பகுதி - 691

ஏவல் செய்யும் பூதம், பேய்க்கூட்டங்களைப் படையாகக் கொண்டவரும்
பகுதி - 691

பதச் சேதம்

சொற் பொருள்

கருப்பு சாபன் அனைய இளைஞர்கள் ப்ரமிக்க காதல் உலவு நெடுகிய கடை கண் பார்வை இனிய வனிதையர் தன பாரம்

 

கருப்பு: கரும்பு; கருப்புச் சாபன்: கரும்பு வில்லை உடையவன், மன்மதன்;

களிற்று கோடு கலசம் மலி நவ மணி செப்பு ஓடை வனச நறு மலர் கனத்து பாளை முறிய வரு நிகர் இள நீர் போல்

 

களிற்றுக் கோடு: யானைத் தந்தம்; நவமணிச் செப்பு: நவரத்தினங்கள் நிறைந்த குடம்; ஓடை வனசம்: நீர்நிலையில் (மலர்ந்துள்ள) தாமரை;

பொருப்பை சாடும் வலியை உடையன அற சற்றான இடையை நலிவன புது கச்சு ஆர வடம் ஒடு அடர்வன என நாளும்

 

பொருப்பை: மலையை; சாடும்: எதிர்க்கும் (வெல்லும்); அற: மிகவும்; சற்றான: சற்றே ஆன (மெல்லிய); நலிவன: வருத்துவன;

புகழ்ச்சி பாடல் அடிமை அவர் அவர் ப்ரியப்பட்டு ஆள உரை செய் இழி தொழில் பொகட்டு எப்போது சரியை கிரியை செய்து உயிர் வாழ்வேன்

 

பொகட்டு: போகவிட்டு; சரியை: திருக்கோவிலில் அலகிடுதல், மெழுகுதல், விளக்கேற்றுதல் போன்ற திருப்பணிகளைச் செய்வது; கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்திய காரியங்களைச் செய்வது;  

இருட்டு பாரில் மறலி தனது உடல் பதைக்க கால் கொடு உதை செய்து அவன் விழ எயில் துப்பு ஓவி அமரர் உடல் அவர் தலை மாலை

 

மறலி: எமன்; எயில்: கோட்டை—திரிபுரங்கள்; துப்பு ஓவி: வலிமையை அழித்து; அமரர்: தேவர்கள்;

எலுப்பு கோவை அணியும் அவர் மிக அதிர்த்து காளி வெருவ நொடியினில் எதிர்த்திட்டு ஆடும் வயிர பயிரவர் நவநீத

 

எலுப்பு: எலும்பு (வலித்தல் விகாரம்); கோவை: மாலை; அதிர்த்து: முழக்கம் செய்து; வெருவ: அஞ்ச; நவநீத(ம்): வெண்ணெய்;

திருட்டு பாணி இடப முதுகு இடை சமுக்கு இட்டு ஏறி அதிர வருபவர் செலுத்து பூதம் அலகை இலகிய படையாளி

 

திருட்டு பாணி: திருடிய கரங்களை உடைய; சமுக்கு இட்டு: சேணம் இட்டு; அலகை: பேய்; இலகிய: விளங்குகிற; படையாளி: படையாகக் கொண்டவர்;

செடைக்குள் பூளை மதியம் இதழி வெள் எருக்கு சூடி குமர வயலியல் திருப்புத்தூரில் மருவி உறைதரு பெருமாளே.

 

செடைக்குள்: சடைக்குள்; பூளை: பூளைப் பூ; மதியம்: நிலவு; இதழி: கொன்றை;;

கருப்புச் சாபன் அனைய இளைஞர்கள் ப்ரமிக்கக் காதல் உலவு நெடுகிய கடைக் கண் பார்வை இனிய வனிதையர் தன பாரம்...கரும்பு வில்லை ஏந்தும் மன்மதனைப் போன்ற இளைஞர்கள் பிரமித்துப் போகும்படியான; இச்சையுடன் கூடிய நீண்ட கண்களின் கடைக்கண்ணால் பார்க்கின்ற இளம் மாதர்களின் தன பாரங்கள்,

களிற்றுக் கோடு கலச(ம்) மலி நவ மணிச் செப்பு ஓடை வனச நறு மலர் கனத்துப் பாளை முறிய வரு நிகர் இள நீர் போல்...யானையின் தந்தத்தையும் குடத்தையும் நிறைந்த நவரத்தினக் கலசத்தையும் நீரோடையின் தாமரைப் பூவையும் தென்னம்பாளை முறியும்படியான கனத்துடன் கூடிய இளநீரையும் போன்றவை; (அவை),

பொருப்பைச் சாடும் வலியை உடையன அறச் சற்றான இடையை நலிவன புதுக் கச்சு ஆர வடம் ஒடு அடர்வன என... மலையையும் வெல்கின்ற வலிமையை உடையவை; மிகவும் மெல்லியதான இடையை வருத்துபவை; புதிய கச்சோடும் முத்து மாலையோடும் போர்தொடுப்பவை—என்றெல்லாம்,

நாளும் புகழ்ச்சிப் பாடல் அடிமை அவர் அவர் ப்ரியப்பட்டு ஆள உரை செய் இழி தொழில் பொகட்டு எப்போது சரியை கிரியை செய்து உயிர் வாழ்வேன்... தினந்தோறும் (அப் பெண்களை) புகழ்ந்து பாடுகின்ற அடிமைகளாகளானவர்கள் உயர்வாகப் பேசுகின்ற இழிவான தொழிலை ஒழியவிட்டு எப்போது சரியை, கிரியைத் தொழில்களைச் செய்து வாழ்வேன்? (அவ்விதம் வாழுமாறு அருளவேண்டும்.)

