பகுதி - 559

ஞானக் கடலில் மூழ்கிக் குளித்தும்

பதச் சேதம்

சொற் பொருள்

கலை மேவு ஞான பிரகாச

 

கலைமேவு: கலைகளெல்லாம் பொருந்திய; பிரகாச: ஒளிநிறைந்த;

கடல் ஆடி ஆசை கடல் ஏறி

 

கடலாடி: (ஞானமாகிய) கடலில் மூழ்கி; ஆசைக் கடலேறி: ஆசையாகிய கடலைக் கடந்து;

பலம் ஆய வாதில் பிறழாதே

 

பலமாய: பலம் ஆகிய, பலம் நிறைந்த; வாதில்: வாதங்களில்; பிறழாதே: மாறுபடாமல்;

பதி ஞான வாழ்வை தருவாயே

 

பதி: இறைவன்; பதிஞான வாழ்வு: இறைவனைப் பற்றிய ஞானமுள்ள வாழ்வு;

மலை மேவு மாய குறமாதின்

 

 

மனம் மேவு வால குமரேசா

 

வால: இளைய;

சிலை வேட சேவல் கொடியோனே

 

சிலை: வில்; சிலைவேட: வில்லேந்திய வேடனாக;

திருவாணி கூடல் பெருமாளே.

 

திருவாணி கூடல்: பவானித் தலம்;

கலைமேவு ஞானப் பிரகாசக் கடலாடி ஆசைக் கடலேறி ....  கலைகளெல்லாம் நிரம்பியுள்ள தன் அகத்திலே இருப்பதான ஞானமாகிய கடலில் மூழ்கிக் குளித்தும்; ஆசைகளாகிய கடலைக் கடந்தும்;

பலமாய வாதிற் பிறழாதே  பதிஞான வாழ்வைத் தருவாயே... வலுவானதும் உரத்து ஒலிப்பதுமான சமய வாதங்களில் நான் அகப்பட்டு திசைமாறிப் போகாதபடி, இறைவனைக் குறித்ததான சிவஞான வாழ்வைத் தந்தருள வேண்டும்.

மலைமேவு மாயக் குறமாதின் மனமேவு வாலக் குமரேசா... வள்ளி மலையிலே இருந்தவரும் அழகுடையவருமான வள்ளியின் மனத்திலே வீற்றிருக்கின்ற இளையவனான குமரேசா! 

சிலைவேட சேவற் கொடியோனே... வில்லேந்திய வேடனாக (வள்ளிக்காகக்) கோலம் தரித்தவனே!  சேவற் கொடியை ஏந்துபவனே!

திருவாணி கூடற் பெருமாளே.... ‘திருவாணிகூடல்’ எனப்படும் பவானி தலத்திலே வீற்றிருக்கின்ற பெருமாளே! 

சுருக்க உரை

வள்ளி மலையிலே இருந்தவளும் அழகுடையவளுமான வள்ளியின் மனத்திலே வீற்றிருக்கும் இளையவனான குமரேசனே! அவருக்காக வில்லேந்திய வேடனுடைய வடிவத்தில் வந்தவனே!  சேவற்கொடியை ஏந்தியவனே!  திருவாணிகூடலாகிய பவானி தலத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

எல்லாக் கலைகளும் நிரம்பியதும்; தன்னுள்ளே விளங்குவதுமான ஞானக் கடலில் மூழ்கிக் குளித்தும்; ஆசைகளையெல்லாம் கடந்தும்; வலுவானதும் உரத்து ஒலிப்பதுமான வாதங்களிலே நான் தவறிப்போய்விடாதபடி இறைவனைக் குறித்த சிவஞான வாழ்வைத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com