பகுதி - 513

என்னை நீ உடனே ஆண்டருள வேண்டும்.

பதச் சேதம்

சொற் பொருள்

மன கபாடம் பாடீர தனம் தராதரம் ரூப மதனராச ராசீப சரம் கோப

 

மன கபாடம்: மனக் கதவு; பாடீர(ம்): சந்தனம்; தராதரம்: மலை; ராசீப: ராஜீவ, தாமரை; ராசீப சரம்: (மன்மதனின்) தாமரைக் கணை;

வருண பாதகம் அலோகம் தருண சோபிதம் ஆகாரம் மகளிரோடு சீராடி இதம் ஆடி

 

வருண பாதகம்: குலவேற்றுமையால் வரும் குற்றம்; அலோகம்: பார்வைக்குப் படாத உலகம் பாதகஅலோகம்: பாதகத்தைப் பொருட்படுத்தாமல்; தருண: இளைய; சோபிதாகாரம்: (சோபிதம்: அழகு) அழகிய வடிவையுடைய;

குனகுவேனை நாணாது தனகுவேனை வீணான குறையனேனை நாயேனை வினையேனை

 

குனகுவேனை: கொஞ்சிக்கொண்டிருப்பவனை; நாணாது: வெட்கமில்லாமல்; தனகுவேனை: சரசமாடுபவனை;

கொடியனேனை ஓதாத குதலையேனை நாடாத குருடனேனை நீ ஆள்வது ஒரு நாளே

 

ஓதாத: போற்றிப் பாடத; குதலையேன்: கொச்சைச் சொல்லையுடயவன்;

அநக வாமன ஆகாரம் முநிவர் ஆகம் மால் தேட அரிய தாதை தான் ஏவ மதுரேசன்

 

அநக: பாபமற்றவனே; வாமனாகாரம்: வாமன வடிவத்தில்; முநிவர் ஆகம்: முனிவர் உடலை, உருவத்தை; தாதை: தந்தையான சிவன்; மதுரேசன்: மதுரை ஈசனான சொக்கன்;

அரிய சாரதா பீடம் அதனில் ஏறி ஈடேற அகில நாலும் ஆராயும் இளையோனே

 

சாரதா பீடம்: சரஸ்வதியின் பீடம் (இங்கே சங்கப் பலகை);

கனக  பாவனாகார பவள கோமளாகார கலப சாமளாகார மயில் ஏறும்

 

கனக: பொன்; பாவன: போன்ற; பாவனாகார: போன்ற வடிவத்தை உடையவனே; கோமளாகார: அழகிய வடிவையுடையவனே; கலப: தோகை; சாமளாகார: பச்சை நிறத்தையுடைய;

கடவுளே க்ருபாகார கமல வேதனாகார கருணை மேருவே தேவர் பெருமாளே.

 

க்ருபாகார: கிருபையின் வடிவத்திலிருக்கும்; கமல: இதயக் கமலத்தில்;  வேதனாகார: ஞான வடிவிலிருப்பவனே;

மனகபாட பாடீர தன தராதரா ரூப மதன ராச ராசீப சரகோப... (மூடப்பட்ட) மனக்கதவையும் (மனத்துக்குக் கதவு போட்டால், அது அடைக்கப்பட்ட கதவாகிறது.  எதற்கும் இடம்கொடாத மனமாக ஆகிறது); சந்தனக் கலவை பூசப்பட்ட மலையை ஒத்த மார்பகங்களையும் கொண்டவர்களும்; மன்மத ராஜனின் தாமரைக் கணைக்கு இலக்காக இருக்கின்ற (காரணத்தால்),

வருண பாதக அலோக தருண சோபிதாகார மகளிரோடு சீராடி இதமாடிக்... குலவேற்றுமையால் ஏற்படும் குற்றங்களைப் பொருட்படுத்தாதவர்களும்; இளமையும் அழகும் வாய்ந்த வடிவத்தோடுள்ள பெண்களேடு பழகியும்; திளைத்தும்;

குனகுவேனை நாணாது தனகுவேனை வீணான குறையனேனை... கொஞ்சிக் கொண்டும்; வெட்கமில்லாமல் சரசமாடிக்கொண்டும் இருக்கின்ற வீணனும்; குறைகளை உடையவனும்;

நாயேனை வினையேனைக் கொடியனேனை ஓதாத குதலையேனை நாடாத குருடனேனை நீயாள்வ தொருநாளே... நாயை ஒத்தவனும்; வினைக்கு ஆளானவனும்; கொடியவனும்; உன்னைத் தேடாத குருடனுமான அடியேனை நீ ஒருநாளில் ஆண்டருள வேண்டும்.