இருட்டுப் பாரில் மறலி தனது உடல் பதைக்கக் கால் கொடு உதை செய்து அவன் விழ எயில் துப்பு ஓவி அமரர் உடல் அவர் தலை மாலை எலுப்புக் கோவை அணியும் அவர்... அஞ்ஞானமாகிய இருள் சூழ்ந்த இவ்வுலகில் யமன் தன்னுடைய உடல் பதைக்கும்படியாக அவனை உதைத்தவரும்; திரிபுரங்களின் வலிமையை அழித்தவரும்; தேவர்களின் உடலையும் தலையையும் எலும்பு மாலையாகக் கோத்து அணிந்திருப்பவரும்;

மிக அதிர்த்துக் காளி வெருவ நொடியினில் எதிர்த்திட்டு ஆடும் வயிர பயிரவர்... மிகவும் முழங்கி வந்த காளி நடுங்கும்படியாக ஒரு நொடிப்போதில் எதிர்த்து ஆடியவருமான வயிரவ பயிரவ மூர்த்தியும்;

நவநீத திருட்டுப் பாணி இடப முதுகு இடை சமுக்கு இட்டு ஏறி அதிர வருபவர்... வெண்ணெய் திருடிய கைகளையுடைய திருமாலாகிய ரிஷபத்தின் முதுகில் சேணத்தைப் போட்டு ஏறியமர்ந்து முழக்கத்துடன் வருபவரும்;

செலுத்துப் பூதம் அலகை இலகிய படையாளி செடைக்குள் பூளை மதியம் இதழி வெள் எருக்குச் சூடி குமர... ஏவல் செய்யும் பூதம், பேய்க்கூட்டங்களைப் படையாகக் கொண்டவரும்; சடாமுடியில் பூளைப் பூவையும் சந்திரனையும் கொன்றையையும் வெள்ளெருக்கையும் சூடியிருப்பவருமான சிவனாரின் மகனே!

வயலியல் திருப்புத்தூரில் மருவி உறைதரு பெருமாளே.... வயல்கள் நிறைந்த திருப்புத்தூரில் வீற்றிருக்கின்ற பெருமாளே!


சுருக்க உரை:

அஞ்ஞான இருள் நிறைந்த இவ்வுலகிலே யமன் பதைத்துப் போகும்படியாக அவனைக் காலால் உதைத்வரும்; திரிபுரங்களின் வலிமையைத் தொலைத்தவரும்; தேவர்களுடைய உடலையும் தலையையும் கோத்து எலும்பு மாலையாக அணிந்திருப்பவரும்; பெரிய முழக்கமிட்டு வந்த காளி அஞ்சும்படியாக எதிர்நடனம் புரிந்த வயிரவ பயிரவரும்; வெண்ணெய் திருடிய கரங்களையுடைய திருமாலாகிய ரிஷபத்தின் முதுகுக்கு மேலே சேணத்தை இட்டு அமர்ந்திருப்பரும்; பூத-பேய்க் கணங்களைப் படையாகக் கொண்டவரும்; சடாமுடியில் பூளைப் பூவையும் சந்திரனையும் கொன்றையையும் வெள்ளெருக்கையும் சூடியிருப்பவருமான சிவனாரின் மகனே!

கரும்பு வில்லையுடைய மன்மதனைப் போன்ற இளைஞர்கள் பிரமிக்கும்படியான; இச்சை கொண்டதும் நீண்டதுமான கண்ணின் கடைவிழிப் பார்வையைக் கொண்ட பெண்களுடைய தன பாரங்களை ‘யானையின் தந்தம்; குடம்; நிறைந்திருக்கும் நவரத்தினச் செப்பு; நீர்நிலையில் மலர்ந்திருக்கும் தாமரை; தென்னம்பாளை முறியும்படியான பாரத்துடன் காய்த்திருக்கும் இளநீர்; மலையையும் வெல்லக்கூடிய வலிமை கொண்டவை; மெல்லிய இடைய வருத்துபவை; புதிய கச்சோடும் முத்து மாலையோடும் போர்தொடுப்பவை என்றெல்லாம் புகழ்ந்து பாடுகின்ற அடிமைத்தனம் கொண்ட இழிவான தொழிலைக் கைவிட்டு சரியை, கிரியை மார்க்கங்களில் அடியேன் வாழுமாறு அருளவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com