பகுதி - 591

வெள்ளிகரத்திலே வீற்றிரப்பவனே!

பதச் சேதம்

சொற் பொருள்

கள்ளம் உள்ள வல்ல வல்லி கையில் அள்ளி பொருள் ஈய

 

கள்ளமுள்ள: கள்ளத்தனமுள்ள  வல்லி: கொடி, பெண்;

கல்லு நெல்லு வெள்ளி தெள்ளு கல்வி செல்வர் கிளை மாய

 

கல்லு(ம்): நவரத்தினக் கல்லும்; தெள்ளு கல்வி: தெளிந்த கல்வி; மாய: அழிய, விலகிப் போக;

அள்ளல் துள்ளி ஐவர் செல்லும் அல்லல் சொல்ல முடியாதே

 

அள்ளல்: சேறு; அள்ளல் துள்ளி: சேற்றிலே குதித்து; ஐவர்: ஐம்புலன்கள்;

ஐயர் ஐய மெய்யர் மெய்ய ஐய செய்ய கழல் தாராய்

 

ஐயர் ஐய: முனிவர்களுக்கெல்லாம் முனிவனே; செய்ய கழல்: சிவந்த கழல்;

வள்ளல் புள்ளி நவ்வி நல்கு வள்ளி கிள்ளை மொழியாலே

 

புள்ளி நவ்வி: புள்ளி மான் (நவ்வி: மான்);

மையல் எய்தும் ஐய செய்யில் வையில் வெள் வளைகள் ஏற

 

செய்யில்: வயலில்; வையில்: புல்லில்; வெள்வளைகள்: வெள்ளைச் சங்குகள்;

மெள்ள மள்ளர் கொய்யு(ம்) நெல்லின் வெள்ள வெள்ளிநகர் வாழ்வே

 

மள்ளர்: உழவர்கள்;

வெய்ய சைய வில்லி சொல்லை வெல்ல வல்ல பெருமாளே.

 

சைய வில்லி: (மேரு) மலையை வில்லா(கக் கொண்ட சிவன்);


கள்ளம் உள்ள வல்ல வல்லி கையில் அள்ளி பொருள் ஈய... கள்ளத்தனம் கொண்டவளும் எதிலும் வல்லவளுமான பெண்ணின் கையிலே நான் பொருளை அள்ளிக் கொடுப்பதால்,

கல்லு நெல்லு வெள்ளி தெள்ளு கல்வி செல்வர் கிளை மாய... (என்னிடமுள்ள) நவரத்தினக் கற்களும்; நெற் குவியலும்; வெள்ளிப் பாண்டங்களும்; தெளிந்த கல்வியும்; செல்வம் நிறைந்த சுற்றத்தார்களும் அழியும்படியாக (என்னிடமிருந்து விலகும்படியாக);

அள்ளல் துள்ளி ஐவர் செல்லும் அல்லல் சொல்ல முடியாதே... சேற்றிலே குதித்து ஐம்புலன்களும் என்னைச் செலுத்துகின்ற துன்பத்தைச் சொல்ல ஒண்ணாது.

ஐயர் ஐய மெய்யர் மெய்ய ஐய செய்ய கழல் தாராய்... முனிவர்களுக்கெல்லாம் முனிவனே!  மெய்யர்களுக்கெல்லாம் மெய்யனே! உன்னுடைய சிவந்த திருவடிகளை அளித்தருள வேண்டும்.

வள்ளல் புள்ளி நவ்வி நல்கு வள்ளி கிள்ளை மொழியாலே மையல் எய்தும் ஐய... வள்ளலே!  புள்ளி மானாகிய (திருமகள்) ஈன்ற வள்ளியம்மையின் கிள்ளை மொழிகளைக் கேட்டு மோகம் கொள்ளும் ஐயனே!

செய்யில் வையில் வெள் வளைகள் ஏற... வயல்களிலும் புல் தரைகளிலும் வெண்சங்குகள் ஏறித் திரிய (அத்தகைய வயல்களிலே),

மெள்ள மள்ளர் கொய்யு(ம்) நெல்லின் வெள்ள வெள்ளிநகர் வாழ்வே... உழவர்கள் மெல்ல மெல்ல அறுவடை செய்த நெல் மிகுதியாக இருப்பதான வெள்ளிகரத்திலே வீற்றிருப்பவனே!

வெய்ய சைய வில்லி சொல்லை வெல்ல வல்ல பெருமாளே.... மேருமலையாகிய வெம்மையான வில்லை ஏந்திய சிவபெருமானுக்கு(ப் பிரணவத்தின் பொருளை) வெற்றியோடு உரைக்க வல்ல பெருமாளே!

சுருக்க உரை

வள்ளலே!  புள்ளிமானான திருமகள் ஈன்ற வள்ளியம்மையின் மழலைப் பேச்சைக் கேட்டு மோகம் கொள்ளும் ஐயனே! வெண்சங்குகள் வயல்களிலும் புற்றரைகளில் ஏறித் திரிய அத்தகைய வயல்களிலே உழவர்கள் அறுவடை செய்த நெல் மிகுதியாக இருப்பதான வெள்ளிகரத்திலே வீற்றிரப்பவனே!  மேருமலையைப் போரில் வெம்மையான வில்லாகக் கையில் ஏந்திய பரமசிவனாருக்கு பிரணவத்தின் பொருளை உரைக்கவல்ல பெருமாளே!

கள்ளத்தனமும் எதையும் சாதிக்க வல்ல தன்மையுமுள்ள (பொதுப்)பெண்ணின் கையிலே பொருளை அள்ளிக் கொடுப்பதனால் என்னுடைய நவரத்தினங்களும்; நெற்குவியல்களும்; பெற்ற தெளிவான அறிவும்; செல்வம் நிறைந்த சுற்றத்தாரும் என்னைவிட்டு விலகிப் போகுமாறு,

சேற்றிலே புரளும் இந்த ஐம்புலன்களும் என்னைப் படுத்துகிற பாட்டை வார்த்தையால் சொல்லி விவரிக்க முடியாது.  முனிவர்களுக்கு முனிவனே!  மெய்யர்களுக்கு மெய்யனே!  உன்னுடைய சிவந்த திருவடிகளை அடியேனுக்குத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com