பகுதி - 671

மிகுந்த அன்புகொண்டு உன்னிடத்திலே வந்து

பதச் சேதம்

சொற் பொருள்

அன்பாக வந்து உன் தாள் பணிந்து ஐம்பூதம் ஒன்ற நினையாமல்

 

ஐம்பூதம்: பஞ்ச பூதங்கள்—என்றாலும் ஐம்புலன்கள் என்பது பொருந்தும்;

அன்பால் மிகுந்து நஞ்சு ஆரு கண்கள் அம்போருகங்கள் முலை தானும்

 

நஞ்சாரு கண்கள்: விஷம் நிறைந்த கண்கள்; அம்போருகங்கள்: தாமரை மொட்டுக(ளைப் போன்ற);

கொந்தே மிகுந்து வண்டாடி நின்று கொண்டாடுகின்ற குழலாரை

 

கொந்து: கொத்து; குழலார்: குழலை உடையவர்கள், பெண்கள்;

கொண்டே நினைந்து மன் பேது மண்டி குன்றா மலைந்து அலைவேனோ

 

மன்: மிகவும்; பேது மண்டி: அறியாமை நிறைந்து; குன்றா: (மனம்) குன்றிப் போய்; மலைந்து;

மன்று ஆடி தந்த மைந்தா மிகுந்த வம்பு ஆர் கடம்பை அணிவோனே

 

மன்றாடி: சபையில் நடனம் புரிபவர்—சிவன்; வம்பு ஆர்: நறுமணம் நிறைந்த;

வந்தே பணிந்து நின்றார் பவங்கள் வம்பே தொலைந்த வடிவேலா

 

பவங்கள் வம்பே: பிறப்பு என்னும் துன்பத்தை; தொலைந்த: தொலைத்த (வலித்தல் விகாரம்);

சென்றே இடங்கள் கந்தா எனும்பொ செம் சேவல் கொண்டு வரவேணும்

 

எனும்பொ: எனும்போது;

செம் சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த செங்கோடு அமர்ந்த பெருமாளே.

 

செஞ்சாலி: செந்நெல்; கஞ்சம்: தாமரை;

அன்பாக வந்து உன்தாள் பணிந்து ஐம்பூதம் ஒன்ற நினையாமல்... அன்புகொண்டு வந்து உன் பாதங்களை வணங்கி; ஐம்புலன்களும் ஒன்றி உன்னை நினைக்காமல்;
 
அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்கள் அம்போருகங்கள் முலைதானும்... விஷம் நிறைந்த கண்களையும்; தாமரை மொட்டைப் போன்ற மார்பகங்களையும் கொண்ட பெண்களிடத்தில் அன்பு மிகுந்து;
 
கொந்தே மிகுந்து வண்டாடி நின்று கொண்டாடுகின்ற குழலாரைக்... பூங்கொத்துகள் நிறைந்ததும்; வண்டுகள் மொய்த்து விளையாடிக் கொண்டாடுவதுமான கூந்தலை உடைய பெண்களை;
 
கொண்டே நினைந்து மன்பேது மண்டி  குன்றா மலைந்து அலைவேனோ... மனம் பொருந்த நினைத்து; மிக்க அறியாமை பெருகி; மனம்குன்றி; உள்ளம் ஒருமைப்படாமல் அலைந்துகொண்டிருப்பேனோ?
 
மன்றாடி தந்த மைந்தா மிகுந்த வம்பார் கடம்பை அணிவோனே... மன்றிலே ஆடுகின்ற சிவபெருமான் அளித்த மகனே!  மிகுந்த நறுமணம் கமழ்வதான கடப்ப மாலையை அணிபவனே!
 
வந்தே பணிந்து நின்றார் பவங்கள் வம்பே தொலைந்த வடிவேலா... வந்து பணிந்து நிற்கின்ற அன்பர்களுடைய பிறவித் துன்பத்தை முழுவதுமாகக் களைகின்ற கூரிய வேலனே!
 
சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ செஞ்சேவல் கொண்டு வரவேணும்... நான் எங்கே சென்று ‘கந்தா’ என்று அழைத்தாலும் சிவந்த சேவற்கொடியை ஏந்தியபடி என் முன்னே வரவேண்டும்.
 
செஞ்சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த செங்கோடு அமர்ந்த பெருமாளே.... செந்நெல்லும் தாமரையும் ஒன்றாக வளர்வதான திருச்செங்கோட்டிலே வீற்றிருக்கின்ற பெருமாளே!
 
சுருக்க உரை:
 
மன்றிலே நின்றாடுபவரான சிவனார் அளித்த பாலனே!  மணம் மிகுந்த கடப்ப மலர்மாலையை அணிபவனே! வந்து பணிகின்ற அடியார்களுடைய பிறவித் துன்பத்தைத் தொலைக்கின்ற வடிவேலனே! நான் எந்த இடத்துக்குச் சென்று ‘கந்தா’ என்று அழைத்தாலும் உன்னுடைய சிவந்த சேவற்கொடியை ஏந்தியபடி என் முன்னே வரவேண்டும்.  செந்நெல்லும் தாமரையும் ஒன்றாக வளர்கின்ற திருச்செங்கோட்டில் வீற்றிருக்கின்ற பெருமாளே!
 
மிகுந்த அன்புகொண்டு உன்னிடத்திலே வந்து; உன் தாளை பணிந்து; ஐம்புலன்களும் ஒன்றி உன்னை நினைக்காமல்;  நஞ்சு நிறைந்த விழிகளையும்; தாமரை மொட்டைப் போன்ற மார்பகங்களையும்; பூங்கொத்துகள் நிறைந்தும், வண்டுகள் மொய்ப்பதுமான கூந்தலையும் உடைய பெண்களிடத்திலே அன்பு மிகுந்து; அவர்களையே மனத்தில் நினைத்தபடியாக மிகுந்த அறியாமையை அடைந்து; மனம் குன்றிப்போய் உள்ளம் ஒருவழிப்படாமல் அலைந்து திரிவேனோ!  (அவ்வாறு திரியாமல் ஆண்டுகொள்ள வேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com