பகுதி - 563

மேக வண்ணனாகிய திருமாலின் மருகனே! 

பதச் சேதம்

சொற் பொருள்

குதி பாய்ந்து இரத்தம் வடி தொளை தொக்கு இந்த்ரிய குரம்பை வினை கூர் தூர்

 

இரத்தம்வடி தொளை: இரத்தம் வடிகின்ற துளைகளை உடையதும்; தொக்கு: த்வக்—தோல்; குரம்பை: கூடு, உடல்; வினைகூர்: வினை மிகுந்து; தூர்: நிரம்பியுள்ள;

குண பாண்டம் உற்று அகிலம் என கை கொண்டு இளைத்து அயர்ந்து சுழலாதே

 

குணபாண்டம்: குணங்களின் கொள்கலமாக இருக்கும் உடல்; உற்று: அடைந்து; அகிலம் எனக் கைகொண்டு: உடலையே உலகமாக (எல்லாமுமாக); சுழலாதே: திரியாமல்;

உதிதாம் பரத்தை உயிர் கெட பொன் கிண்கிணி சதங்கை வித கீத

 

உதிதாம்: உதிக்கின்ற; பரத்தை: பரம்பொருளை; உயிர்கெட: ஆன்மத்துவம் நீங்க;

உபய அம்புய புணையை இனி பற்றும் கருத்தை என்று தருவாயே

 

உபய: இரண்டு; அம்புய: தாமரை; புணை: மிதவை;

கதை சார்ங்கம் கட்கம் வளை அடல் சக்ரம் தரித்த கொண்டல் மருகோனே

 

சார்ங்கம்: திருமாலுடைய வில்; கட்கம்: வாள் (நாந்தகம்); வளை: சங்கம் (பாஞ்சஜன்யம்); கொண்டல்: மேகம், மேகவண்ணன்;

கருண அஞ்சன கமல விழி பொன் பைம்புன கரும்பின் மணவாளா

 

கருண அஞ்சன: கருணையையும் அஞ்சனத்தையும் கொண்ட; பைம்புனக் கரும்பு: பசிய புனத்தில் இருந்த கரும்பைப் போன்ற வள்ளி;

மதன அந்தகர்க்கு மகவு என பத்மம் தனில் பிறந்த குமரேசா

 

மதனாந்தகர்: மன்மதனை அழித்தவர்;

மதுராந்தகத்து வட திரு சிற்றம்பலத்து அமர்ந்த பெருமாளே.

 

 

குதிபாய்ந்தி ரத்தம் வடிதொளைத்தொக்கு இந்த்ரி யக் குரம்பை... இரத்தம் குதிபாய்ந்து வடிகின்ற தொளைகளைக் கொண்டதும்; தோலாகிய இந்திரியத்தை உடையதுமான கூடுபோன்றதும்;

வினைகூர்தூர் குணபாண்டமுற்று அகிலமெனக் கைக் கொண்டிளைத்து அயர்ந்து சுழலாதே... வினை மிகுந்து நிரம்பியுள்ளதும்; குணங்களுக்குக் கொள்கலமானதுமான இந்த உடல்தான் எனக்கு எல்லாமும் என்று (மனத்திலே) கொண்டு இளைத்தும் சோர்ந்தும் திரியாமல்;

உதிதாம்ப ரத்தை யுயிர்கெட பொற் கிண்கி ணிச்சதங்கை விதகீத... மனத்தினுள்ளே உதிப்பதான பரம்பொருளை, ஆன்மத்துவம் நீங்கப்பெற்று; பொற் கிண்கிணியும் சதங்கயையும் பலவிதமாக ஒலிப்பதான,

உபய அம்புயப் புணையையினி பற்றுங்க ருத்தை யென்று தருவாயே... இரண்டு கமலங்களைப் போன்ற உன்னுடைய திருவடிகளாகிய தெப்பத்தை என்றைக்குத் தரப் போகிறாய்? (இப்போதே தந்தருள வேண்டும்.)

கதைசார்ங்க கட்கம் வளை அடற்சக்ரந் தரித்த கொண்டல் மருகோனே... கௌமோதகி என்ற கதையையும்; சார்ங்கமாகிய வில்லையும்; நாந்தகம் என்கிற வாளையும்; பாஞ்சஜன்யம் என்னும் சங்கையும்; ஆற்றல் நிறைந்ததான் சுதர்சனக் சக்கரத்தையும் தாங்கியுள்ள மேகவண்ணனாகிய திருமாலின் மருகனே!

கருணாஞ்சனக் கமலவிழி பொற்பைம்பு னக் கரும்பின் மணவாளா... கருணை நிறைந்த்தும் மை தீட்டப்பட்டதுமான தாமரைக் கண்களைக் கொண்டவளும்; பசிய தினைப்புனத்தில் இருந்தவளும்; கரும்பை ஒத்தவளுமான வள்ளியின் மணாளனே!

மதன அந்தகர்க்கு மகவெனப் பத்மந்தனிற்பி றந்த குமரேசா... மன்மதனக்கு யமனாக விளங்கி சிவபெருமானுக்கு மகவாகத் தோன்றி, (சரவணப் பொய்கையிலே) தாமரைப் பூக்களின் மேலே உதித்த குமரேசனே!

மதுராந்தகத்து வடதிருச்சிற்றம்பலத்து அமர்ந்த பெருமாளே.... மதுராந்தகத்தில் வட திருச்சிற்றம்பலம் என்ற பெயரோடு விளங்கும் ஆலயத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

கௌமோதகி என்ற கதையையும்; சார்ங்கம் என்ற வில்லையும்; பாஞ்சஜன்யம் என்ற சங்கையும்; ஆற்றல் நிறைந்ததான சுதர்சனச் சக்கரத்தையும் பஞ்சாயுதங்களாகத் தரித்துள்ள மேக வண்ணனாகிய திருமாலின் மருகனே!  கருணை ததும்புவதும்; அஞ்சனம் தீட்டப்பெற்றதுமான விழிகளைக் கொண்டவளும்; தினைப் புனத்தில் இருந்தவளும்; கரும்பை ஒத்தவளுமான எள்ளியின் மணாளனே”  மன்மதனுக்கு அந்தகனாக இருந்து அழித்த பரமேஸ்வரரிடம் தோன்றி, சரவணப் பொய்கையின் தாமரை மலர்களிலே தோன்றிய குமரேசனே!  மதுராந்தகத்தில் வட திருச்சிற்றம்பலம் எனப்படும் ஆலயத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

குதித்துப் பாய்கின்ற ரத்தம் வடிவதும்; துளைகளை உடையதும்; தோலாகிய இந்திரியத்தோடு கூடியதும்; கூடு போன்றதும்; வினைகள் நிரம்பியதும்; குணங்களுக்குக் கொள்கலமாக விளங்குவதுமான இந்த உடலை அடைந்து, இதையே சகலமுமாகக் கருதிக்கொண்டு போற்றி அலைந்து திரிந்து இளைக்காதபடி; மனத்திலே உதிப்பதான பரம்பொருளை ஆன்மத்துவம் நீங்கும்படியாக

கிண்கிண சதங்கைகள் ஒலிப்பதான இரண்டு தாமரைகளைப் போன்ற உன் பாதங்ளாகிய தெப்பத்தை எனக்கு என்று அருளப் போகிறாய்? (அவற்றை இப்போதே அருள வேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com