பகுதி - 661

செழுமையான தோகையையுடைய மயிலில் வருகின்ற முருகனே!
பகுதி - 661

பதச் சேதம்

சொற் பொருள்

கருப்பு வி(ல்)லில் மருபகழி தொடுத்து 
மதன்விடுத்து அனைய
கடைக(ண்)ணொடு 
சிரித்துஅணுகு கருத்தினால்விரகு 
செய் மடமாதர்

 

கருப்பு வில்: கரும்பு வில்; மருப் பகழி: மணம் வீசும் அம்பு (மலர் அம்பு); விரகுசெய்: தந்திரமான செயல்களைச் செய்கின்ற;

கத களிறு திடுக்கம் உறமதர்த்து 
மிக எதிர்த்துமலை கனத்த 
இருதனத்தின் 
மிசை கலக்கும்மோகனம் 
அதில்மருளாதே

 

கதக் களிறு: சினம்கொண்ட யானை; திடுக்கம் உற: திடுக்கிட; மதர்த்து: செருக்குற்று; மோகனம்: மோகம்; மருளாதே: மயக்கம் கொள்ளாமல்;

ஒரு படுதல் விருப்புஉடைமை 
மனத்தில் வரநினைத்து அருளி
உனைபுகழும் எனை புவியில் ஒருத்தனாம் 
வகை திருஅருளாலே

 

ஒருப்படுதல்: ஒருமை உணர்வை அடைதல்; ஒருத்தன் ஆம் வகை: நிகரற்ற (புல)வனாக ஆகும் விதத்தில்;

உருத்திரனும் விருத்திபெற 
அனுக்கிரகி எனகுறுகி உரைக்க மறைஅடுத்து 
பொருள் உணர்த்தும் 
நாள்அடிமையும்உடையேனோ

 

விருத்தி பெற: விளக்கம் பெற;

பருப்பதமும் உரு பெரியஅரக்கர்களும் 
இரைக்கும்ஏழு படி கடலும்அலைக்க 
வல பருத்ததோகையில் 
வருமுருகோனே

 

பருப்பதம்: பர்வதம், கிரெளஞ்ச மலை; இரைக்கும்: ஒலிக்கின்ற; எழுபடி: ஏழு உலகங்களும்; கடலும்: ஏழு கடல்களும்; அலைக்கவ(ல்)ல: கலக்க வல்ல; பருத்த தோகை: செழிப்பான தோகை(யுள்ள மயில்);

பதித்த மரகதத்தினுடன்இரத்னமணி 
நிரைத்த பல பணி ப(ன்)னிரு 
புய சயில பரக்கவே இயல் 
தெரிவயலூரா

 

நிரைத்த: வரிசையாக அமைக்கப்பெற்ற; பல பணி: பல ஆபரணங்களை; புய சயில: தோள் மலை(யை உடையவனே); பரக்கவே: விரிவாக; இயல்: இயற்றமிழை;

திருப்புகழைஉரைப்பவர்கள்
படிப்பவர்கள் மிடிப்பகைமை
செயித்தருளும்இசை 
பிரிய திருத்தமாதவர் புகழ் 
குருநாதா

 

உரைப்பவர்கள்: சொல்பவர்கள்; மிடி: வறுமை; இசைப் பிரிய: இசையை விரும்புபவனே; திருத்த மாதவர்: திருந்திய ஒழுக்கத்தை உடைய மாதவர்கள்;

சிலை குறவர் இலைகுடிலில் 
புகை களகமுகில் புடை 
செல் திருபழநி 
மலைக்குள் உறை திருக்கை 
வேல் அழகியபெருமாளே.

 

சிலைக் குறவர்: வில்லேந்திய குறவர்கள்; இலைக்குடில்: ஓலைக் குடிசை; புகைக் களக: புகை(போலக்) கரிய;

கருப்பு வி(ல்)லில் மருப் பகழி தொடுத்து மதன் விடுத்து அனைய கடைக் க(ண்)ணொடு சிரித்து அணுகு கருத்தினால் விரகு செய் மடமாதர்... கரும்பு வில்லிலே வாசமுள்ள மலர்க்கணைகளைத் தொடுத்த மன்மதன் எய்ததைப் போன்ற கடைக்கண் விழிப் பார்வையோடு சிரித்தும் நெருங்கியும்; தந்திரமான செயல்களைச் செய்யும் இளம் பெண்களுடைய,
 
கதக் களிறு திடுக்கம் உற மதர்த்து மிக எதிர்த்து மலை கனத்த இரு தனத்தின் மிசை கலக்கும் மோகனம் அதில் மருளாதே... சினங்கொண்ட யானையும் திடுக்கிட்டுப் போகும்படியானதும்; செருக்கு நிறைந்ததும்; மலைகளைப்போல கனத்திருப்பதுமான மார்பகங்களின்மீது மோகம்கொண்டு மயக்கம் அடையாமல்;
 
ஒருப் படுதல் விருப்பு உடைமை மனத்தில் வர நினைத்து அருளி உனைப் புகழும் எனைப் புவியில் ஒருத்தனாம் வகை திரு அருளாலே... என் மனம் ஒருமைப்படுவதை விரும்பும்படியாக உனது திருவுளத்தால் கருதி, அருள்புரிந்து, உன்னையே பாடுகின்ற என்னை திருவருளால் என்னை உன்னுடைய திருவருளால் நிகரற்ற புலவனாக்கி;
 
