பகுதி - 693

மன்மதன் போர்த்தொழிலை மேற்கொண்டுவிட்டான்
பகுதி - 693

பதச் சேதம்

சொற் பொருள்

மின்னார் பயந்த மைந்தர் தன் நாடு இனம் குவிந்து வெவ்வேறு உழன்று உழன்று மொழி கூறி

 

மின்னார்: (வீட்டுப்) பெண்கள்; பயந்த: பெற்றெடுத்த; குவிந்து வெவ்வேறு: ஒன்றாகச் சேர்ந்தும் தனித்தனியாகவும்; உழன்று: சென்று திரிந்து;

விண் மேல் நமன் கரந்து மண் மேல் உடம்பு ஒருங்கு அ மெல் நாள் அறிந்து உயிர் போ முன்

 

கரந்து: கண்ணில் படாமல் மறைந்து; மென்னாள்: மெல் நாள், மெலிவடையும் நாள்;

பொன் ஆர் சதங்கை தண்டை முந்நூல் கடம்பு அணிந்து பொய்யார் மனங்கள் தங்கும் அது போல

 

பொய்யார்: பொய்யை ஒழித்தார்;

பொல்லேன் இறைஞ்சி இரந்த சொல் நீ தெரிந்து அழுங்கு புல் நாய் உ(ள்)ளும் கவின்று புகுவாயே

 

அழுங்கு(ம்): வருந்தும்; புன்னாய்: புல்லிய (கீழான) நாய்; கவின்று: கவினுற, அழகுற;

பன்னாள் இறைஞ்சும் அன்பர் பொன் நாடு உற அங்கை தந்து பன்னகம் அணைந்து சங்கம் உற வாயில்

 

பன்னகம்: பாம்பு, ஆதிசேடன்;

பன்னூல் முழங்கல் என்று விண்ணோர் மயங்க நின்று பண் ஊதுகின்ற கொண்டல் மருகோனே

 

கொண்டல்: மேகம், மேகவண்ணன்;

முன்னாய் மதன் கரும்பு வில் நேர் தடம் தெரிந்து முன் ஓர் பொரு(ங்)கை என்று முனை ஆட

 

முன்னாய்: முன்னேமேயே; பொருகை: போர்த்தொழில்; முனையாட: போர்முனையில் நிற்க;

மொய் வார் நிமிர்ந்த கொங்கை மெய் மாதர் வந்து இறைஞ்சு முள்வாய் விளங்க நின்ற பெருமாளே.

 

மொய்வார்: கச்சுக்குள் நிறைந்திருக்கும் (வார்: கச்சு);

மின்னார் பயந்த மைந்தர் தன் நாடு இனம் குவிந்து வெவ்வேறு உழன்று உழன்று மொழி கூறி... (வீட்டில் இருக்கின்ற) பெண்களும்; பெற்றடுத்த மக்களும்; தன்னுடைய நாட்டிலுள்ளோரும்; தன் இனத்தவரும் ஒன்றாகக் கூடியும் தனித்தனியாகவும் அங்குமிங்கும் சென்று என்னைப்பற்றி பேசும்போது,

விண் மேல் நமன் கரந்து மண் மேல் உடம்பு ஒருங்கு அம் மெல் நாள் அறிந்து அடைந்து உயிர் போ முன்... வானிலே யமன் மறைந்திருக்க; பூமியிலே உள்ள இந்த உடலிலே இருக்கின்ற உயிருக்கு அது அடங்குகின்ற மெலிவுநாள் (அந்த யமன்) என்முன்னே தோன்றி உயிர் போவதற்கு முன்னாலே,

பொன் ஆர் சதங்கை தண்டை முந்நூல் கடம்பு அணிந்து பொய்யார் மனங்கள் தங்கும் அது போல... பொன் சதங்கையையும் தண்டையையும் முப்புரி நூலையும் கடப்ப மாலையும் அணிந்துகொண்டு; பொய்யை ஒழித்த மெய்ம்மை நிறைந்தவர்களுடைய உள்ளங்களில் குடியிருக்கும் அதே கோலத்தில்,

பொல்லேன் இறைஞ்சி இரந்த சொல் நீ தெரிந்து அழுங்கு புல் நாய் உ(ள்)ளும் கவின்று புகுவாயே... பொல்லாதவனான அடியேன் உன்னை வணங்கி இறைஞ்சுகின்ற சொல்லை நீ அறிந்துகொண்டு; மனம் வருந்துகின்ற இழிவான நாயான என் மனத்துள்ளும் அழகாக வந்து புகுந்திருக்கவேண்டும்.

