பகுதி - 565

கடைக்கண் பார்த்தருள வேண்டும்

பதச் சேதம்

சொற் பொருள்

அலகின்மாறு மாறாத கலதி பூத வேதாளி அடைவு இல் ஞாளி கோமாளி அறம் ஈயா

 

அலகின்மாறு: விளக்குமாறு; மாறாத: மாற்றம் இல்லாத; கலதி: மூதேவி; பூத வேதாளி: பூதமும் பேயும்; அடைவில்: தகுதியற்ற; ஞாளி: நாய்; அறம் ஈயா: தருமம் செய்யாத;

அழிவு கோளி நாணாது புழுகு பூசி வாழ் மாதர் அருள் இலாத தோள் தோய மருள் ஆகி

 

அழிவு கோளி: அழிவைக் கொள்பவன், அழிவடைபவன்; நாணாது: வெட்கப்படாமல்: புழுகு: கஸ்தூரி; மருளாகி: மயக்கமுற்று;

பல கலை ஆகார மேரு மலை கர அசலா வீசு பருவ மேகமே தாரு என யாதும்

 

ஆகார: இருப்பிடமானவனே; கர அசலா: தோள் மலையைக் கொண்டவனே; தாரு: தரு, மரம், கற்பகத் தரு; யாதும்: ஒன்றும், சற்றும்;

பரிவு உறாத மா பாதர் வரிசை பாடி ஓயாத பரிசில் தேடி மாயாதபடி பாராய்

 

பரிவுறாத: அன்பில்லாத; பாதர்: பாதகர்; வரிசை பாடி: பெருமைகளைப் பாடி; ஓயாத: ஓய்வில்லாமல்; மாயாதபடி: அழியாதபடி;

இலகு வேலை நீள் வாடை எரி கொள் வேலை மா சூரில் எறியும் வேலை மாறாத திறல் வீரா

 

இலகு(ம்): விளங்கும்; வேலை: வேலாயுதத்தை; எரிகொள்: வடவமுகாக்கினியை உடைய; வேலை: கடல் (மீதும்); மாசூரில்: மாமரமாக நின்ற சூரன் (மீதும்); எறியும் வேலை: எறிகின்ற செயலில்; மாறாத: மாறுபாடில்லாத;

இமய மாது பாகீரதி நதி பாலகா சாரல் இறைவி கானம் மால் வேடர் சுதை பாகா

 

இமய மாது: மலைமகளான உமைக்கும்; பாகீரதி: கங்கைக்கும்; பாலகா: மகனே; சாரல் இறைவி: மலைச்சாரலைச் சேர்ந்த இறைவியான வள்ளி; வேடர் சுதை: வேடர் மகள் (சுதன்: மகன், சுதை: மகள்); பாகா: பக்கத்தில் கொண்டவனே;

கலக வாரி போல் மோதி வட ஐ ஆறு சூழ் சீத கதிர்காமம் மூது ஊரில் இளையோனே

 

கலக(ம்): பேரோசை(யைக் கொண்ட); வாரி: கடல்; வட ஐயாறு: வட திசையிலிருந்து தோன்றும் மாணிக்க கங்கை என்னும் ஆறு; சூழ்: சூழ்ந்த;

கனக நாடு வீடு ஆய கடவுள் யானை வாழ்வான கருணை மேருவே தேவர் பெருமாளே.

 

கனகநாடு: பொன்னுலகமாகிய தேவலோகம்; கடவுள் யானை: தேவானை;

அலகின்மாறு மாறாத கலதி பூத வேதாளி அடைவு இல் ஞாளி கோமாளி அறம் ஈயா அழிவு கோளி ..... விளக்குமாற்றைப் போன்றவனும்; மாறுதலற்ற மூதேவியும்; பூதமும் பேயும்; தகுதியற்ற நாயும்; கோமாளியும்; தருமம் செய்யாமல் அழிவைத் தேடிக்கொள்பவனுமான நான்;

நாணாது புழுகு பூசி வாழ் மாதர் அருள் இலாத தோள் தோய மருள் ஆகி... வெட்கமில்லாமல் கஸ்தூரியைப் போன்ற வாசனை திரவியங்களைப் பூசிக்கொள்கின்ற பெண்களின் அன்பற்ற தோள்களிலே தோய்வதில் மயக்கம் கொண்டு; (அவர்களுக்குத் தருவதற்காகப் பொருள்வேண்டி);

