பகுதி - 688

பாடல் வடதிருமுல்லை வாயில் தலத்துக்கானது

‘நற்கதி பெறவேண்டும்’ எனக் கோருகின்ற இப்பாடல் வடதிருமுல்லை வாயில் தலத்துக்கானது.  இப்பாடலின் ஈற்றடியில் ‘மாசிலாமணி ஈசர்’ என்று குறித்திருப்பது வடதிருமுல்லைவாயிலில் வீற்றிருக்கும் சிவபெருமானின் பெயர்.

பெரும்பாலும் நெட்டெழுத்துகளைக் கொண்டு நடக்கும் இப்பாடலில் அடிக்கு ஒற்றொழித்து 37 எழுத்துகள் உள்ளன.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாய் இரண்டெழுத்துகளும்; இரண்டு, மூன்று, ஆறு, ஏழு, பத்து, பதினொன்று ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலுமாய் மூன்றெழுத்துகளும்; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்களில் மூன்று குறிலும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றுமாய் மூன்றெழுத்துகளும் உள்ளன.

தான தானன தானன தந்தன
      தான தானன தானன தந்தன
      தான தானன தானன தந்தன              தனதான

சோதி மாமதி போல்முக முங்கிளர்
         மேரு லாவிய மாமலை யுங்கொடு
         தூர வேவரு மாடவர் தங்கள்மு        னெதிராயே

      சோலி பேசிமு னாளிலி ணங்கிய
         மாதர் போலிரு தோளில்வி ழுந்தொரு
         சூதி னால்வர வேமனை கொண்டவ    ருடன்மேவி

மோதி யேகனி வாயத ரந்தரு
         நாளி லேபொருள் சூறைகள் கொண்டுபின்
         மோன மாயவ மேசில சண்டைக       ளுடனேசி

      மோச மேதரு தோதக வம்பியர்
         மீதி லேமய லாகிம னந்தளர்
         மோட னாகிய பாதக னுங்கதி          பெறுவேனோ

ஆதி யேயெனும் வானவர் தம்பகை
         யான சூரனை மோதிய ரும்பொடி
         யாக வேமயி லேறிமு னிந்திடு         நெடுவேலா

      ஆயர் வாழ்பதி தோறுமு கந்துர
         லேறி யேயுறி மீதளை யுங்கள
         வாக வேகொடு போதநு கர்ந்தவன்      மருகோனே

வாதி னால்வரு காளியை வென்றிடு
         மாதி நாயகர் வீறுத யங்குகை
         வாரி ராசனு மேபணி யுந்திரு           நடபாதர்
 

      வாச மாமல ரோனொடு செந்திரு
         மார்பில் வீறிய மாயவ னும்பணி
         மாசி லாமணி யீசர்ம கிழ்ந்தருள்        பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com