பகுதி - 555

சைவ சித்தாந்த நூல்களைத் தவிர

பதச் சேதம்

சொற் பொருள்

குருதி கிருமிகள் சல(ம்) மல(ம்) மயிர் தசை மருவும் உருவமும் அலம் அலம் அழகொடு குலவு பல பணி பரிமளம் அறு சுவை மடை பாயல்

 

கிருமிகள்: புழுக்கள்; சலம்: நீர்; மருவும்: பொருந்தியிருக்கும்; அலம்: துன்பம்; பணி: ஆபரணங்கள்; பரிமளம்: நறுமணப் பொருட்கள்; மடை: சமையல், உணவு; பாயல்: படுக்கை;

குளிர் இல் அறை அகம் இவைகளும் அலம் அலம் மனைவி மகவு அ(ன்)னை அநுசர்கள் முறை முறை குனகு கிளைஞர்கள் இவர்களும் அலம் அலம் ஒரு நாலு

 

குளிர் இல்: குளிர் இல்லாத; அகம்: வீடு; அநுசர்கள்: உடன்பிறந்தோர்—தம்பிகள்; குனகு: குலாவும் (கொஞ்சிக் குலாவும்); கிளைஞர்கள்: உறவினர்கள்;

சுருதி வழி மொழி சிவ கலை அலது இனி உலக கலைகளும் அலம் அலம் இலகிய தொலைவு இல் உனை நினைபவர் உறவு அலது இனி அயலார் பால்

 

சுருதி: மறை; சிவகலை: சைவ சித்தாந்த நூல்கள்; இலகிய: விளங்குகிற;

சுழல்வது இனிது என வசமுடன் வழிபடும்உறவு அலம் அலம் அருள் அலை கடல் கழி துறை செல் அறிவினை எனது உளம் மகிழ்வுற அருள்வாயே

சுழல்வது: சுற்றுவது; அருள் அலை: அருளாகிய அலை; கழி: கழிமுகம், சங்கமிக்கும் இடம்;

விருது முரசுகள் மொகு மொகு மொகு என முகுற கக பதி முகில் திகழ் முகடு அதில் விகட இறகுகள் பறை இட அலகைகள் நடமாட

 

விருது: வெற்றிச் சின்னம்; முகுற: குமுற; கக: ககன; ககபதி: கருடன்; விகட(ம்): அழகிய; அலகைகள்: பேய்கள்; நடமாட: நடனமாட;

விபுதர் அரகர சிவ சிவ சரண் என விரவு கதிர் முதிர் இம கரன் வலம் வர வினை கொள் நிசிசரர் பொடிபட அடல் செயும் வடிவேலா

 

விபுதர்: தேவர்கள்; கதிர்: சூரியன்; முதிர் இமகரன்: இமம் முதிர் கரன்—குளிர்ச்சி நிறைந்த கிரண்ங்களையுடைய சந்திரன்; நிசிசரர்: இரவில் உலவுபவர்களான அசுரர்கள்; அடல்: போர்;

மருது நெறு நெறு நெறு என முறிபட உருளும் உரலொடு தவழ் அரி மருக செவ் வனசம் மலர் சுனை புலி நுழை முழை உடைய விராலி

 

 

மருது: மருத மரம்; செவ்: சிவந்த; வனசம்: தாமரை; முழை: குகை;

மலையில் உறைகிற அறு முக குருபர கயலும் மயிலையும் மகரமும் உகள் செ(ந்)நெல் வயலி நகரியில் இறையவ அருள் தரு பெருமாளே.

 

 

மயிலை: மயிலை எனப்படும் மீன்; மகரம்: மகர மீன்கள்; உகள்: புரளும்; வயலி: வயலூர்;

குருதி கிருமிகள் சல(ம்) மல(ம்) மயிர் தசை மருவும் உருவமும் அலம் அலம்...  ரத்தமும் புழுக்களும் நீரும் மலமும் மயிரும் சதையும் பொருந்திருப்பதான உருவத்தைக் கொண்ட (இந்த உடலை) எடுத்ததோ துன்பமே! துன்பமே!

