பகுதி - 701

வழிபாடு நடத்தப்படும் காமகோட்டம்
பகுதி - 701

பதச் சேதம்

சொற் பொருள்

சீ சி முப்புர காடு 
நீறுஎழ சாடி நித்திரைகோசம் 
வேர் அற சீவன் முத்தியில்கூடவே 
களித்துஅநுபூதி

 

சீசி: சீச்சி (என்று ஒதுக்க வேண்டிய); முப்புர: திரிபுர; முப்புரக் காடு: திரிபுரங்களைப் போன்ற மும்மலங்களாகிய காடு; கோசம்: (ஆன்மாவை மூடிக் கொண்டிருக்கும்) உறைகள்;

சேர அற்புதகோலமாம் என
சூரியபுவிக்கு ஏறி ஆடுக
சீலம் வைத்து அருள்தேறியே 
இருக்கஅறியாமல்

 

சூரியப் புவி: சூரிய மண்டலம்;

பாசம் விட்டு விட்டுஓடி 
போனது போதும்இப்படிக்கு 
ஆகிலேன்இனி

பாழ் வழிக்குஅடைக்காமலே
பிடித்து அடியேனை

 

 

பார் அடைக்கலகோலமாம் 
என தாபரித்து நித்தாரம்ஈது 
என பாத பத்மநல் 
போதையேதரித்து அருள்வாயே

 

தாபரித்து: ஆதரித்து; நித்தாரம்: நித்தியமாகிய ஆரம், ஆபரணம்; போதையே: மலரையே;

தேசு இல் துட்டநிட்டூர கோது 
உடை சூரை வெட்டி எட்டுஆசை 
ஏழ் புவி தேவர் முத்தர்கட்குஏதமே 
தவிர்த்துஅருள்வோனே

 

கோதுடை: குற்றம் உள்ளவனான; எட்டாசை: எட்டு திக்குகள் (ஆசை: திக்கு); ஏழ்புவி: ஏழு உலகங்கள்; ஏதம்: துன்பம்;

சீர் படைத்த அழல்சூலம் 
மான் மழு பாணி வித்துரு 
பாதன்ஓர் புற சீர் திகழ் 
புகழ்பாவை ஈன 
பொன்குருநாதா

 

வித்துரு: வித்ருமம்=பவளம்; ஈன: ஈன்ற;

காசி முத்தமிழ் கூடல்ஏழ் 
மலை கோவல்அத்தியின் 
கானம்நான் மறைக்காடு
பொன் கிரி காழிஆரூர் 
பொன் புலிவேளூர்

 

முத்தமிழ்க் கூடல்: மதுரை; ஏழ்மலை: திருவேங்கடம்; கோவல்: திருக்கோவலூர்; அத்தியின் கானம்: திருவானைக்கா; நான்மறைக்காடு: வேதாரணியம்; பொன்கிரி: கயிலை; காழி: சீகாழி; ஆரூர்: திருவாரூர்; பொன்: அழகிய; புலி(யூர்): சிதம்பரம்; வேளூர்: புள்ளிருக்கு வேளூர்;

காள அத்தி அப்பால்சிரா 
மலை தேசம்முற்றும் 
முப்பூசைமேவி நல் காமகச்சியில் சாலமேவும் 
பொன்பெருமாளே.

 

காள அத்தி: திருக்காளத்தி; சிரா மலை: திரிசிரா மலை; காம: விரும்பத்தக்க; கச்சியில்: காஞ்சியில்;

சீசி முப்புரக் காடு நீறெழச் சாடி நித்திரைக் கோசம் வேரற சீவன் முத்தியிற் கூடவே... சீச்சீ என்று ஒதுக்கத்தக்க திரிபுரங்களைப் போன்ற (ஆணவ, கன்ம, மாயை என்னும்) மும்மலங்களாகிய காடு வெந்து சாம்பலாக்கி ஒழித்து; நித்திரையையும் (ஆன்மாவை மூடிக்கொண்டிருக்கும்) உறைகளையும் வேரறுத்து சீவன் முக்தி நிலையை அடைந்து;
 
களித்து அநுபூதி சேர அற்புதக் கோல மாமென சூரியப்புவிக் கேறி யாடுக சீலம் வைத்தருள் தேறியேயிருக்க அறியாமல்... களிப்போடு அனுபவ ஞானத்தை அடைவதற்குரிய அற்புதக் கோலம் இது (என்று சொல்லும்படியாக); சூரிய மண்டலத்தைப் போன்ற பெருஞ்சோதியைச் சேர்வதற்கான சீலத்தைக் கைக்கொண்டு உனது திருவருளை உணர்ந்திருக்க அறியாமல்;  
 
பாசம் விட்டுவிட் டோடி போனது போது மிப்படிக்கு ஆகிலேன் இனிப் பாழ்வழிக்கு அடைக்காமலே... பாசங்கள் (என்னைவிட்டு) ஓடிப்போவதும் (திரும்பவந்து சேர்வதுமான) இந்நிலை எனக்குப் போதும் போதும்; இது இனியெனக்கு வேண்டவே வேண்டாம்; இந்தப் பாழும் நெறியில் இனிமேல் நான் அடைபடாமல்;
 
பிடித்து அடியேனைப் பார் அடைக்கலக் கோலமாமென தாபரித்து நித்த ஆரம் ஈதென பாத பத்மநற் போதை யேதரித்தருள்வாயே.... என்னைப் பற்றிக்காண்டு; ‘அடைக்கலமாக  நான் இருக்கிறேன்’ என்ற கோலத்தைக் காட்டி ஆதரவாக; நித்திய ஆபரணம் இதுவே என்னும்படியான உன் திருவடித் தாமரைகளை என் மீது பதித்தருளவேண்டும்.
 