உருத்திரனும் விருத்தி பெற அனுக்கிரகி எனக் குறுகி உரைக்க அ(ம்) மறை அடுத்து பொருள் உணர்த்தும் நாள் அடிமையும் உடையேனோ... ‘எனக்கு விளங்குமாறு உபதேசித்தருள வேண்டும்’ என்று ருத்திர மூர்த்தியே உன்னைக் கேட்க; அவருக்கு நீ உபதேசித்த ரகசியப் பொருளான பிரணவத்தை அடியேனுக்கும் உபதேசிக்கின்ற நாள் ஒன்று உண்டோ? (அடியேனுக்கும் விரைவில் உபதேசித்தருள வேண்டும்.)
 
பருப்பதமும் உருப் பெரிய அரக்கர்களும் இரைக்கும் எழு படிக் கடலும் அலைக்க வ(ல்)ல பருத்த தோகையில் வரு முருகோனே... கிரெளஞ்ச மலையையும்; பெரிய உருவத்தைக் கொண்ட அரக்கர்களையும்; ஏழு உலகங்களையும்; ஓசையோடு எழுகின்ற ஏழு கடல்களையும் கலக்கவல்ல செழுமையான தோகையை உடைய மயில்மீது அமர்ந்து வருகின்ற முருகா!
 
பதித்த மரகதத்தினுடன் இரத்னமணி நிரைத்த பல பணிப் ப(ன்)னிரு புயச் சயில பரக்கவே இயல் தெரி வயலூரா... பதிக்கப்பட்ட மரகதத்தோடு ரத்தினங்கள் வரிசையாக அமைந்த பலவிதமான ஆபரணங்களை மலைபோன்ற பன்னிரு தோள்களிலும் தரித்தவனே!  இயல் தமிழை விரிவாக அறிந்த வயலூரனே!
 
திருப்புகழை உரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப் பகைமை செயித்தருளும் இசைப் பிரிய திருத்த மாதவர் புகழ் குருநாதா... திருப்புகழைப் பாடுபவர்களும் படிப்பவர்களுமான அடியார்களுடைய வறுமையையும் பகையையும் தொலைத்து வெற்றியருளும் இசைப் பிரியனே!  திருத்தமான மாதவர்கள் புகழ்கின்ற குருநாதனே!
 
சிலைக் குறவர் இலைக் குடிலில் புகைக் கள முகில் புடை செல் திருப் பழநி மலைக்குள் உறை திருக்கை வேல் அழகிய பெருமாளே.... வில்லேந்திய குறவர்களுடைய ஓலைக் குடிசையிலும்; அடர்ந்த புகையை ஒத்த கருமேகங்கள் தவழ்கின்ற பழனி மலையிலும் திருக்கையில் ஏந்திய வேலோடு வீற்றிருக்கின்ற பெருமாளே! 
 
 
சுருக்க உரை
 
கிரெளஞ்ச பர்வத்ததையும்; பெரிய உருவத்தையுடைய அரக்கர்களையும்; ஓசைபெற்று எழும் ஏழு கடல்களையும்; ஏழு உலகங்களையும் கலக்க வல்லதாகிய செழுமையான தோகையையுடைய மயிலில் வருகின்ற முருகனே!  மரகதங்கள் பதிக்கப்பட்டதும்; பலவிதமான ரத்தினங்களை வரிசையாக அமைக்கப்பெற்றதுமான ஆபரணங்களை அணிந்த மலைபோன்ற பன்னிரு தோளனே!  இயல் தமிழை விரிவாக அறிந்த வயலூரனே! திருப்புகழைப் பாடுபவர்களும் படிப்பவர்களுமான அடியார்களுடைய வறுமையையும் பகையையும் தொலைத்து வெற்றியருள்பவனே!  திருத்தமான மாதவர்கள் புகழ்கின்ற குருநாதனே!  வில்லை ஏந்துகின்ற குறவர்களுடைய ஓலைக் குடிசையிலும்; அடர்ந்த கருமேகங்கள் புகையெனத் தவழ்கின்ற பழனிமலையிலும் வீற்றிருக்கின்ற பெருமாளே! 
 
மன்மதன், தன்னுடைய கரும்புவில்லில் தொடுத்திருக்கின்ற மலர்க்கணைகளைப் போன்ற கடைக்கண் பார்வையையும் கபடச் செயல்களையும் உடைய பெண்களுடைய; சினங்கொண்ட யானையும் திடுக்கிடுமாறு செருக்குடன் பருத்திருக்கின்ற மார்பகங்களின் மீது எழும் மோகத்தால் மனத்தடுமாற்றம் அடைந்து திரியாமல்; ஒருமை உணர்ச்சியை அடைய விரும்புகின்ற எண்ணம் என் மனத்திலே எழும்படியாக உன் திருவுள்ளத்தாலே கருதி; உன்னைப் பாடுகின்ற என்னை நிகரற்ற புலவனாக்கி; ‘விளக்கம் வேண்டும்’ என்று ருத்திர மூர்த்தியே உன்னைக் கேட்டுக்கொண்ட அந்தப் பிரணவத்தின் ரகசியமான பொருளை அடியேனும் உணரும்படியாக விரைவிலேயே உபதேசித்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com