பகுதி - 695

கருணை பொழிகின்ற விழிகளை உடையவளும்
பகுதி - 695

பதச் சேதம்

சொற் பொருள்

தலை வலையத்து தரம் பெறும் பல புலவர் மதிக்க சிகண்டி குன்று எறி தரும் அயில் செச்சை புயம் கய(வஞ்சி) குற வஞ்சியோடு

 

தலை: முதல்; வலையத்து: வளையத்தில், வட்டத்தில்; தலைவலையத்து: முதல் வரிசையில்; சிகண்டி: மயில்; குன்று: மலை, கிரெளஞ்சம்; அயில்: வேல்; செச்சை: வெட்சி மாலை; கயம்: கஜம், யானை; கய குய வஞ்சி: கஜவஞ்சியும் (தேவானையும்) குறவஞ்சியும் (வள்ளியும்);

தமனிய முத்து சதங்கை கிண்கிணி தழுவிய செக்க சிவந்த பங்கய சரணமும் வைத்து பெரும் ப்ரபந்தம் விளம்பு(ம்) காள

 

தமனிய(ம்): பொன், பொன்னாலான; பங்கய சரணமும்: தாமரைப் பாதமும்; ப்ரபந்தம்: பாடல்கள்; விளம்பும்: சொல்லும்; காள: இதற்கடுத்த சீரான ‘புலவன்’ என்பதோடு கூட்டும்போது காளப்புலவன் என்று வரும்; 

புலவன் என தத்துவம் தரம் தெரி தலைவன் என தக்க அறம் செய்யும் குண புருஷன் என பொன் பதம் தரும் சனனம் பெறாதோ

 

காளப்புலவன்: காளமேகம் (அருணகிரியாரும் காளமேகமும் சமகாலத்தவர்கள்); தத்துவம் தரம் தெரி தலைவன்: ஞானமும் தகுதியும் கொண்ட தலைவன்; குணபுருஷன்: சத்புருஷன்; சனனம்: பிறப்பு, பிறப்பை;

பொறையன் என பொய் ப்ரபஞ்சம் அஞ்சிய துறவன் என திக்கு இயம்புகின்ற அது புதுமை அ(ல்)ல சிற்பரம் பொருந்துகை தந்திடாதோ

 

பொறையன்: பொறுமை உடையவன்; துறவன்: துறவி; திக்கு இயம்புகின்ற: திசைகளெல்லாம், உலகெல்லாம் சொல்கின்ற; சிற்பரம்: அறிவுக்கு மேற்பட்ட நிலை;

குல சயிலத்து பிறந்த பெண் கொடி உலகு அடைய பெற்ற உந்தி அந்தணி குறைவு அற முப்பத்திரண்டு அறம் புரிகின்ற பேதை

 

குல சயிலத்து: குல பர்வதமாகிய இமய மலையில்; உந்தி: வயிறு, வயிற்றை உடைய; அந்தணி: அம்தணி—அழகிய, குளிர்ந்த; குறைவற: குறைவில்லாமல்; முப்பத்திரண்டு அறம்: இந்த முப்பத்திரண்டு அறங்களைப் பெரியபுராணத்தில் சொல்லியிருக்கும் விதத்தில் கீழே குறித்திருக்கிறோம்; பேதை: பெண், தேவி;

குண தரி சக்ர ப்ரசண்ட சங்கரி கண பண ரத்ந புயங்க கங்கணி குவடு குனித்து புரம் சுடும் சின வஞ்சி நீலி

 

குணதரி: நற்குணங்களை உடையவள்; சக்ர: ஸ்ரீசக்ரத்தில்; ப்ரசண்ட: வீர(த்துடன்); கண: கூட்டமான; பண: படம்கொண்ட; ரத்ந: நாகரத்தினத்தை உடைய; புயங்க: புஜங்க—பாம்பை; கங்கணி: வளையாக அணிந்தவள்; குவடு: (மேரு) மலையை; குனித்து: வளைத்து; புரம் சுடும்: திரிபுரங்களை எரிக்கும்; சினவஞ்சி: சினம்கொண்ட தேவி; நீலி: நீலநிறம் உடையவள்;

கலப விசித்ர சிகண்டி சுந்தரி கடிய விடத்தை பொதிந்த கந்தரி கருணை விழி கற்பகம் திகம்பரி எங்கள் ஆயி

 

கலப: தோகை; சிகண்டி சுந்தரி: மயில்போன்ற அழகி; கந்தரி: கழுத்தை உடையவள்; திகம்பரி: திக்கயே ஆடையாக உடையவள்; ஆயி: தாய்;  

கருதிய பத்தர்க்கு இரங்கும் அம்பிகை சுருதி துதிக்கப்படும் த்ரியம்பகி கவுரி திரு கோட்டு அமர்ந்த இந்திரர் தம்பிரானே.

