பகுதி - 667

வேடர்குல மானான வள்ளியம்மை
பகுதி - 667

பதச் சேதம்

சொற் பொருள்

பேதக விரோத தோதக விநோத பேதையர் குலாவை கண்டு மாலின்

 

பேதக: மன மாறுபாடு; விரோத: பகைமை; தோதக: வஞ்சகம்; விநோத: விசித்திரமான; பேதையர்: பெண்கள்; குலாவை: குலாவுவதை, உறவாடுவதை; மாலின்: மயங்கி;

பேதைமை உறா மற்று ஏதம் அகலாமல் பேத உடல் பேணி தென் படாதே

 

பேதைமை: அறிவின்மை; உறா: உற்று, அடைந்து; ஏதம்: குற்றம்; பேத உடல்: மாறுபாட்டை அடையும் உடல்; பேணி: போற்றி; தென்படாதே: உலகோர் பார்க்க (திரியாமல்); 

சாதக(ம்) விகார சாதல் அவை போக தாழ்வில் உயிராக சிந்தையால் உன்

 

சாதகம்: ஜாதகம், பிறப்பு; விகார(ம்): மாற்றம் (பாலன், குமரன், கிழவன் என்று மாற்றம் பெறுதல்); தாழ்வில் உயிராக: குறைவற்ற உயிராக;

தாரை வடிவேலை சேவல் தனை ஏனல் சாரல் மற மானை சிந்தியேனோ

 

தாரை: கூரான; வடிவேல்: வடிக்கப்பட்ட வேல்; ஏனல்: தினைப்புனம்; மறமான்: வள்ளி;

போதக மயூர போதக அகடு ஆ மன் போது அருணை வீதி கந்த வேளே

 

போதக(ம்): யானை; மயூர: மயில்; போதக: போது அக—(போது-மலர்) மலராசனம்; அகடு: நடுவில்; அருணை: திருவாண்ணாமலை;

போதக கலாப கோதை முது வானில் போன சிறை மீள சென்ற வேலா

 

போதக: யானை—ஐராவதம்; கலாப கோதை: மயிலும் கொடியும் போன்ற தேவானை;

பாதக பதாதி சூரன் முதல் வீழ பார் உலகு வாழ கண்ட கோவே

 

பதாதி: காலாட் படை;

பாத மலர் மீதில் போத மலர் தூவி பாடும் அவர் தம்பிரானே.

 

போத மலர்: ஞானமாகிய மலர்;

பேதகவி ரோதத் தோதக விநோதப் பேதையர் குலாவைக் கண்டு மாலின்... மனவேறுபாட்டையும்; பகைமையையும்; வஞ்சனையையும் கொண்ட விசித்திரமான பெண்கள் குலவிப் பேசுவதைப் பார்த்து மனமயக்கம் கொண்டும்;
 
பேதைமை உறா மற்று ஏதம் அகலாமல் பேதவுடல் பேணித் தென்படாதே... அறிவீனத்தை அடைந்தும்; அதனால் ஏற்படும் குற்றம் என்னை விட்டு நீங்காமலும்; (வயதாலும் நோயாலும்) மாதல்களை அடைகின்ற இந்த உடலைப் போற்றித் திரிந்துகொண்டிருக்காமல்;
 
சாதக விகாரச் சாதல் அவை போக தாழ்வில் உயி ராகச் சிந்தையால் உன்... பிறவியும்; (குழந்தை, சிறுவன், இளைஞன், முதியவன் என்றெல்லாம்) மாறுதலும்; இறப்பும் என்னை நீங்கவும்; நான் குறைவற்ற உயிராக ஆகவும்; மனத்தால் உன்னுடைய,
 
தாரை வடிவேலைச் சேவல்தனை ஏனல் சாரல் மறமானைச் சிந்தியேனோ... கூர்மை நிறைந்த வடிவேலையும்; சேவற் கொடியையம்; தினைப்புனத்தின் சாரலிலே இருந்த வேடர்குல மானான வள்ளியையும் சிந்தித்திருக்க மாட்டேனா.  (சிந்தித்திருக்குமாறு அருள்புரிய வேண்டும்.)
 
போதக மயூரப் போது அக அகடாமன் போது அருணை வீதிக் கந்தவேளே... யானை (வாகனத்திலும்) மயில் (வாகனத்திலும்) மலராசனங்களை இட்டு மத்திய ஸ்தானத்தில் எழுந்தருளுகின்றவனும்; அண்ணாமலையின் வீதியில் இருப்பவனுமான கந்தவேளே!
 
போதக கலாபக் கோதை முது வானில் போனசிறை மீளச் சென்றவேலா... ஐராவதமாகிய யானை வளர்த்த மயிலைப் போன்ற தேவானை (வளர்ந்த பதியைச் சேர்ந்த) அமரர்கள் அடைபட்டிருந்த (சூரனுடைய) சிறையினின்றும் அவர்களை மீட்பதற்காகப் போருக்கு எழுந்த வேலனே!
 
பாதக பதாதிச் சூரன்முதல் வீழ பாருலகு வாழக் கண்டகோவே... பெரும் பாதகனும்; காலாட்படைகளை உடையவனுமான சூரன் முதலான அரக்கர்கள் அழியவும்; மண்ணுலகும் விண்ணுலகும் வாழவும் வழிசெய்த கோவே!
 
பாதமலர் மீதிற் போதமலர் தூவி பாடுமவர் தோழத் தம்பிரானே.... உனது திருவடி மலர்களின் மீது ஞானமாகிய மலர்களைத் தூவிப் பாடுகின்ற அடியார்களுடைய தோழனான தம்பிரானே!
 
சுருக்க உரை:
 
யானை வாகனத்திலும் மயில் வாகனத்திலும் மலராசனங்களை இட்டு அவற்றின் மத்தியில் எழுந்தருளியிருக்கின்றவனே!  திருவண்ணாமலையின் வீதியிலே இருக்கின்ற கந்தவேளே!  ஐராவதம் வளர்த்தவராகிய தேவானை வளர்ந்த அமரலோகத்தவர்கள் சூரனுடைய சிறையில் அடைபட, அவர்களை விடுவிப்பதற்காகப் போர்புரிந்த வேலனே!  பாதகனும்; காலாட்படைகளை உடையவனுமான சூரன் முதலான அரக்கர்கள் அழியவும்; மண்ணுலகும் விண்ணுலகும் வாழவும் வழிசெய்த கோவே!  திருவடி மலர்களின்மீது ஞானமாகிய மலரைத் தூவி வழிபட்டுப் பாடுகின்ற அன்பர்களுடைய தோழனான தம்பிரானே!
 
மனவேறுபாட்டையும்; பகைமையையும்; வஞ்சனையையும் உடைய விசித்திரமான பெண்கள் மனமகிழ்ந்து உறவாடுவதைக் கண்டு மோகத்தால் அறியாமையை அடைந்து; அதனால் ஏற்படும் குற்றம் என்னைவிட்டு நீங்காமல்; வயதாலும் நோய்களாலும் மாறுதல்களை அடையக்கூடிய இவ்வுடலைப் போற்றியவண்ணமாக உலகில் அலைந்து திரியாமல்,
 
பிறப்பு, வளர்சியால் ஏற்படும் மாறுபாடு, இறப்பு ஆகியவை தொலையவும்; நான் குறைவற்ற உயிராக விளங்கவும் மனத்தால் உன்னுடைய கூர்மையான வடிவேலையும் கோழியையும் தினைப்புனத்தில் வளர்ந்த வேடர்குல மானான வள்ளியம்மையையும் தியானித்திருக்கும்படியாக அருளவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com