பகுதி - 557

மந்திரமாவது நீறு’ என்று தொடங்கும் பதிகத்தை

பதச் சேதம்

சொற் பொருள்

கள் காம க்ரோதத்தே கண் சீமிழ்த்தோர்கட்கு கவி பாடி

 

குரோதம்: கோபம்; கண் சீமிழ்த்தோர்: கண் சிமிட்டியவர்கள், ஏற்றுக் கொண்டவர்கள;

கச்சா பிச்சாக தாவித்து ஆரத்தே அ கொட்களை நீள

 

கச்சா பிச்சாக: கன்னாபின்னாவென்று, தெளிவற்ற முறையிலே; தாவித்து: ஸ்தாபித்து; ஆரத்தே: (பா)மாலையாக; கொட்களை: கொள்களை—கொண்ட பொருட்களை;

கொள்கால் அக்கோல கோணத்தே இட்டு ஆசை பட்டிடவே வை

 

கொட்கால்: கொள்ளும் காலத்தில்; அக்கோல: அந்த அழகிய; கோணத்தே: (முக்கோணமான) பெண்குறிக்கு; இட்டு: கொடுத்து;

கொள் தானக்கு ஊனுக்கா எய்த்தேன் இ தீது அத்தை களைவாய்

 

கொள்: கொள்ளும்; தானக்கு: தானத்துக்கு (அத்துச் சாரியை கெட்டது); ஊனுக்கா: ஊனுக்காக, உடலுக்காக; எய்த்தேன்: இளைத்தேன்; அத்தை: அதை (வலித்தல் விகாரம்)

வெட்காமல் பாய் சுற்று ஊமர் சேர் விக்கானத்தை தரி மாறன்

 

வெட்காமல்: நாணமில்லாமல்; பாய்சுற்று: இடுப்பிலே பாயை (ஆடையாகச்) சுற்றிக்கொள்ளும்; ஊமர்: சமண ஊமையர் (அறிவிலிகள்); விக்கானத்தை: விக்கினத்தை—தீதை; தரி: தரித்த, கொண்டிருந்த; மாறன்: பாண்டியன்;

வெப்பு ஆற பாடி காழிக்கே புக்காய் வெற்பில் குறமானை

 

வெப்பு: வெப்பு நோய், சுரம்; ஆற: தணிய; காழி: சீகாழி; புக்காய்: புகுந்தாய் (ஞானசம்பந்தராகப் புகுந்தாய்); வெற்பில்: மலையில்—வள்ளி மலையில்;

முள் கானில் கால் வைத்து ஓடி போய் முற்சார் செச்சை புய வீரா

 

முற்சார்: முன்னர் சார்ந்து, அடைந்து; செச்சை: வெட்சி மாலை;

முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே.

 

முத்தா: முக்தனே; முத்தீ அத்தா: முத்தழல் நாயகனே; சுத்தா: பரிசுத்தனே; முத்தா முத்தி: மேலான முக்தியை அளிப்பவனே;

கள் காம க்ரோதத்தே கண் சீமிழ்த்தோர்கட்குக் கவி பாடி... கள்ளைக் குடிப்பதையும்; காம வசப்படுவதையும்; கோபம் கொள்வதையும் (கண் சிமிட்டி) ஏற்றுக்கொண்டவர்களின் மீது கவிபாடி;

கச்சா பிச்சாகத் தாவித்து ஆரத்தே அக் கொட்களை நீளக் கொள்கால்... கன்னா பின்னாவென்று தெளிவில்லாத முறையிலே (பாடப்பட்டவனுடைய பெருமையை) ஸ்தாபிதம் செய்து (நிலைநாட்டி); பாமாலை பாடி; அவ்வாறு பாடிப் பெற்ற பொருளைக் கொண்டு,

அக்கோலக் கோணத்தே இட்டு ஆசைப் பட்டிடவே வை கொள் தானக்கு ஊனுக்கா எய்த்தேன் இத்தீது அத்தைக் களைவாயே... அழகிய முக்கோணமான பெண்குறிக்கே* கொடுத்து ஆசைப்பட வைத்து; கொள்ளுகின் தானத்துக்காகவும்;  இந்த (அற்பமான) உடலுக்காகவும் இளைத்த என்னுடைய இந்தத் தீய குணத்தைக் களைந்து அருளவேண்டும்.   

