பகுதி - 561

மதுரையிலே சொக்கனாக எழுந்தருளி இருப்பவரும்

பதச் சேதம்

சொற் பொருள்

ஆனை முகவற்கு நேர் இளைய பத்த ஆறு முக வித்தக அமரேசா

 

பத்த: அன்பனே; வித்தக: ஞானியே (வித்தகம் என்பதற்கு சாமர்த்தியம் என்றும் ஞானம் என்றும் பிற பொருளும் உண்டு); அமரேசா: அமரர்களின் ஈசன், தேவர் தலைவன்;

ஆதி அரனுக்கும் வேத முதல்வற்கும் ஆரணம் உரைத்த குரு நாதா

 

ஆதி அரன்: பரமேஸ்வரன்;; வேத முதல்வன்: பிரமன்; ஆரணம்: வேதம், வேதப் பொருளான பிரணவம்;

தானவர் குலத்தை வாள் கொடு துணித்த சால் சதுர் மிகுத்த திறல் வீரா

 

தானவர்: அரக்கர்; சதுர் மிகுத்த: திறம் மிகுந்த; திறல்: வல்லமை;

தாள் இணைகள் உற்று மேவிய பதத்தில் வாழ்வொடு சிறக்க அருள்வாயே

 

 

வான் எழு புவிக்கு(ம்) மால் அயனுக்கும் யாவர் ஒருவர்க்கும் அறியாத

 

வான் எழு புவி: வானம் முதலான ஏழுவகையான உலகங்கள்; மால்: திருமால்; அயன்: பிரமன்;

மா மதுரை சொக்கர் மாது உமை களிக்க மா மயில் நடத்தும் முருகோனே

 

 

தேன் எழு புனத்தில் மான் விழி குறத்தி சேர மருவு உற்ற திரள் தோளா

 

மருவுற்ற: அணுகிய, நெருங்கிய;

தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை வேல் கொடு தணித்த பெருமாளே.

 

 

ஆனைமுக வற்கு நேரிளைய பத்த ஆறுமுக வித்தக அமரேசா... யானை முகனான விநாயகனுக்கு நேர் இளையவனாகத் தோன்றிய அன்பனே”  ஆறுமுகனே!  ஞானியே! தேவர்கள் தலைவவனே!

ஆதியரனுக்கும் வேதமுதல்வற்கும் ஆரணமுரைத்த குருநாதா... ஆதி முதல்வனான சிவனுக்கும்; வேத முதல்வனான பிரமாவுக்கும் வேதப் பொருளை உபதேசித்த குருநாதனே!

தானவர் குலத்தை வாள்கொடு துணித்த சால்சதுர் மிகுத்த திறல்வீரா... அரக்கர் குலத்தையே வாளாலே வெட்டிச் சாய்த்த நிரம்பிய திறம் மிகுந்த வல்லமை உடைய வீரனே!

தாளிணைகள் உற்று மேவிய பதத்தில் வாழ்வொடு சிறக்க அருள்வாயே... உன்னுடைய இரண்டு பாதங்களையும் அடைந்திருப்பதான நிலையில் நான் வாழ்ந்து சிறக்கும்படியாக அருள்புரிய வேண்டும்.

வானெழு புவிக்கு மாலும் அயனுக்கும் யாவரொருவர்க்கும் அறியாத... வானம் முதலான ஏழு உலகங்களும்; திருமாலும்; பிரமனும் என்று யாருமே அறிய முடியாதவனாகிய,

மாமதுரை சொக்கர் மாதுமை களிக்க மாமயில் நடத்து முருகோனே ..... சிறந்ததாகிய மதுரைத் தலத்தில் (விளங்குகின்ற) சொக்கனும் உமையம்மையும் மனம் மகிழுமாறு மயிலின் மீதமர்ந்து அதைச் செலுத்துகின்ற முருகனே!

தேனெழு புனத்தில் மான்விழி குறத்தி சேர மருவுற்ற திரள்தோளா..... வள்ளி மலையில் தேன் நிறைந்திருக்கின்ற தினைப்புனத்தில் (இருந்தவளான) மான்போன்ற கண்களை உடைய வள்ளி உன்னை வந்தடைய, அவளை அணைத்துக்கொண்ட திரண்ட தோள்களை உடையவனே!

தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை வேல்கொடு தணித்த பெருமாளே... (சூரனை நினைத்ததால்) தேவர்களுடைய மனத்திலே எழுந்த அச்சத்தை உன்னுடைய வேலாலே தீர்த்தருளிய பெருமாளே!

சுருக்க உரை

ஏழு உலகத்தவரும் திருமாலும் பிரமனும் எவருமே அறிய முடியாதவரும்; மதுரையிலே சொக்கனாக எழுந்தருளியிருப்பவரும் உமையம்மையும் மகிழும்படியாக மயில் வாகனத்தைச் செலுத்துகின்ற முருகனே!  தேன் நிறைந்ததான வள்ளி மலையிலுள்ள தினைப்புனத்திலே இருந்த மான்போன்ற கண்களையுடைய வள்ளிக் குறத்தி உன்னை அடையவும்; அவளைத் தழுவிய திரண்டு தோள்களைக் கொண்டவனே!  சூரனைக் குறித்து தேவர்களுடைய மனத்திலெழுந்த அச்சத்தை உன்னுடைய வேற்படையால் தீர்த்துவைத்த பெருமாளே!

ஆனைமுகனுக்கு இளையவனே!  ஆறு திருமுகங்களைக் கொண்டவனே!  ஞானியே!  தேவர்களுடைய தலைவனே!  ஆதி முதல்வரான சிவனுக்கும் வேத முதல்வனான பிரமனுக்கும் வேதப்பொருளை உபதேசித்தருளியவனே!  அரக்கர் குலத்தை வாளால் வெட்டிவீழ்த்திய திறம் நிறைந்த பராக்கிரமசாலியே!  உன்னுடைய இரண்டு திருவடிகளையும் மனத்தில் இருத்தி தியானித்து நிற்கின்ற நிலையில் நல்வாழ்வு பெறுமாறு அடியேனுக்கு அருளவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com