பகுதி - 566

கொங்கணகிரி என்ற தலத்துக்கான பாடல்

எந்த வேண்டுதலும் இல்லாமல் முழுக்க முழுக்க இறைவனை வருணித்துத் துதிக்கின்ற பாடல்களைப் பார்த்திருக்கிறோம்.  இப்பாடலில் ஒவ்வொரு அடியும் ‘அருள்வாயே’ என்று முடிந்து, ஒவ்வோரடியிலும் ஒவ்வொரு கோரிக்கையை வைக்கிறது.  இது கோவை மாவட்டத்தில் சோமனூருக்கு அருகே உள்ள கொங்கணகிரி என்ற தலத்துக்கான பாடல்.  நான்காம் அடியில் முதலையுண்ட பாலனை உயிர்ப்பித்து எழுப்பிய சுந்தரமூர்த்தி நாயனாரின் அருட்செயல் பேசப்படுகிறது.  திருப்புக்கொளியூர் ஏரியில் குளிக்கச் சென்ற பாலனை ஒரு முதலை உண்டுவிட்டது.  இதற்குச் சில ஆண்டுகள் கழித்து இத்தலத்துக்கு வந்த சுந்தரமூர்த்தி நாயனார் இதைக் கேள்விப்பட்டு, ஒரு பதிகம் பாடி வறண்டு கிடந்த ஏரியை நிரம்பச் செய்ததும் அங்கே முதலை வந்து சேர்ந்தது.  அவர் பாடிய பதிகத்தின் வலிமையால் தான் உண்ட மகவை, இடையில் கழிந்த ஆண்டுகளின் வளர்ச்சியைப் பெற்றவனாக உமிழ்ந்தது.  ‘இது கைகூட எந்த ரகசியப்பொருள் வேலை செய்ததோ, அந்தப் பொருளை எனக்கு உபதேசித்தருள வேண்டும்’ என்று இந்த அடியில் வேண்டுகிறார்.

அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல்.   எல்லாச் சீர்களுமே சம அளவில் நான்கு நான்கு எழுத்துகளைக் கொண்டவையாக இருந்தாலும் சந்த அமைப்பில் வேறுபடுபவை.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் நான்கு குற்றெழுதுகளும், கணக்கில் சேராத இரண்டாமெழுத்தாக மெல்லொற்றையும் கொண்டிருக்கின்றன.  இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் இதே அமைப்பில் நான்கு குற்றெழுத்துகளைக் கொண்டிருந்தாலும் கணக்கில் சேராத இரண்டாமெழுத்து வல்லொற்றாக அமைந்திருக்கிறது.  முதலடியில் ‘ஐங்கரன்’ என்று விநாயகரோடு தொடங்குகின்ற பாடல், நான்காமடியில் ‘குஞ்சர முகற்கிளைய’ என்று விநாயகரோடேயே முடிவடைகிறது. 

தந்ததன தத்ததன தந்ததன தத்ததன
      தந்ததன தத்ததன                    தனதான

ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள
         ரந்திபக லற்றநினை               வருள்வாயே
      அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை
         அன்பொடுது திக்கமன             மருள்வாயே
தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
         சந்திரவெ ளிக்குவழி              யருள்வாயே
      தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்
         சம்ப்ரமவி தத்துடனெ             யருள்வாயே
மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன
         முன்றனைநி னைத்தமைய        அருள்வாயே
      மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி
         வந்தணைய புத்தியினை          யருள்வாயே
கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்
         கொண்டுஉட லுற்றபொரு         ளருள்வாயே
      குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு
         கொங்கணகி ரிக்குள்வளர்         பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com