பகுதி - 675

இல்லறம் என்னும் அந்த மாயக் கடலிலே மூழ்கிக்கிடந்து
பகுதி - 675

பதச் சேதம்

சொற் பொருள்

உடுக்க துகில் வேணும் நீள் பசி அவிக்க கன பானம் வேணும் நல் ஒளிக்கு புனல் ஆடை வேணும் மெய்யுறு நோயை

 

துகில்: துணி, உடை; அவிக்க: ஆற்ற;

ஒழிக்க பரிகாரம் வேணும் உள் இருக்க சிறு நாரி வேணும் ஓர் படுக்க தனி வீடு வேணும் இவ் வகை யாவும்

 

பரிகாரம்: (மெய்யுறு நோயை ஒழிக்கப் பரிகாரம் என்பதால்) மருந்து; உள் இருக்க: வீட்டினுள் இருக்க; சிறு நாரி: இளம்பெண்;

கிடைத்து க்ருஹவாசியாகி அ(ம்) மயக்கக் கடல் ஆடி நீடிய கிளைக்கு பரிபாலனாய் உயிர் அவமே போம்

 

நீடிய: பெரிய; கிளைக்கு: சுற்றத்தாருக்கு; பரிபாலனாய்: காப்பாற்றுபவனாகி;

க்ருபை சித்தமும் ஞான போதமும் அழைத்து தர வேணும் ஊழ் பவ கிரிக்குள் சுழல்வேனை ஆளுவது ஒரு நாளே

 

பவ கிரி: பிறவியாகிய மலை;

குடக்கு  சில தூதர் தேடுக வடக்கு சில தூதர் நாடுக குணக்கு சில தூதர் தேடுக என மேவி

 

குடக்கு: மேற்கில்; குணக்கு: கிழக்கு;

குறிப்பில் குறி காணும் மாருதி இனி தெற்கு ஒரு தூது போவது

குறிப்பில் குறி போன போதிலும் வரலாமோ

 

 

அடி குத்திரகாரர் ஆகிய அரக்கர்க்கு இளையாத தீரனும் மலைக்கு அப்புறம் மேவி மாதுறு வனமே சென்று

 

அடி: அடியோடு; குத்திரகாரர்: வஞ்சகர்; மாதுறு வனம் (மாது உறு வனம்): மாதான சீதை இருந்த வனம்;

அருள் பொன் திரு ஆழி மோதிரம் அளித்து உற்றவர் மேல் மனோகரம் அளித்து கதிர் காமம் மேவிய பெருமாளே.

 

மனோகரம் அளித்து: அனுக்கிரகம் செய்து;

உடுக்கத் துகில் வேணும் நீள்பசியவிக்கக் கனபானம் வேணும் நல்ஒளிக்குப் புனலாடை வேணும்... உடுத்துக்கொள்ள உடைகள் வேண்டும்; பெரும்பசியைத் தீர்க்க மிகுதியான (உணவும்) பான வகைகளும் வேண்டும்;
 
மெய்யுறு நோயை ஒழிக்கப் பரிகாரம் வேணும் உள்இருக்கச் சிறுநாரி வேணும் படுக்கத் தனிவீடு வேணும்... உடலுக்கு ஏற்படும் நோயைத் தீர்க்க உரிய மருந்துகள் தேவை; வீட்டுக்குள் இளம் பெண்ணொருத்தி மனைவியாக இருக்க வேண்டும்; படுத்துக்காள்ள தனியாக ஒரு வீடும் வேண்டும்;
 
இவ் வகையாவுங் கிடைத்து க்ருஹவாசியாகி அம்மயக்க கடல் ஆடி நீடிய கிளைக்குப் பரிபாலனாய் உயிர் அவமேபோம்... இப்படிப்பட்ட தேவைகளெல்லாம் கிடைக்கப்பெற்றால் குடும்பஸ்தனாக ஆவேன்; அந்த மயக்கமாகிய கடலிலே மூழ்கி; சுற்றத்தார்கள் அனைவரையும் காப்பாற்றுகின்ற வேலையைச் செய்து இதிலேயே என்னுயிர் வீணாகக் கழிந்துபோகும்.
 
க்ருபைச்சித்தமு ஞான போதமும் அழைத்துத் தரவேணும்... உன்னுடைய கருணை உள்ளத்தையும் ஞானநிலையில் நிற்கின்ற அறிவையும் நீ என்னை அழைப்பித்துத் தரவேண்டும்.
 
ஊழ்பவ கிரிக்குட் சுழல்வேனை ஆளுவது ஒருநாளே... ஊழ், பிறப்பு என்ற மலைகளுக்கிடையே சுழன்றுகொண்டிருப்பவனாகிய என்னை ஆட்கொள்ளும் சமயம் ஒன்று இருக்கிறதா? (என்னை நீ உடனே ஆட்கொண்டருள வேண்டும்.)
 
குடக்குச் சிலதூதர் தேடுக வடக்குச் சிலதூதர் நாடுக குணக்குச் சிலதூதர் தேடுகவென மேவி... மேற்கிலே சில தூதர்கள் தேடட்டும்*; வடக்கிலே சில தூதர்கள் தேடட்டும்; கிழக்கிலே சில தூதர்கள் தேடட்டும் என்று அனுப்பிவைத்து, (சீதையைத் தேடப் போனவர்களில் மேற்கே தேடியவர்கள் சுஷேணன் தலைமையிலும்; வடக்கே தேடியவர்கள் சதவலி தலைமையிலும்; கிழக்கே தேடியவர்கள் வினதன் தலைமையிலும் தேடப் போனார்கள்.  தெற்கே தேடச் சென்றவர்களில் அனுமார், ஜாம்பவன், நீலன் முதலானவர்கள் அங்கதன் தலைமையிலே தேடினார்கள்.)
 
