பகுதி - 681

ஒழுக்கதைக் கைவிடாமல் உன்னைச் சிந்திக்கின்ற முறைகளில்
பகுதி - 681

பதச் சேதம்

சொற் பொருள்

மெய்க்கு ஊணை தேடி பூமிக்கே வித்தாரத்தில் பல காலும்

 

மெய்க்கு: உடலுக்கு; ஊணை: உணவை; வித்தாரம்: விரிவு (Extensiveness; Expansiveness);

வெட்காமல் சேரி சோரர்க்கே வித்து ஆசை சொல்களை ஓதி

 

சோரர்க்கே: திருடர்களுக்காகவே (கள்ள மனத்தையுடைய பொது மகளிருக்காகவே); வித்தாசைச் சொல்: வித்து+ஆசை—ஆசையை உண்டாக்கும் சொல்;

கைக்காணி கோணல் போதத்தாரை போல கற்பு அழியாது உன்

 

கைக்காணி: கையுறை, காணிக்கை; கோணல் போதத்தார்: கோணல் புத்திக்காரர்கள்; கற்பழியாது: ஒழுக்கம் தவறாது;

கற்பு ஊடுற்றே நல் தாளை பாடற்கே நல் சொல் தருவாயே

 

கற்பு ஊடுற்றே: கற்கும் நெறியில் நின்று (கற்பு என்பதற்குக் கல்வி என்பது முதன்மைப் பொருள்);

பொய் கோள் நத்து ஆழ் மெய் கோணி போய் முற்பால் வெற்பில் புன மானை

 

பொய்க் கோள்: (வேடன், வேங்கை மரம், கிழவன் முதலான) பொய்யான வேடங்களைக் கொண்டு; நத்தாழ்: நத்து ஆழ், விரும்பி ஆழ்ந்து, விரும்பியேற்று; முற்பால்: முன்னர்; வெற்பில்: மலையில்;

பொன் தோளில் சேர்க்கைக்காக பாத தாள் பற்றி புகல்வோனே

 

பொன்தோள்: அழகிய தோள்;

முக்கோண தானத்தாளை பால் வைத்தார் முத்த சிறியோனே

 

முக்காணத் தானத்தாள்: முக்கோணங்களால் அமைந்த ஸ்ரீசக்ரத்தை ஸ்தானமாகக் கொண்டவள்—உமை; பால்: பக்கத்தில்; முத்த: முத்தமிட;

முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே.

 

முத்தா: முத்துப் போன்றவனே; முத்தீ அத்தா: மூன்று வகையான தீயாலும் வளர்க்கப்படும் ஓமங்களுக்கும் தலைவனே; முத்தா: முக்தனே;

மெய்க்கு ஊணைத் தேடிப் பூமிக்கே வித்தாரத்தில் பல காலும் வெட்காமல் சேரிச் சோரர்க்கே வித்து ஆசைச் சொற்களை ஓதி... இந்த உடம்பின் பசிக்காக உணவைத் தேடியும்; உலகிலே வெட்கமில்லாமல் பலமுறை பொதுப்பெண்களுடைய சேரிக்குச் சென்றும்; கள்ள மனமுடைய அவர்களைத் தேடியும்; ஆசையை ஊட்டுகின்ற வார்த்தைக்ளப் பேசியும்;

கைக்காணிக் கோணல் போதத்தாரை போலக் கற்பு அழியாது... கையிலுள்ள பணத்தை அவர்களுக்குக் காணிக்கையாகக் கொடுத்தும் திரிகின்ற கோணல் புத்திக்காரர்களைப் போல நானும் ஒழுக்கத்தை இழக்காமல்;

உன் கற்பு ஊடுற்றே நல் தாளைப் பாடற்கே நல் சொல் தருவாயே... உன்னுடைய பெருமைகளைக் கற்கும் நெறியிலே நின்று; உன்னுடைய திருவடிகளைப் பாடுவதற்கான செம்மையான சொற்களைத் தந்தருள்வாயாக.

பொய்க் கோள் நத்து ஆழ் மெய்க் கோணிப் போய் முற்பால் வெற்பில் புன மானைப்... (வேடன், வேங்கை மரம், வளையல் செட்டி, விருத்தன் ஆகிய) பொய்யான வேஷங்களை மேற்கொள்ள விரும்பி, உடல் கோணிக் கூனலுற்று; மலையிலே புனம் காத்த வள்ளியுடைய,

பொன் தோளில் சேர்க்கைக்காகப் பாதத் தாள் பற்றிப் புகல்வோனே... அழகிய தோளைச் சேர்வதற்காக அவளுடைய திருவடிகளைப் பற்றிக்கொண்டு ஆசை வார்த்தைகளைப் பேசியவனே!

முக்கோண தானத்தாளைப் பால் வைத்தார் முத்தச் சிறியோனே... முக்கோணங்களால் அமைந்ததான ஸ்ரீசக்கரத்தில் உறைபவளான உமையம்மையை இடது பாகத்திலே கொண்டிருக்கும் சிவனார் முத்தமிடுகின்ற சிறியவனே!

முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே.... முத்தைப்போல அருமை வாய்ந்தவனே!  மூன்று வகை அக்கினியாலும்* செய்யப்படும் வேள்விக்குத் தலைவனே!  பரிசுத்தனே!  முக்தனே—பற்றற்றவனே! முக்தியைத் தரும் பெருமாளே!

(* காருகபத்தியம், ஆகவனீயம், தட்சிணாக்கினி என்பவை அக்கினியின் மூன்று வகைகள்)


சுருக்க உரை:

வேடன், வேங்கை மரம், வளையல் செட்டி, விருத்தன்  என்ற பொய்க்கோலங்களைப் புனைய விரும்பி; அந்த வேடத்தைத் தாங்கும்போது உடல் கோணியபடி சென்று தினைப்புனத்தில் இருந்த வள்ளியின் அழகிய தோளைச் சேர்வதற்காக அவளுடைய திருவடிகளைப் பற்றிக்கொண்டு ஆசைமொழிகளைப் பேசியவனே!  முக்கோணங்களால் அமைந்த ஸ்ரீசக்ரத்தில் உறைபவளான உமையம்மையை இடதுபாகத்திலே வைத்தவரான சிவனார் முத்தமிடும் இளைய மகனே! முத்தைப்போல அருமை வாய்ந்தவனே!  மூன்று வகை அக்கினியாலும் செய்யப்படும் வேள்விக்குத் தலைவனே!  பரிசுத்தனே!  பற்றற்றவனே! முக்தியைத் தரும் பெருமாளே!

இந்த உடலுக்காக உணவைத் தேடியும்; கொஞ்சமும் வெட்கமில்லாமல் பொதுமகளிர் வாழும் சேரிக்குப் பலமுறை சென்று ஆசைமொழிகளைப் பேசியும் திரிகின்ற கோணல்புத்திக்காரர்களைப் போல நான் ஒழுக்கதைக் கைவிடாமல் உன்னைச் சிந்திக்கின்ற முறைகளில் புத்தியைச் செலுத்தி உன் திருவடிகளைப் பாடுவதற்கான செம்மையான சொற்களைத் தந்தருளவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com