவாகக் கொள்கின்றவனும்; பாம்பாக நின்று தர்மத்தைக் காப்பவனுமான ஆதிசேடனையும்* கங்கையையும் சூடியவரும்;

(* ‘வாயுவான பஞ்சடைத்துத் திருமால் துயிலும் மலரணையே!  ஆய விடமாம் யாக்கை அமைத்து அரானர் அணியும் அரும்பணியே’ என்று செவ்வந்திப் புராணத்தில் சிவன் ஆதிசேடனை அணிந்த குறிப்பு இருப்பதாக உரையாசிரியர் குகத்திரு வ சு செங்கல்வராய பிள்ளையவர்கள் குறிப்பிடுகிறார்கள்.)

நிசாசர குலாதிபதி ராவண புயாரிட நிராமய சரோருக அரன் அருள்பாலா... அசுரர் குலத் தலைவனான ராவணனுடைய தோள்களை வருந்துமாறு செய்தவரும்; நோயற்றவரும்; தாமரையில் வீற்றிருப்பவருமான* சிவன் அருளிய பாலனே!

(‘பதும நன் மலரது மருவிய சிவன்’ என்றும் ‘சுடர்க்கமலப் போதகஞ் சேர் புண்ணியனார் என்றும் சிவன் தாமரையில் வீற்றிருப்பதை சம்பந்தர் குறிப்பிடுகிறார்.)

வில் ஆசுகம் வலாரெனும் உலாச இத ஆகவ வியாதர்கள் விநோதமகள் மணவாளா... ‘வில்லில் அம்பைத் தொடுப்பதில் வல்லவர்கள் நாங்கள்’ என்ற களிப்போடு போர்புரிகின்ற வேடர்களுடைய அற்புதமான மகளான வள்ளியின் மணாளனே!

விராவு வயலார்புரி சிராமலை பிரான்மலை விராலிமலைமீதிலுறை பெருமாளே... பொருந்தி வயலூரிலும் திரிசிரா மலையிலும் பிரான் மலையிலும் விராலி மலையிலும் வீற்றிருக்கின்ற பெருமாளே!


சுருக்க உரை

ஒளிவீசும் பிறைச் சந்திரனையும்; காற்றைப் பருகுபவனும் பாம்பாக நின்று தர்மத்தைக் காப்பவனுமான ஆதிசேடனையும் கங்கையையும் சூடியவரும்; (கயிலையைப் பெயர்த்த) அசுரர் குலத் தலைவனான ராவணனுடைய தோள்களை வருந்தச் செய்தவரும்; தாமரையில் வீற்றிருப்பவருமான சிவன் அருளிய பாலனே!  ‘வில்லில் அம்பைக் கோத்து எய்வதிலே வல்லவர்கள் நாங்கள்’ என்ற பெருமிதத்தோடு போர்புரியும் வேடர்களின் குலத்திலே உதித்த வள்ளியின் மணாளனே!  வயலூரையும், திரிசிரா மலையையும், பிரான் மலையையும் இடமாகக் கொண்டு விராலி மலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

பயனற்றதும் பொல்லாததுமான பேச்சுகளைப் பேசாத பெரிய தவத்தோர்கள் எல்லோரும் என்னை ஆசையும் மோகமும் லோபமும் அற்றவன் இவன் என்று போற்றும்படியாகவும்; எல்லாவற்றிலும் நிறைந்திருக்கின்ற பரம்பொருளாக நிற்கின்ற; மனம் ஒடுங்கிய சமாதி அனுபூதி நிலையை அடியேன் எய்தும்படியாக திருச்சித்தம் செய்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com