பன்னாள் இறைஞ்சும் அன்பர் பொன் நாடு உற அங்கை தந்து... பலகாலமாக பணிந்து வேண்டிவந்த தேவர்கள் தங்களுடைய அமராவதிப் பட்டணத்தை திரும்பவும் அடையுமாறு கைகொடுத்து உதவியவனே!

பன்னாக(ம்) அணைந்து சங்கம் உற வாயில் பன்னூல் முழங்கல் என்று விண்ணோர் மயங்க நின்று பண் ஊதுகின்ற கொண்டல் மருகோனே... பாம்புப் படுக்கயில் சாய்ந்தபடி, பாஞ்சஜன்யமாகிய சங்கை வாயில் வைக்க, ‘எல்லா வேதங்களும் ஒன்று சேர்ந்து முழங்குகின்றனவோ’ என மயங்கித் தேவர்கள் நிற்கும்படியாக அந்தச் சங்கை முழக்குகின்ற மேகவண்ணனான திருமாலின் மருகனே!

முன்னாய் மதன் கரும்பு வில் நேர் தடம் தெரிந்து முன் ஓர் பொரு(ங்)கை என்று முனை ஆட... தன் கரும்புவில்லுக்கான இலக்கை முன்னதாகவே அறிந்துகொண்ட மன்மதன் போர்த்தொழிலை மேற்கொண்டுவிட்டான் என்னும்படியாக,

மொய் வார் நிமிர்ந்த கொங்கை மெய்ம் மாதர் வந்து இறைஞ்சு முள்வாய் விளங்க நின்ற பெருமாளே.... கச்சை நிறைத்து நிமிர்ந்துள்ள மார்பகங்களை உடைய; மெய்மைகொண்ட மாதர்கள் வந்து வணங்குகின்ற முள்வாய் என்னும் தலத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!


சுருக்க உரை:

பலகாலமாக இறைஞ்சிவந்த தேவர்கள் தங்களுடைய அமரலோகத்துக்குத் திரும்பும்படியாகக் கைகொடுத்து உதவியவனே!  ஆதிசேடனின்மேல் துயின்றபடி பாஞ்சஜன்யத்தை வாய்வைத்து முழங்க, ‘அனைத்து வேதங்களும்தான் முழங்குகின்றனவோ’ என்று தேவர்கள் மயங்கும்படியாக சங்கத்தை ஒலிக்கும் மேகவண்ணனாகிய திருமாலின் மருகனே!  தன் கரும்பு வில்லுக்கான இலக்கை முன்னதாகவே தேர்ந்தெடுத்துக்கொண்ட மன்மதன் (ஒளிந்துகொண்டிருக்கும் இடம்போல) கச்சை நிறைத்திருக்கும் மார்பகங்களால் மன்மதப் போரைத் தூண்டுகின்றவர்களும்; மெய்ம்மை நிறைந்தவர்களுமான மாதர்கள் வந்து வணங்குகின்ற முள்வாய்த் தலத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

வீட்டிலுள்ள பெண்களும் பெற்றெடுத்த மக்களும் நாட்டு மக்களும் தன் இனத்தவரும் ஒன்று சேர்ந்தும் தனித்தனியாகவும் திரிந்து என்னைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்க; வானத்திலே மறைந்துகொண்டிருக்கின்ற யமன், பூமியில் என் உயிர் மெலிவடையும் நாளை அறிந்து அருகில் வர, என் உயிர் போவதற்கு முன்னதாகவே,

பொய்யை ஒழித்த மெய்யன்பர்கள் இதயத்தில் பொற்சதங்கையும் தண்டையும் முந்நூலும் கடப்ப மாலையும் அணிந்தவண்ணமாக நீ வீற்றிருக்கும் அதே கோலத்தில் பொல்லாதவனும் புன்மையான நாயைப் போன்றவனுமான அடியேனுடைய உள்ளத்திலும் அழகுபெற வந்து குடிகொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com