அநக வாமனாகார முநிவராக மால்தேட அரிய தாதை தானேவ மதுரேசன்... பாவமற்ற வாமன வடிவத்தில் முனிவராக—பிரமசாரியாக—அவதரித்த திருமாலாலும் தேடியடைய முடியாத தந்தையான மதுரைச் சொக்கனுடைய (ஏவலின்படி),

அரிய சாரதாபீடம் அதனிலேறி ஈடேற அகில நாலும் ஆராயும் இளையோனே... அரியவரான சரஸ்வதியுடைய பீடமாக விளங்கிய சங்கப் பலகையில் அமர்ந்து, (உலகமெல்லாம்) உய்யும்படியாக நாற்றிசையும் அறியுமாறு (புலவர்களின் உரையை) ஆராய்ந்தவனே*! 

(* இங்கே சொல்லப்படும் குறிப்பு பல திருப்புகழ்ப் பாக்களில் இடம்பெறுகின்ற ஒன்று.  சேவல் விருத்ததிற்குப் பொருளெழுதுகையில் நம்முடைய 99ம் தவணையில் பின்வருமாறு இதைச் சொல்லியிருந்தோம்:

முன்னொரு காலத்தில் நாற்பத்தொன்பது சங்கப் புலவர்கள் (இறையனார் அகப்பொருளுக்குத் தாங்கள் செய்த உரையில் எது சிறந்தது என்று வாதாட, சோமசுந்தரருடைய குறிப்பின்படி மதுரையில் தனபதிச் செட்டியாருடைய குமாரனாக ருத்ரஜன்மன் என்ற பெயரோடு அவதரிக்க, அந்தச் சிறுவனைப் புலவர்கள் அழைத்து) தொழுது வணங்கும்படி, சங்கப் பலகையில் வீற்றிருந்தவன் முருகன்)

கனக பாவனாகார பவள கோமளாகார கலப சாமளாகார மயிலேறும் கடவுளே... பொன்னை ஒத்த வடிவத்தைக் கொண்டவனே!  பவளம் போலச் சிவந்த வடிவினனே!  தோகையை உடையதும் பச்சை நிறமானதுமான மயிலை வாகனமாக ஏறும் இறைவனே!

க்ருபாகார கமல வேதனாகார கருணை மேருவே தேவர் பெருமாளே... அருளே வடிவமாகக் கொண்டவனே!  இதயக் கமலத்தில் ஞான வடிவமாக விளங்குபவனே!  கருணைப் பெருமலையே!  தேவர்களுடைய பெருமாளே! 

சுருக்க உரை

பாபமற்ற வாமன உருவத்தைத் தாங்கிய திருமாலாலும் தேட அரிய (பாதத்தை உடைய) தந்தையான மதுரைச் சொக்கனுடைய ஏவலின்படிய, மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பலகையிலே வீற்றிருந்து இறையனார் அகப்பொருளுக்கு இயற்றப்பட்ட எந்த உரை சிறந்தது என்று நாற்றிசையிலுமுள்ள புலவர்கள் அறியும்படியாக ஆராய்ந்தவனே!  பொன்னை ஒத்த வடிவத்தைக் கொண்டவனே!  பவளம்போன்ற சிவந்த மேனியனே!  தோகையை உடையதும் பச்சை நிறமானதுமான மயிலில் ஏறுபவனே!  கருணையே வடிவெடுத்தவனே!  இதயக் கமலத்திலே ஞானஸ்வரூபமாக விளங்குபவனே!  கருணைப் பெருமலையே!  தேவர்களுடைய பெருமாளே!

அடைத்துத் தாழிட்டதுபோன்ற மனத்தையும்; சந்தனக் கலவையைப் பூசிய மார்பகங்களையும் உடையவர்களும்; மன்மதனுடைய தாமரைக் கணைக்கு இலக்கானவர்கள் என்பதாலே குலவேற்றுமையால் வரும் பாதகங்களைப் பொருட்படுத்தாமல் (அனைவரோடும் கூடுபவர்களுமான பெண்களோடு கொஞ்சுபவனும்; இன்பத்தில் திளைத்துப் பொழுது போக்குபவனும்; வெட்கமின்றி சரசத்தில் ஈடுபடுபவனும்; வீணனும்; பலவிதமான குறைகளை உடையவனும்; பொல்லாதவனும்; உன்னைப் போற்றாதவனும்; கொச்சைப் பேச்சை உடையவனும்; குருடனுமான என்னை நீ உடனே ஆண்டருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com