பகுதி - 515

ஆலகால விஷம் பரமனிடத்திலே அடையவும்

பதச் சேதம்

சொற் பொருள்

காலனார் வெம் கொடும் தூதர் பாசம் கொ(ண்)டு என் காலில் ஆர்தந்து உடன் கொ(ண்)டு போக

 

காலில் ஆர்தந்து: காலைக் கட்டி;

காதல் ஆர் மைந்தரும் தாயராரும் சுடும் கானமே பின் தொடர்ந்து அலறா முன்

 

காதல் ஆர் மைந்தர்: அன்பு நிறைந்த மக்கள்; சுடும்கானம்: சுடுகாடு;

சூலம் வாள் தண்டு செம் சேவல் கோதண்டமும் சூடு தோளும் தடம் திரு மார்பும்

 

கோதண்டம்: வில் (கோதண்டம் என்பது வில்லுக்குப் பொதுப் பெயர்; ராமருடையதைக் குறிக்கும் சிறப்புப் பெயர்);

தூய தாள் தண்டையும் காண ஆர்வம் செயும் தோகை மேல் கொண்டு முன் வரவேணும்

 

 

ஆலகாலம் பரன் பாலதாக அஞ்சிடும் தேவர் வாழ அன்று உகந்து அமுது ஈயும்

 

பரன் பாலதாக: சிவனிடத்திலே அடைந்ததாக, சிவனால் கொள்ளப் பட்டதாக;

ஆரவாரம் செயும் வேலை மேல் கண் வளர்ந்த ஆதி மாயன் தன் நல் மருகோனே

 

வேலை: கடல்; கண்வளர்ந்த: கண் வளரும், துயிலும்;

சாலி சேர் சங்கினம் வாவி சூழ் பங்கயம் சாரல் ஆர் செந்தில் அம் பதி வாழ்வே

 

சாலி: செந்நெல்; வாவி: குளம்;

தாவு சூர் அஞ்சி முன் சாய வேகம் பெறும் தாரை வேல் உந்திடும் பெருமாளே.

 

தாரை வேல்: கூர்மையான வேல் (வீரவேல் தாரைவேல்—திருமுருகாற்றுப் படையின் இறுதியில் வரும் வெண்பாக்களில் ஒன்று);

காலனார் வெங்கொடுந் தூதர் பாசங்கொடு என்காலின்ஆர்தந்து உடன்கொடுபோக... யமனுடைய கொடிய தூதர்கள் பாசக்கயிற்றைக் கொண்டு என் காலைக் கட்டி தம்மோடு எடுத்துச் செல்லவும்;

காதலார் மைந்தருந் தாயராரும் சுடுங் கானமே பின்தொடர்ந்து அலறாமுன்... அன்பு மிகவுடையவர்களான பிள்ளைகளும் தாயும் மற்றவர்களும் சுடுகாடு வரையிலே (என்னுடலைப்) பின்தொடர்ந்து வந்து கதறி அழுகின்ற நிலைமை ஏற்படும் முன்னர்,

சூலம் வாள் தண்டு செஞ் சேவல் கோதண்டமும் சூடுதோளும்... சூலம், வாள், தண்டாயுதம், சிவந்த சேவலைக் கொண்ட கொடி, வில் முதலானவற்றைச் சூடியிருப்பதான பன்னிரு தோள்களையும்;

தடந்திருமார்பும் தூயதாள் தண்டையுங் காண ஆர்வஞ்செயுந் தோகைமேல் கொண்டு முன்வரவேணும்... அகலமான திருமார்பையும்; தூய்மையான திருப்பாதத்தில் அணிந்துள்ள தண்டையையும் அடியேன் காணும்படியாக மயில்மேல் அமர்ந்த கோலத்தில் என் முன்னே தோன்றியருள வேண்டும்.

ஆலகாலம் பரன் பாலது ஆக அஞ்சிடுந் தேவர் வாழ அன்று உகந்து அமுது ஈயும்.... ஆலகால விஷம் பரமனாரிடத்திலே சென்றடைய; (அந்த விஷத்தைப் பார்த்துப்) பயந்து ஓடியவர்களான தேவர்கள் வாழ்வுறும்படியாக அன்று (மோகினியாகத் தோன்றி) அவர்களுக்கு அமுதத்தை அளித்தவரும்;

ஆரவாரஞ்செயும் வேலைமேல் கண்வளர்ந்த ஆதிமாயன்றன் நன் மருகோனே... பேரோசை கொண்டதாகிய கடலின்மேல் அறிதுயிலில் இருப்பவருமான திருமாலுடைய மருகனே!

சாலிசேர் சங்கினம் வாவிசூழ் பங்கயம்சாரலார் செந்திலம்பதி வாழ்வே...செந்நெல் வயல்களும்; அவற்றைச் சேர்ந்திருக்கும் சங்கு இனங்களும்; தாமரைப் பூக்கள் நிறைந்திருக்கும் குளங்களும் சூழ்ந்திருக்கும் திருச்செந்தூர்த் தலத்தில் வீற்றிருருப்பவனே! 

தாவுசூர் அஞ்சிமுன் சாய வேகம்பெறுந் தாரை வேலுந்திடும் பெருமாளே... முன்னொரு நாளில் போர்க்களத்துக்குத் தாவிவந்த சூரன் அஞ்சி விழும்படியாக வேகம் நிறைந்ததும் கூர்மையானதுமான வேலை எறிந்த பெருமாளே! 

சுருக்க உரை

ஆலகால விஷம் பரமனிடத்திலே அடையவும் (அவர் அதை உட்கொள்ளவும்); அஞ்சி ஓடியவர்களான தேவர்களுக்கு அமுதம் தருவதற்காக மோகினி வடிவத்தை எடுத்தவரும்; திருப்பாற்கடலிலே அறிதுயிலிலே இருப்பவருமான திருமால் மருகனே!  செந்நெல் வயல்களும்; அவற்றில் சேர்ந்திருக்கும் சங்கினங்களும்; மலர்ந்துள்ள தாமரைப் பூக்கள் நிறைந்திருக்கும் குளங்களும் சூழ்ந்திருக்கின்ற திருச்செந்தூரிலே குடிகொண்டிருப்பவனே!  போர்க்களத்தில் தாவிப் பாய்ந்து எதிர்த்து வந்த சூரன் அஞ்சி வீழும்படியாக வேகமும் கூர்மையும் நிறைந்த வேலை எறிந்த பெருமாளே! 

யமனுடைய தூதர்கள் வந்து பாசக்கயிற்றாலே என் காலைப் பிணித்து அவர்களோடு இட்டுச் செல்ல; அன்பு நிறைந்த பிள்ளைகளும் தாயாரும் பிறரும் சுடுகாடு வரையில் என் உடலைத் தொடர்ந்து வந்து கதறும் நிலை ஏற்படுவதற்கு முன்னதாகவே,

சூலம், வாள், தண்டாயுதம், சிவந்த சேவல் எழுதப்பட்ட கொடி, வில் முதலானவற்றை ஏந்திய பன்னிரு புயங்களையும்; அகன்ற திருமார்பையும்; தூய திருப்பாதத்தில் அணிந்துள்ள தண்டையையும் அடியேன் காணும்படியாக மயிலின்மேல் ஏறி அமர்ந்த கோலத்தில் என்முன்னே தோன்றியருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com