பகுதி - 585

ஓங்கும் ஐம்புலன் ஓட நினைத்து

பதச் சேதம்

சொற் பொருள்

ஓங்கும் ஐம்புலன் ஓட நினைத்து இன்பு அயர்வேனை

 

ஓங்கும்: வளர்கின்ற; ஓட: (இழுத்துக்கொண்டு) ஓட; இன்பு அயர்வேனை: இன்பம் கொண்டு அயர்சி அடைவேனை;

ஓம் பெறும் ப்ரணவ ஆதி உரைத்து எந்தனை ஆள்வாய்

 

ஓம் பெறும் பிரணவ ஆதி: ஓம் என்ற பிரணவத்தைப் பெறுவதான எல்லாவற்றையும்;

வாங்கி வெம் கணை சூரர் குல கொம்புகள் தாவி

 

வாங்கி: வில்லை வாங்கி; வெம்கணை: கொடிய அம்பு; சூரர் குல கொம்புகள்: சூரர் குலத்தில் சிறந்தவர்கள்;

வாங்கி நின்றன ஏவில் உகைக்கும் குமரேசா

 

வாங்கி நின்றன: வளைந்து நின்ற (சேனைகளின் மீது); ஏவில்: அம்பில், அம்பாலே (ஏ என்றாலே அம்பு என்று பொருள்); உகைக்கும்: செலுத்தும்;

மூங்கில் அம்புய வாச மண குஞ்சரி மானும்

 

மூங்கில்: மூங்கிலை ஒத்த தோள்; குஞ்சரி: (குஞ்சரம்: யானை எனவே குஞ்சரி—) தேவானை;

மூண்ட பைம் குற மாது மணக்கும் திரு மார்பா

 

குறமாது: வள்ளி;

காங்கை அங்கு அறு பாசு இல் மனத்து அன்பர்கள் வாழ்வே

 

காங்கை: வெப்பம்; பாசு இல்: பாசங்கள் அற்ற;

காஞ்சிரம் குடி ஆறு முகத்து எம் பெருமாளே.

 

காஞ்சிரம்குடி: எட்டிக்குடி;

ஓங்கும் ஐம்புலன் ஓட நினைத்து இன்பயர்வேனை... (அளவில்லாமல் பெருகி) வளர்கின்ற ஐந்து புலன்களும் என்னை (அவற்றின் போக்கிலே) இழுத்துக்கொண்டு ஓட, (அப்படி ஓடுவதனால்) இன்பம் அடைந்து தளர்ச்சியும் அடைகின்ற எனக்கு;

ஓம்பெ றும்ப்ரண வாதி யுரைத்து எந்தனையாள்வாய்... ‘ஓம்’காரத்தைப் பெறுவதான பிரணவம் முதலான அனைத்தையும் உபதேசித்து என்னை ஆண்டருள வேண்டும்.

வாங்கி வெங்கணை சூரர் குலக்கொம்புகள் தாவி… (வில்லை) வளைத்து, கொடிய அம்புகளை ஏவியபடி  சூரர் குலத்தின் சிறந்த கூட்டங்கள் தாவி(க் குதித்து)

வாங்கி நின்றன ஏவில் உகைக்கும் குமரேசா... வளைத்துச் (சூழ்ந்துகொண்டு) நிற்கும்போது (அவர்களின்மேல்) கொடிய அம்புகளைச் செலுத்துகின்ற குமரேசா!

மூங்கில் அம் புய வாசமணக் குஞ்சரிமானும்... மூங்கிலைப் போன்ற இளந்தோள்களையும் நறுமணத்தையும் கொண்ட தேவானையையும்;

மூண்ட பைங்குற மாது மணக்குந் திருமார்பா... (உன்மீது அன்பு) மூள்கின்ற குறமகளான வள்ளியையும் மணந்துகொண்ட திருமார்பை உடையவனே!

காங்கை யங்கறு பாசில் மனத்து அன்பர்கள்வாழ்வே... மனக்கொதிப்பை ஒழித்தவர்களும்; பாச-பந்தங்களை அழித்தவர்களுமான அன்பர்களுடைய செல்வமே!

காஞ்சி ரங்குடி ஆறு முகத்தெம் பெருமாளே.... எட்டிக்குடியிலே ஆறுமுகங்களோடு வீற்றிருக்கின்ற எங்கள் பெருமாளே!

சுருக்க உரை

வில்லை வளைத்து, கொடிய அம்புகளை ஏவுகின்ற சூரர் குலத்தின் சிறந்த இளைஞர்கள் சுற்றிலும் சூழ்ந்துகொள்ள அவர்களின் மேலே கூட்டமான அம்புகளைச் செலுத்துகின்ற குமரேசா!  மூங்கிலைப் போன்ற இளந்தோள்களை உடைய தேவானையையும் உன்மேல் அன்பு பெருகியவ குறமகளான வள்ளியையும் மணந்துகொண்ட திருமார்பா!  சற்றும் மனக்கொதிப்பற்றவர்களும்; பாச பந்தங்களை ஒழித்தவர்களுமான அன்பர்களுடைய செல்வமே!  எட்டிக்குடியில் வீற்றிருக்கின்ற ஆறுமுகத்து எம்பெருமாளே!

அளவின்றிப் பெருகி வளர்கின்ற ஐம்புலன்கள் இழுத்துக்கொண்டு செல்கின்ற வழியிலெல்லாம் சென்று அதையே இன்பமாகக் கருதி; ஐம்புலன்களின் பின்னால் ஓடிக் களைத்தவனான எனக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தோடு தொடங்கும் அனைத்தையும் உபதேசித்து ஆண்டருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com