 

த்ரியம்பகி: முக்கண்ணி; கவுரி: கெளரி—பொன்னிறம் உடையவள்; திருகோட்டு: திருக்கோட்டத்தில், ஆலயத்தில்; இந்திரர்: தேவர்கள்; தம்பிரானே: தலைவனே;

தலை வலையத்துத் தரம்பெறும்பல புலவர் மதிக்கச் சிகண்டி குன்றெறி தரும் அயில் செச்சைப் புயம் கயங்குற வஞ்சியோடு... முதல் வரிசையிலே நிற்கும் தகுதியுடைய பல புலவர்கள் போற்றித் துதிக்கின்ற உன்னுடைய மயிலையும்; கிரெளஞ்ச மலையைப் பெயர்த்து எறிகின்ற உன்னுடைய வேலையும்; வெட்சி மாலை அணிந்த உனது தோளையும்; (கயவஞ்சி) தேவானையையும்; (குறவஞ்சி) வள்ளியையும்;  

தமனிய முத்துச் சதங்கை கிண்கிணி தழுவிய செக்கச் சிவந்த பங்கய சரணமும் வைத்துப் பெரும்ப்ர பந்தம்விளம்பு காளப் புலவனென... பொன்னால் செய்யப்பட்ட முத்துச் சலங்கையும் கிண்கிணியும் பற்றியிருக்கன்ற உன்னுடைய சிவந்த பாதத் தாமரையையும் (பாட்டின் பொருளாக) வைத்துப் பெரும் பாமாலைகளைப் பாடவல்ல காளமேகப் புலவன் இவன் (அல்லது கரிய மேகத்தைப் போன்ற புலவன் இவன்) என்றும்;

தத்துவந்தரந்தெரி தலைவனென தக்கறஞ்செயுங்குண புருஷனென பொற் பதந்தருஞ் சனனம்பெறாதோ .... ஞானமும் தகுதியும் உடைய தலைவன் என்றும்; தக்க தருமங்களைச் செய்யும் நற்குணமுடைய சத்புருஷன் என்றும் எல்லோரும் கூறும்படியான மேலான பதவியைத் தருகின்ற பிறப்பை நான் அடைய மாட்டேனோ? (நான் அடையுமாறு அருள வேண்டும்.)

பொறையனெனப் பொய்ப் ப்ரபஞ்சம் அஞ்சிய துறவனென திக்கியம்புகின்றது புதுமையல சிற் பரம்பொருந்துகை தந்திடாதோ... இவன் பொறுமை உடையவன் என்றும்; பொய்யான இந்த உலகத்தைக் கண்டு அஞ்சுகின்ற துறவி என்றும் எல்லாத் திசைகளிலும் உள்ளவர்கள் சொல்வதில் அடியேனைச் ஒரு ஆச்சரியமும் இல்லை.  (இப்படிப்பட்ட அடியேன்) அறிவைக் கடந்த நிலையில் சேருமாறு (உனது திருவருள்) கைகொடுத்து உதவாதோ (உதவவேண்டும்).

குலசயிலத்துப் பிறந்த பெண்கொடி உலகடை யப்பெற் றவுந்தி அந்தணி குறைவற முப்பத்திரண்டு அறம்புரிகின்றபேதை...குலபர்வதமாகிய இமயாசலன் பெற்ற பெண்கொடியும்; உலகனைத்தையும் ஈன்றெடுத்த வயிற்றை உடையவளும்; அழகிய குளிர்சி(யான காருண்யத்தைக்) கொண்டவளும்; முப்பத்திரண்டு அறங்களை* குறைவில்லாமல் நடத்துவளும்; தேவியும்;

(முப்பத்திரண்டு அறங்களைக் கீழே காண்க.)

குணதரி சக்ரப் ப்ரசண்ட சங்கரி கணபண ரத்நப் புயங்க கங்கணி குவடு குனித்துப் புரஞ்சு டுஞ்சின வஞ்சி நீலி... நற்குணங்களை உடையவளும்; ஸ்ரீ சக்கரத்தில் வீரத்தோடு வீற்றிருக்கும் சங்கரியும்; கூட்டமான படங்களையும் நாக மணியையும் கொண்ட சர்ப்பங்களை வளையலாகத் தரித்தவளும்; மேருமலையை வில்லாக வளைத்து திரிபுரங்களைக் கோபத்தோடு எரித்த வஞ்சிக்கொடியும்; நீலநிறத்தை உடையவளும்;