குறிப்பிற் குறிகாணு மாருதி இனித் தெற்கொரு தூது போவது குறிப்பிற் குறிபோன போதிலும் வரலாமோ... (முகம் முதலான) குறிப்புகளின் மூலமாக* உள்ளக் குறிப்பை அறிய வல்லவரான மாருதி தெற்கே தூது போகும்போது, மனத்தில் குறித்தது கிடைக்காமல் போனாலும், வீணே திரும்பி வரலாமோ?
 
(இது, ‘குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல்’ என்ற 703வது குறளைக் குறிக்கின்றது.  நினைத்த காரியத்தைத் தவறவிடமாட்டாய்; அப்படியே ஒருவேளை தவறினாலும் சும்மாவிட்டு விட்டு வரமாட்டாய்’ என்று அனுமனைப் பார்த்து சுக்ரீவன் சொல்வதாகக் கருத்து.)
 
அடிக் குத்திரகாரராகிய அரக்கர்க்கு இளையாத தீரனும் அலைக்கு அப்புறமேவி மாதுறு வனமேசென்று... (அதன்படியே), முற்றிலும் வஞ்சகர்களான அரக்கர்களுக்குச் சற்றும் குறைவற்ற (பலசாலியான) வீரனாகிய ஆஞ்சநேயனும் அலைகடலைத் தாண்டி, சீதை இருக்கின்ற வனத்துக்குச் சென்று,
 
அருட்பொற் றிருவாழி மோதிரமளித்து உற்றவர்மேல் மனோகரம் அளித்து கதிர்காம மேவிய பெருமாளே.... ராமனுடைய கணையாழி மோதிரத்தை அன்னையிடம் கொடுத்துத் திரும்பிய அனுமனை அனுக்கிரகித்துக்* கதிர்காமத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!
 
(* கதிர்காமத் தலபுராணத்தின்படி, இலங்கையில் அன்னையைக் கண்டு, இலங்கைக்குத் தீவைத்த அனுமன் கதிர்காமத்திலுள்ள மாணிக்க கங்கை என்னும் ஆற்றில் நீராடி, முருகனை வழிபட்டு, முருகனின் அருளைப் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.  வால்மீகி, கம்ப ராமாயணங்களில் இந்தக் குறிப்பு இல்லை.)
 
சுருக்க உரை:
 
‘மேற்கிலே சில தூதர்களும்; வடக்கிலே சில தூதர்களும்; கிழக்கிலே சில தூதர்களும் தேடுங்கள்’ என்று ஆணையிட்ட சுக்ரீவன், அங்கதன் தலைமையில் அனுமன் முதலானோரைத் தெற்கு திசையில் தேடுமாறு அனுப்பும்போது ‘முகம் முதலானவற்றின் குறிப்பாலேயே உள்ளக் குறிப்பை அறியக்கூடிய மாருதி தேடச் செல்கின்ற தெற்குத் திசையில், நாம் கருதியது நிச்சயம் கைகூடும்; அப்படியே ஒருவேளை தவறிப் போனாலும் மாருதி சும்மா திரும்பிவிடமாட்டான்’ என்பதை அறிவேன் என்று சொல்ல; அதன்படியே கடலைத் தாவிய மாருதி சீதை இருந்த அசோகவனத்துக்குச் சென்று, இராமபிரானுடைய கணையாழியைக் காட்டி, இலங்கைக்குத் தீ வைத்து, கதிர்காமத்தில் ஓடும் மாணிக்க கங்கை என்னும் ஆற்றில் மூழ்கி உன்னை வழிபட்டபோது அவருக்கு அனுக்கிரகித்தவனும்; கதிர்காமத்தில் வீற்றிருப்பவனுமான பெருமாளே!
 
உடுத்திக்கொள்ள உடை வேண்டும்; பெரும்பசியைத் தீர்க்க நல்ல உணவும் பானங்களும் வேண்டும்;  தேகத்தில் ஒளியெழுமாறு குளிப்பதற்கு நீரும் உயர்ந்த ஆடையும் வேண்டும்; நோய்களை ஒழிப்பதற்கான மருந்துகள் வேண்டும்; வீட்டிலே ஓர் இளம்பெண் மனைவியாக இருக்க வேண்டும்; படுத்துக்கொள்ள ஒரு வீடு வேண்டும் என்று தேடி இத்தனைச் சௌகரியங்களும் கிடைத்ததும் நான் குடும்பஸ்தனாகி; இல்லறம் என்னும் அந்த மாயக் கடலிலே மூழ்கிக்கிடந்து; சுற்றத்தார்களைத் தாங்கிநிற்கும் செயல்களில் ஈடுபட்டால், என் வாழ்நாள் இப்படியே வீணாகக் கழிந்துவிடும்.  ஆகவே இறைவா, எனக்கு நீ உன்னுடைய கருணை நிறைந்த உள்ளத்தையும் ஞானநிலையிலே நிற்கின்ற அறிவையும் என்னைக் கூப்பிட்டுக் கொடுத்தருள வேண்டும்.  ஊழ்வினை, பிறப்பு-இறப்பு என்ற மலைகளுக்கிடையே சுழன்று அலைந்துகொண்டிருக்கின்ற என்னை நீ உடனடியாக ஆண்டருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com