அழகொடு குலவு பல பணி பரிமளம் அறு சுவை மடை பாயல் குளிர் இல் அறை அகம் இவைகளும் அலம் அலம்... அழகு விளங்குகின்ற பலவகையான ஆபரணங்களும்; வாசனை திரவியங்களும்; அறுசுவை உணவுகளும்; படுக்கையும்; குளிர் இல்லாத அறைகளைக் கொண்ட வீடும் (இவையெல்லாமும்) துன்பமே! துன்பமே!

மனைவி மகவு (ன்)னை அநுசர்கள் முறை முறை குனகு கிளைஞர்கள் இவர்களும் அலம் அலம்... மனைவியும் மக்களும் தாயாரும் உடன்பிறந்தவர்களும்; உறவுமுறைகளைச் சொன்னபடி கொஞ்சிக் குலாவுகின்ற சுற்றத்தினரும் (அனைவரும்) துன்பமே! துன்பமே!

ஒரு நாலு சுருதி வழி மொழி சிவ கலை அலது இனி உலக கலைகளும் அலம் அலம்... நான்கு வேதங்களும் காட்டிய வழியிலே பேசுபவையான சைவ சித்தாந்த நூல்களைத் தவிர, இந்த உலக சம்பந்தமுடைய மற்ற நூல்களை ஓதியதும் துன்பமே! துன்பமே!

ஒரு நாலு சுருதி வழி மொழி சிவ கலை அலது இனி உலக கலைகளும் அலம் அலம்...

இலகிய தொலைவு இல் உனை நினைபவர் உறவும் அலது... விளங்கி நிற்பவனும் அழிவற்றவனுமான உன்னை நினைப்பவர்களுடைய தொடர்பை விடுத்து,

இனி அயலார் பால் சுழல்வது இனிது என வசமுடன் வழிபடும் உறவு அலம் அலம்... மற்றவர்களிடத்திலே சென்று திரிதலே இனிது என்று, (அந்த மற்றவர்களிடம்) வசப்பட்டு, அவர்களைத் தொழுகின்றவர்களுடைய தொடர்பும் துன்பமே! துன்பமே!

அருள் அலை கடல் கழி துறை செல் அறிவினை எனது உளம் மகிழ்வுற அருள்வாயே... உன்னுடைய திருவருளாகிய அலைகளை வீசுகின்ற கடலின் சங்கமத் துறையின் வழியிலே செல்கின்ற அறிவை, என் மனம் மகிழும்படியாக எனக்கு அருள்வாயாக.

விருது முரசுகள் மொகு மொகு மொகு என முகுற...  வெற்றிச் சின்னங்களான முரசங்கள் மொகுமொகு மொகுவென்று பேரோசையை எழுப்பவும்;

ககபதி முகில் திகழ் முகடு அதில் விகட இறகுகள் பறை இட அலகைகள் நடமாட... மேகம் தவழ்கின்ற உச்சி வானத்திலே கருடன் தன் அழகிய இறகுளை அடிப்பதனால் பறையொலியை எழுப்ப; பேய்கள் கூத்தாடவும்;

விபுதர் அரகர சிவ சிவ சரண் என விரவு கதிர் முதிர் இம கரன் வலம் வர...  தேவர்கள், ‘ஹரஹர சிவ சிவ! சரணம்! சரணம்! என்று கூவவும்; பொருந்திய சூரியனும், குளிர்ச்சி மிகுந்த கிரணங்களை உடைய சந்திரனும் வலம்வரவும்;

வினைகொள் நிசிசரர் பொடிபட அடல் செயும் வடிவேலா... தீவினைகள் நிறைந்த அரக்கர்கள் பொடிபடுமாறு போர்புரிந்த வடிவேலனே!

மருது நெறு நெறு நெறு என முறிபட உருளும் உரலொடு தவழ் அரி மருக... இரண்டு மருத மரங்கள் நெறுநெறு நெறுவென்று முறியும்படியாக உருளுகின்ற உரலை (இழுத்தபடி) தவழந்த கண்ணனுடைய மருமகனே!