கலப விசித்ரச் சிகண்டி சுந்தரி கடியவி டத்தைப் பொதிந்த கந்தரி கருணைவி ழிக்கற்பகம் திகம்பரி யெங்களாயி... அழகிய தோகையை உடைய மயிலின் சாயலைக் கொண்டவளும்; பேரழகியும்; கொடிய நஞ்சைக் கழுத்திலே கொண்டிருப்பளும்; கருணை பொழிகின்ற விழிகளை உடையவளும்; கற்பகத் தருவும்; திசைகளையே ஆடையாகக் கொண்டவளும்; எங்கள் தாயும்;

கருதிய பத்தர்க்கிரங்கும் அம்பிகை சுருதிதுதிக்கப் படுந்த்ரியம்பகி கவுரிதிருக்கொட்டமர்ந்த இந்திரர் தம்பிரானே.... தன்னை நினைக்கின்ற பக்தர்க்ளுக்கு அருள்புரியும் அம்பிகையும்; வேதங்கள் போற்றுகின்ற முக்கண்ணியும்; கௌரியுமான (காஞ்சி) காமாக்ஷியின் திருக்காயிலிலே வீற்றிருப்பவனே!  தேவர்கள் தலைவனான இந்திரனுடைய தம்பிரானே (தலைவனே)!


சுருக்க உரை:

குலபர்வதமாகிய இமயாசலன் பெற்ற பெண்கொடியும்; உலகனைத்தையும் ஈன்றெடுத்த வயிற்றை உடையவளும்; அழகிய குளிர்சி(யான காருண்யத்தைக்) கொண்டவளும்; முப்பத்திரண்டு அறங்களைக் குறைவில்லாமல் நடத்துவளும்; தேவியும்; நற்குணங்களை உடையவளும்; ஸ்ரீ சக்கரத்தில் வீரத்தோடு வீற்றிருக்கும் சங்கரியும்; கூட்டமான படங்களையும் நாக மணியையும் கொண்ட சர்ப்பங்களை வளையலாகத் தரித்தவளும்; மேருமலையை வில்லாக வளைத்து திரிபுரங்களைக் கோபத்தோடு எரித்த வஞ்சிக்கொடியும்; நீலநிறத்தை உடையவளும்; அழகிய தோகையை உடைய மயிலின் சாயலைக் கொண்டவளும்; பேரழகியும்; கொடிய நஞ்சைக் கழுத்திலே கொண்டிருப்பளும்; கருணை பொழிகின்ற விழிகளை உடையவளும்; கற்பகத் தருவும்; திசைகளையே ஆடையாகக் கொண்டவளும்; எங்கள் தாயும்; தன்னை நினைக்கின்ற பக்தர்க்ளுக்கு அருள்புரியும் அம்பிகையும்; வேதங்கள் போற்றுகின்ற முக்கண்ணியும்; கௌரியுமான (காஞ்சி) காமாக்ஷியின் திருக்காயிலிலே வீற்றிருப்பவனே!  தேவர்கள் தலைவனான இந்திரனுடைய தம்பிரானே!

முதல் வரிசையிலே இருக்கின்ற புலவர்கள் போற்றித் துதி செய்ய உன்னுடைய மயிலையும்; கிரெளஞ்ச மலையைப் பிளந்த வேலையும்; வெட்சி மாலையை அணிந்த உன்னுடைய தோளையும்; வள்ளி தேவானை அருகே விளங்கியிருக்கத் தோன்றுகின்ற உன்னுடைய சிவந்த தாமரைப் பாதத்தையும் பாடுபொருளாக வைத்துப் பிரபந்தங்களைப் புனைகின்ற காளமேகத்தைப் போன்ற புலவன் இவன் என்றும்; ஞானமும் தகுதியும் படைத்தவன் என்றும்; நற்குணங்களைக் கொண்டவன் என்றும்; தருமங்களைச் செம்மையாக நடத்துபவன் என்றும் உலகோர் சொல்லும்படியான பிறப்பை நான் அடையும்படி அருளவேண்டும்.

இவன் பொறுமை உடையவன் என்றும்; பொய்யான இந்த உலகத்தைக் கண்டு அஞ்சுகின்ற துறவியென்றும் உலகோர் சொல்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை.  அறிவைக் கடந்ததாகிய மேம்பட்ட நிலையை உனது திருவருளாலே தந்தருள வேண்டும்.

(பெரிய புராணம் கூறுகின்ற முப்பத்திரண்டு அறங்கள்: சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு,

பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு

உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல்,

அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல்,

நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி

அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய்,

ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல்,

தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு

உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com