பல கலை ஆகார மேரு மலை கர அசலா  வீசு பருவ மேகமே தாரு என .. ‘பல கலைகளுக்கும் இருப்பிடமாக விளங்குபவனே! மேரு மலையை ஒத்த தோள்களைக் கொண்டவனே!  மழையை வீசுகின்ற பருவ மேகமே! கற்பகத் தருவே!’ என்றெல்லாம்,

யாதும் பரிவு உறாத மா பாதர் வரிசை பாடி ஓயாத பரிசில் தேடி மாயாதபடி பாராய்... சற்றும் அன்பற்ற மாபாதகர்களின் மீது அவர்களைப் பெருமைப்படுத்திப் பாடி பரிசுப் பொருள்களுக்காக ஓயாமல் அலைந்து அழியாதபடி அடியேனைக் கடைக்கண்ணால் பார்த்தருள வேண்டும்.

இலகு வேலை நீள் வாடை எரி கொள் வேலை மா சூரில் எறியும் வேலை மாறாத திறல் வீரா .... விளங்குகின்ற வேலாயுதத்தை, பெரிய வடவமுகாக்கினியைக் கொண்ணட கடலின் மீதும்; மாமரமாக நின்ற சூரனின் மீதும் எறிந்த செயலில் மாறுபடாமல் நிற்கும் திறல்கொண்ட வீரனே!

இமய மாது பாகீரதி நதி பாலகா சாரல் இறைவி கானம் மால் வேடர் சுதை பாகா... இமவான் மகளான உமைக்கும் கங்கைக்கும் பாலனே!  வள்ளி மலைச் சாரலில் இருந்த இறைவியும் வேடர்களின் குலமகளுமான வள்ளியை அருகில் கொண்டவனே! 

கலக வாரி போல் மோதி வட ஐ ஆறு சூழ் சீத கதிரகாமம் மூது ஊரில் இளையோனே... பேரோசையைக் கொண்ட கடலைப் போலப் பெருகி வருவதும்; வடதிசையிலிருந்து தோன்றுவதுமான மாணிக்க கங்கை என்ற ஆறால் சூழப்பட்டு குளிர்ச்சியாக விளங்குகின்ற கதிர்காமமாகிய பழைய நகரில் வீற்றிருக்கின்ற இளையவனே!

கனக நாடு வீடு ஆய கடவுள் யானை வாழ்வான கருணை மேருவே தேவர் பெருமாளே... பொன்னுலகான தேவலோகத்தை இருப்பிடமாகக் கொண்ட தேவானையின் வாழ்வாக அமைந்த கருணை மலையே!  தேவர்கள் பெருமாளே!

சுருக்க உரை

விளங்குகின்ற வேலாயுதத்தை, வடவமுகாக்கினியை உள்ளே அடக்கியதான கடலின் மீதும்; மாமரமாக நின்ற சூரனின் மீதும் எறிவதில் மாறுபடாமல் நிற்கின்ற திறல்கொண்ட வீரனே! இமவான் மகளான உமைக்கும் கங்கையாற்றுக்கும் பாலனே!  வள்ளி மலைச்சாரலில் இருந்தவளும்; வேடர்களின் குலமகளுமான வள்ளியை அருகில் கொண்டவனே!  பேரோசையைக் கொண்ட கடலைப் போல வடதிசையிலிருந்து பெருகுவதான மாணிக்க கங்கை என்ற ஆற்றால் சூழப்பட்டு குளிர்ச்சியாக விளங்கும் கதிர்காமத்தில் வீற்றிருப்பவனே!  பொன்னுலகமான தேவலோகத்தைச் சேர்ந்த தேவானையின் வாழ்வே!  கருணை மலையே!  தேவர்கள் பெருமாளே!

விளக்குமாற்றையும்; மூதேவியையும்; பூதம், பேய்களையும்; தகுதியற்ற நாயையும்; கோமாளியையும் போன்றவனும்; தருமம் செய்யாமல் அழிபவனும்; கஸ்தூரி பூசிய, அன்பற்ற பெண்களுடைய தோள்களிலே தோய்வதற்காகப் பொருள்வேண்டி, சற்றும் அன்பற்ற பாதகர்களையெல்லாம் ‘பல கலைகளுக்கும் இருப்பிடமே! மலைபோன்ற தோள்களைக் கொண்டவனே! மழை பொழிகின்ற பருவகாலத்து மேகமே! கற்பகத் தருவே’ என்றெல்லாம் அவர்களைப் பெருமைப் படுத்திப் பாடி, பரிசுப் பொருளுக்காக ஓயாமல் திரிகின்ற நிலையை அடியேன் அடைந்து அழிந்துபோகாத வண்ணம் கடைக்கண் பார்த்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com