செவ் வனசம் மலர் சுனை புலி நுழை முழை உடைய விராலி மலையில் உறைகிற அறு முக குருபர... செந்தாமரைகள் பூக்கின்ற சுனையையும்; புலிகள் நுழைகின்ற குகைகளையும் கொண்ட விராலிமலையில் வீற்றிருக்கின்ற ஆறுமுகனே!  குருபரனே!

கயலும் மயிலையும் மகரமும் உகள் செ(ந்)நெல் வயலி நகரியில் இறையவ அருள் தரு பெருமாளே.... கயல் மீன்களும்; மயிலை எனப்படும் மீன்களும்; மகர மீன்களும் புரள்கின்ற செந்நெல் வயர்களைக் கொண்ட வயலூர்ப் பதியின் இறைவனே! அருள்பாலிக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

வெற்றிச் சின்னங்களான பறைகள் முழங்கவும்; மேகங்கள் தவழும் ஆகாயத்தின் உச்சியிலே கருடன் தன்னுடை அழகிய சிறகுகளைக் கொட்டுவது, பறையொலியைப் போல ஒலிக்கவும்; பேய்கள் கூத்தாடவும்; தேவர்கள், ‘ஹரஹர சிவசிவ! சரணம்! சரணம்’ என்று கூவவும்; சூரியனும், குளிர்ந்த கிரணங்களையுடைய சந்திரனும் வலம்வரவும்; தீயனவற்றைச் செய்த அசுரர்கள் பொடிபட்டு அழியுமாறு போர்புரிந்த வடிவேலனே!  இரண்டு மருத மரங்கள் நெறுநெறுவென்று முறியும்படியாக இடுப்பில் கட்டிய உரலை இழுத்தபடித் தவழ்ந்தவனாகியி கண்ணனுடைய மருகனே!  செந்தாமரைகள் பூக்கின்ற சுனைகளும்; புலிகள் நுழைகின்ற குகைகளும் இருப்பதான விராலி மலையில் வீற்றிருக்கின்ற ஆறுமுகனே! குருபரனே!  கயல் மீன்களும் மயிலை மீன்களும் மகர மீன்களும் புரள்கின்ற செந்நெல் வயல்களைக் கொண்ட வயலூர்த் தலத்தின் இறைவனே!  அருள்பாலிக்கின்ற பெருமாளே!

ரத்தமும் புழுக்களும் நீரும் மலமும் மயிரும் மாமிசமும் சதையும் நிறைந்த இந்த உடலைச் சுமப்பதும் துன்பந்தான் துன்பந்தான்!  அழகான பலவிதமான ஆபரணங்களும்; வாசனை திரவியங்களும்; அறுசுவை உணவும்; படுக்கையும்; குளிர் இல்லாத அறைகளைக் கொண்ட வீடும் அனைத்துமே துன்பந்தான் துன்பந்தான்!  மனைவி, மக்கள், தாய், உடன்பிறந்தோர், தங்கள் உறவுமுறைகளை விவரித்தபடி கொஞ்சிக் குலாவுகின்ற சுற்றத்தார் இவர் எல்லோராலும் நேர்ந்தது துன்பந்தான் துன்பந்தான்!  நான்கு வேதங்களின் மார்க்கங்களை எடுத்துச் சொல்வதான சைவ சித்தாந்த நூல்களைத் தவிர உலகியல் தொடர்பான மற்ற நூல்களை ஓதுவதும் துன்பந்தான் துன்பந்தான்!

விளங்கி நிற்பவனும் அழிவற்றவனுமான உன்னை நினைப்பவர்களுடைய உறவைத் தவிர, பிறரிடத்திலே அலைந்து திரிவதே இனிதென்று (அத்தகைய பிறரிடத்திலே) வசப்பட்டு, அவர்களைத் தொடர்ந்து, வழிபடுகின்றவர்களின் நட்பும் துன்பந்தான் துன்பந்தான்! 

(ஆகவே) உன்னுடைய திருவருளாகிய அலைகள் வீசுகின்ற கடலின் சங்கமத் துறையின் வழியிலே செல்கின்ற அறிவை எனக்கு அளித்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com