பகுதி - 697

சந்தனத்தையும் முத்து மாலையும் அணிந்தவையும்
பகுதி - 697

பதச் சேதம்

சொற் பொருள்

பந்து ஆடி அம் கை நொந்தார் பரிந்து பைந்தார் புனைந்த குழல் மீதே

 

பரிந்து: ஆசைகொண்டு; பைந்தார்: பசிய (புதிய) பூமாலை;

பண்பு ஆர் சுரும்பு பண் பாடுகின்ற பங்கேருகம் கொள் முகம் மீதே

 

சுரும்பு: வண்டு; பங்கேருகம்: தாமரை;

மந்தார மன்றல் சந்து ஆரம் ஒன்றி வன் பாதகம் செய் தனம் மீதே

 

மன்றல்: நறுமணம்; சந்து: சந்தனம்; ஆரம்: முத்து மாலை;

மண்டு ஆசை கொண்டு விண்டு ஆவி நைந்து மங்காமல் உன்றன் அருள் தாராய்  

 

 

கந்தா அரன் தன் மைந்தா விளங்கு கன்றா முகுந்தன் மருகோனே

 

கன்றா: கோபிக்காத (கன்றுதல்: கோபித்தல்); அல்லது கன்று ஆ எனப் பிரித்து, பசுக்கள் கன்றுகளின்மேல் அன்புடைய என்றும் கொள்ளலாம்;

கன்றா விலங்கல் ஒன்று ஆறு கண்ட கண்டா அரம்பை  மணவாளா

 

கன்றா: கோபித்து; (நில்லா என்றால் நின்று; செய்யா என்றால் செய்து என்பதைப் போல); விலங்கல்: மலை, கிரெளஞ்சம்; ஆறுகண்ட: வழியை உண்டாக்கிய; கண்டா: வீரா; அரம்பை: தேவமகள்—தேவானை;

செம் தாது அடர்ந்த கொந்து ஆர் கடம்பு திண் தோள் நிரம்ப அணிவோனே

 

செந்தாது: சிவந்த பூந்தாது—மகரந்தம்; கொந்து: கொத்து; கடம்பு: கடப்ப(மாலை);

திண் கோடரங்கள் எண்கோடு உறங்கு செங்கோடு அமர்ந்த பெருமாளே.

 

கோடரங்கள்: குரங்குகள்; எண்கோடு: கரடியோடு (எண்கு: கரடி);

பந்து ஆடி அம் கை நொந்தார் பரிந்து பைம் தார் புனைந்த குழல் மீதே... பந்து விளையாடியதால் கைவலி ஏற்பட்ட பெண்கள் ஆசையோடு அணிந்திருக்கின்ற புதிய பூமாலையைக் கொண்ட கூந்தலின் மீதும்;

பண்பு ஆர் சுரும்பு பண் பாடுகின்ற பங்கேருகம் கொள் முகம் மீதே... அழகு மிகுந்த வண்டுகள் இசைபாடுகின்ற தாமரையை ஒத்த முகத்தின் மீதும்;

மந்தார மன்றல் சந்து ஆரம் ஒன்றி வன் பாதகம் செய் தனம் மீதே... மணம் மிகுந்த மந்தார மலரையும் சந்தனத்தையும் முத்து மாலையும் அணிந்தவையும்; கொடிய பாதகங்களுக்கு இடமான தனங்களின் மீதும்;

மண்டு ஆசை கொண்டு விண்டு ஆவி நைந்து மங்காமல் உன்றன் அருள் தாராய்... பெருகுகின்ற ஆசையைக்கொண்டு, உயிர் பிரிவதுபோல நான் வருந்திச் சோர்வடையாமல் உன்னுடைய திருவருளைத் தந்தருள வேண்டும்.

கந்தா அரன் தன் மைந்தா விளங்கு கன்று ஆ முகுந்தன் மருகோனே... கந்தா! அரன் மகனே! விளங்குகின்ற கன்றுகளுக்கும் பசுக்களுக்கும் பிரியமான முகுந்தனுடைய மருகனே!

கன்றா விலங்கல் ஒன்று ஆறு கண்ட கண்டா அரம்பை மணவாளா... கோபம் கொண்டு கிரெளஞ்ச மலையை பிளந்து வழி உண்டாக்கிய வீரனே!  தேவானையின் மணாளனே!

செம் தாது அடர்ந்த கொந்து ஆர் கடம்பு திண் தோள் நிரம்ப அணிவோனே... சிவந்த மகரந்தம் பொருந்தியதும்; கொத்துகளாக அமைந்ததுமான கடப்ப மலர்களால் தொடுத் மாலையை திண்மையான தோள்களை நிறைக்குமாறு அணிபவனே!

திண் கோடரங்கள் எண்கோடு உறங்கு செங்கோடு அமர்ந்த பெருமாளே.... வலிய குரங்குகள் கரடிகளோடு சேர்ந்து உறங்குகின்ற திருச்செங்கோட்டில் வீறிறிருக்கின்ற பெருமாளே!


சுருக்க உரை:

கந்தா!  சிவன் மகனே! பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் பிரியமானவரான முகுந்தனின் மருகனே! சினங்கொண்டு கிரெளஞ்சத்தைப் பிளந்து வழி உண்டாக்கய வீரனே!  தேவானை மணாளனே!  சிவந்த மகரந்தம் நிரம்பிய கடப்ப  மலர்க்கொத்துகளால் தொடுக்கப்பட்ட மாலையைத் திண்மையான தோள்களை நிறைக்குமாறு அணிபவனே!  வலிய குரங்குகள் கரடிகளோடு சேர்ந்து உறங்குகின்ற திருச்செங்கோட்டில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

கை வலிக்கப் பந்தாடுகின்ற பெண்கள் ஆசையோடு சூடிய புதிய மாலைகளைக் கொண்ட கூந்தலின் மீதும்; அழகிய வண்டுகள் இசைபாடுகின்ற தாமரையை ஒத்த முகத்தின் மீதும்; மந்தார மலர், சந்தனம், முத்து மாலை ஆகியவற்றோடு சேர்ந்தவையும் கொடிய பாதகங்களுக்கு இடம் தருபவையுமான தனங்களின் மீது பொங்கி எழுகின்ற ஆசையால் உயிர் பிரிவது போல வருந்தி நான் சோர்வடையாதபடி உன்னுடைய திருவருளைத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com