பகுதி - 662

வண்டமிழ் பயில்வோர்பின் திரிகின்றவன்
பகுதி - 662

‘வண்டமிழ் பயில்வோர்பின் திரிகின்றவன்’ என்று திருமாலைப் பாடுகின்ற இத் திருப்புகழ் திருப்பரங்குன்றத்துக்கு உரியது. 


கணிகண்ணன் போகின்றான்; காமருபூங் கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டா – துணிவுடைய
செந்நாப் புலவன்யான் செல்கின்றேன்; நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்’

என்றும்,

கணிகண்ணன் போக்கொழிந்தான்; காமருபூங் கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டும் – துணிவுடைய
செந்நாப் புலவன் செலவொழிந்தேன்; நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக் கொள்

என்றும் திருமழிசை ஆழ்வார் பாட, அவ்விதமே செய்து ‘சொன்னவண்ணம் செய்த பெருமாளாக’த் திருமால் விளங்குவதை இந்த அடைமொழி குறிக்கின்றது.

அடிக்கு ஒற்றொழித்து 37 எழுத்துகளைக் கொண்ட பாடல்; ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும் கணக்கில் சேராத மெல்லொற்று ஒன்று நான்காவது எழுத்தாகவும்; இரண்டு, மூன்று, ஐந்து, ஆறு, எட்டு, ஒன்பது ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் கணக்கில் சேராத மெல்லொற்று ஒன்று இரண்டாவது எழுத்தாகவும் அமைந்திருக்கின்றன.

தனதந்தன தந்தன தந்தன
                தனதந்தன தந்தன தந்தன
                தனதந்தன தந்தன தந்தன தனதான

சருவும்படி வந்தனன் இங்கித
               மதனின்றிட அம்புலி யுஞ்சுடு
               தழல்கொண்டிட மங்கையர் கண்களின்வ சமாகிச்

சயிலங்கொளு மன்றல்பொ ருந்திய
               பொழிலின்பயில் தென்றலு மொன்றிய
               தடவஞ்சுனை துன்றியெ ழுந்திட திறமாவே

இரவும்பக லந்தியு நின்றிடு
               குயில்வந்திசை தெந்தன வென்றிட
               இருகண்கள்து யின்றிட லின்றியும்அ யர்வாகி

 இவணெஞ்சுப தன்பத னென்றிட
              மயல்கொண்டுவ ருந்திய வஞ்சகன்
              இனியுன்றன்ம லர்ந்தில கும்பதம்அ டைவேனோ

திருவொன்றிவி ளங்கிய அண்டர்கள்
              மனையின்தயி ருண்டவ னெண்டிசை
              திகழும்புகழ் கொண்டவன் வண்டமிழ்ப யில்வோர்பின்

திரிகின்றவன் மஞ்சுநி றம்புனை
              பவன்மிஞ்சுதி றங்கொள வென்றடல்
              செயதுங்கமு குந்தன் மகிழ்ந்தருள்ம ருகோனே

மருவுங்கடல் துந்திமி யுங்குட
              முழவங்கள்கு மின்குமி னென்றிட
              வளமொன்றிய செந்திலில் வந்தருள்மு ருகோனே

மதியுங்கதி ரும்புய லுந்தின
             மருகும்படி அண்டமி லங்கிட
             வளர்கின்றப ரங்கிரி வந்தருள்பெ ருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com