தேசில் துட்டநிட்டூர கோதுடைச் சூரை வெட்டி யெட் டாசை யேழ்புவித் தேவர் முத்தர்கட்கு ஏத மேதவிர்த்தருள்வோனே... ஞானமில்லாத கெடியவனும் குற்றங்கள் நிறைந்தவனுமான சூரனை வெட்டி, எட்டு திசைகளிலும், ஏழு உலகங்களிலும் இருக்கும் தேவர்களுக்கும் ஜீவன் முக்தர்களுக்கும் ஏற்பட்ட துன்பத்தைத் தீர்த்து அருளியவனே!
 
சீர்ப டைத்தழற் சூல மான்மழுப் பாணி வித்துருப் பாதன் ஓர்புறச் சீர்தி கழ்ப்புகழ்ப் பாவை யீனபொற் குருநாதா... (திருக்கரங்களிலே) சிறப்புமிக்க தீயையும் சூலத்தையும் மானையும் மழுவையும் ஏந்தியவரும்; பவளம் போன்ற சிவந்த் பாதங்களை உடையவருமான சிவபெருமானுடைய இடது பாகத்திலே அமர்ந்த உமையம்மை ஈன்ற அழகிய குருநாதா!
 
காசி முத்தமிழ்க் கூட லேழ்மலைக் கோவ லத்தியிற் கான நான்மறைக் காடு பொற்கிரிக் காழி யாருர்பொற் புலிவேளூர்... காசி, முத்தமிழ்ச் சிறப்புடைய மதுரை, திருவேங்கடம், திருக்கோவலூர், திருவானைக்கா, வேதாரணியம், கயிலை, சீகாழி, திருவாரூர், சிதம்பரம், புள்ளிருக்கு வேளூரான வைத்தீசுவரன் கோவில்,
 
காள அத்தியப் பால்சி ராமலை தேச முற்றுமுப் பூசை மேவி நற் காம கச்சியிற் சால மேவுபொற் பெருமாளே.... திருக்காளத்தி, திரிசிராப்பள்ளி முதலான எல்லாத் தலங்களிலும், நாடு முழுவதிலும் (வீற்றிருப்பதோடு); மூன்று காலங்களிலும் வழிபாடு நடத்தப்படும் காமகோட்டம் எனப்படும் காஞ்சியை மிகவும் விரும்பி வீற்றிருக்கின்ற அழகிய பெருமாளே!
 
சுருக்க உரை
 
ஞானமற்ற துஷ்டனும் கொடுமை வாய்ந்த்வனும் குற்றம் நிறைந்தவனுமான சூரனை வெட்டி, எட்டுத் திக்கிலும் ஏழு உலகங்களிலும் உள்ள தேவர்களுக்கும் ஜீவன் முக்தர்களுக்கும் ஏற்பட்ட துன்பத்தைத் துடைத்தருளியவனே!  கரங்களிலே தீயையும் சூலத்தையும் மானையும் மழுவையும் ஏந்தியவரும்; பவளம் போன்ற சிவந்த திருவடிகளைக் கொண்டவருமான சிவபெருமானின் இடப்பாகத்திலே அமர்ந்திருக்கும் உமையம்மை ஈன்ற குருநாதனே! காசி, முத்தமிழால் விளக்கம்பெற்ற மதுரை, திருவேங்கடம், திருக்கோவலூர், திருவானைக்கா, வேதாரணியம், கயிலை, சீகாழி, திருவாரூர், புலியூர் எனப்படும் சிதம்பரம், புள்ளிருக்கு வேளூரான வைத்தீசுவரன் கோவில், திருக்காளத்தி, திரிசிராமலை என நாடு முழுவதிலும் வீற்றிருந்து; மூன்று வேளையும் சிறப்பான பூசைகள் நடைபெறுகின்ற காமகோட்டமாம் காஞ்சியை விரும்பிவந்து வீற்றிருக்கின்ற பெருமாளே!
 
சீச்சீ என்று ஒதுக்கத்தக்கவையும்; முப்புரங்களைப் போன்று தீங்கு செய்கின்ற மும்மலமாகிய காட்டை எரித்துச் சாம்பலாக்கி; உறக்கத்தாலும் பஞ்ச கோசங்களாகிய (ஆன்மாவை மூடியிருக்கும்) உறைகளை ஒழித்து; சீவன்முக்தி நிலையை நான் அடைந்து, களிப்புற்று; அனுபவ ஞான நிலையைச் சேர்வதற்கான அற்புதத் தோற்றம் இது என்று சொல்லத்தக்க சூரிய மண்டலத்தைப் போன்ற பெருஞ்சோதியைக் காண்பதற்கான ஒழுக்க நிலையை அடைந்து உன்னுடைய திருவருளை உணர்ந்திருக்க ஒட்டாமல் என்னைப் பீடிக்கின்ற
 
இந்த பந்த பாசங்களில் நான் அகப்படுவதும் விடுபடுவதும் மீண்டும் அகப்படுவதுமாய் இருக்கன்ற இந்த நிலைமையில் நான் உழல்வது போதும் போதும்.  மீண்டும் இப்படிப்பட்ட நிலையை நான் அடையாமல் உன்னை அடைக்கலமாக அடைந்த என்னை ஆதரித்து; நித்திய ஆரம் எனத்தக்க உன்னுடைய பாத தாமரையாகிய மலரிலே என்னை ஏற்றருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com