(‘ஆதவித பாரமுலை’ என்று தொடங்கும் கோசை நகர்த் திருப்புகழிலும் ‘குழியான திரிகோணம்’ என்று குறித்திருப்பதைக் காணலாம்.)

வெட்காமல் பாய் சுற்று ஊமர்ச் சேர் விக்கானத்தைத் தரி மாறன் வெப்பு ஆறப் பாடிக் காழிக்கே புக்காய்... வெட்கப்படாமல் அரையிலே பாயை ஆடையாகச் சுற்றுகின்ற அறிவிலிகளான சமணர்களைச் சேர்ந்து வாழ்ந்த தீமையைக் கொண்டிருந்த பாண்டியனுடைய வெப்புநோய் தணியுமாறு (‘மந்திரமாவது நீறு’ என்று தொடங்கும் பதிகத்தைப் பாடிய திருஞான சம்பந்தராகப் சீகாழித் தலத்திலே புகுந்திருந்தவனே!

வெற்பில் குறமானை முள் கானில் கால் வைத்து ஓடிப் போய் முற்சார் செச்சைப் புய வீரா... வள்ளி மலையிலே குறப்பெண்ணாகிய வள்ளியை, முள் நிறைந்ததான காட்டிலே கால் வைத்து ஓடிச் சென்று (தினைப்புனத்தை) முன்னர் சார்ந்தவனே!  வெட்சி மாலையை அணிந்த தோள்களை உடைய வீரனே!

முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே..... முத்தை ஒத்தவனே. முத்தீ (மூன்று வகையான அக்கினியால் செய்யும் வேள்விக்கு) அத்தா (தலைவனே), தூயவனே (சுத்தா) முத்தா (பற்றற்றவனே) முக்தியைத் தருபவனான பெருமாளே.

சுருக்க உரை

நாணமில்லாமல் அரையைச் சுற்றிப் பாயை ஆடையாக அணிந்திருக்கும் அறிவிலிகளான சமணர்களைச் சேர்ந்திருந்த தீமையைக் கொண்டிருந்த பாண்டியனைப் பீடித்த வெப்புநோய் தணியுமாறு ‘மந்திரமாவது நீறு’ என்று தொடங்கும் பதிகத்தைப் பாடியவரும்; சீகாழியில் இருந்தவருமான திருஞான சம்பந்தராக வந்தவனே!  வள்ளி மலையிலே இருந்த குறப்பெண்ணான வள்ளியைத் தேடி, முள்நிறைந்த காட்டிலே பாதம் பதித்து, ஓடிச் சென்று அவரை அடைந்தவனே!  வெட்சி மாலையைப் புனைந்த தோள்களை உடைய வீரனே! முத்தைப் போன்றவனே!  (ஆகவனீயம், காருகபத்தியம், தட்சிணாக்கினி என்னும்) மூன்றுவகையான தீக்களால் செய்யப்படும் வேள்விகளின் தலைவனே!  சுத்தனே! பற்றற்;றவனே!  முக்தியைத் தருபவனான பெருமாளே!

கள்குடிப்பதையும்; காமவசப்படுவதையும்; கோபம் கொள்வதையும் ஏற்றுக்கொண்ட தீய குணங்கள் நிறைந்தவர்கள் மீது தெளிவற்ற பாடல்களைப் பாடி, அந்தப் பாமாலையாலே அவர்களுடைய பெருமையை நிலைநாட்டி; அவ்வாறு பெற்று சேகரித்த பணத்தை முக்கோண வடிவிலான பெண்குறிக்கே கொடுத்தும் ஆசைப்பட்டும்; (இவ்வாறு) பெறப்படும் தானத்தின்மேலும் அற்பமான இந்த உடலின்மேலும் ஆசைவைத்து இளைத்திருப்பவனான அடியேனைச் சேர்ந்திருக்கும் குற்றங்களை நீக்கியருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com