பகுதி - 647

வீடு பேற்றை அளிப்பதுமான
பகுதி - 647

பதச் சேதம்

சொற் பொருள்

கலை கொடு பவுத்தர் காம கருமிகள் துருக்கர் மாய கபிலர் பகர் அகணாதர் உலகாயர்

 

கலைகொடு: (கற்ற) கலையைக் கொண்டு; காம கருமிகள்: (சாத்திரங்கள் விதித்த) கர்மங்களிலே பற்று வைத்தவர்கள்; மாய: மாயா வாதத்தினர்; அ: அந்த; கணாதர்: கணாதன் என்னும் முனிவரால் ஸ்தாபிக்கப்பட்ட வைசேடிக மதத்தினர்; உலகாயர்: உலகாயதர்கள்;

கலகம் இடு தர்க்கர் வாம பயிரவர் விருத்தரோடு கலகல என மிக்க நூல்கள் அதனாலே

 

வாம: வாம மார்க்கத்தவர்; விருத்தர்: மாறுபட்ட கொள்கையை உடையவர்; கலகலென: இரைச்சலோடு;

சிலுகி எதிர் குத்தி வாது செயவும் ஒருவர்க்கு(ம்) நீதி தெரிவரிய சித்தியான உபதேசம்

 

சிலுகி: சண்டையிட்டு; எதிர் குத்தி: எதிர்த்துத் தாக்கி; நீதி: உண்மை; சித்தியான: சித்தியைத் (வீடு பேற்றைத்) தருவதான;

தெரிதர விளக்கி ஞான தரிசநம் அளித்து வீறு திருவடி எனக்கு நேர்வது ஒரு நாளே

 

தெரிதர: அறியும்படி; வீறு: மேம்பட்ட;

கொலை உற எதிர்த்த கோர இப முக அரக்கனோடு குரகத முகத்தர் சீய முக வீரர்

 

இப முக: யானை முக; குரகத முகத்தர்: குதிரை முகத்தவர்; சீய முக வீரர்: சிங்க முகத்தை உடைய வீரர்கள்;

குறை உடல் எடுத்து வீசி அலகையொடு பத்ர காளி குலவியிட வெற்றி வேலை விடுவோனே

 

அலகை: பேய்; குலவியிட: மகிழ்ந்து களிக்க;

பல மிகு புனத்து உலாவு குற வநிதை சித்ர பார பரிமள தனத்தில் மேவு மணிமார்பா

 

பலமிகு: பலன் மிகுந்த;

படை பொருது மிக்க யூகம் மழை முகிலை ஒட்டி ஏறு பழநி மலை உற்ற தேவர் பெருமாளே.

 

யூகம்: கருங்குரங்கு; மழை முகிலை ஒட்டி: மழை மேகத்தின் காரணத்தால் (அஞ்சி);

கலை கொடு பவுத்தர் காம கருமிகள் துருக்கர் மாய கபிலர் பகர் அக்கணாதர் உலகாயர் ....கற்றுக்கொண்ட கலைகளை (அடிப்படையாகக்) கொண்ட பௌத்தர்களும்; (சாத்திரங்கள் விதித்த) கிரியைகளையே விரும்புபவர்களும்; முகமதியர்களும்; மாயாவாதிகளும்; கபில முனிவரைப் பின்பற்றும் சாங்கியர்களும்; (கணாதன் நிறுவிய) வைசேடிக* மதத்தவர்களும்;

(“தாம் பிருகற்பதி சினனே கபிலன்
அக்கபாதன் கணாதன் சைமினி” என்று மணிமேகலை {27-81, 82} குறிக்கிறது.)

கலகம் இடு தர்க்கர் வாம பயிரவர் விருத்தரோடு கலகல என மிக்க நூல்கள் அதனாலே... தர்க்கங்களைச் செய்து கலகமிடுகின்ற வாம மார்க்கத்தவரும்; பைரவர்களும்; தம்மிலிருந்து மாறுபட்ட கொள்கைகளை உடையவர்களும் பல நூல்களை மேற்கோள் காட்டி ‘கலகல’வெனும் ஓசையோடு;

சிலுகி எதிர் குத்தி வாது செயவும் ஒருவர்க்கு(ம்) நீதி தெரிவரிய சித்தியான உபதேசம்... சண்டையை வளர்த்தும்; எதிர்த்துத் தாக்கியும்; வாதிட்ட போதிலும் யாருக்குமே ‘இதுதான் உண்மை’ என்று அறிந்துகொள்வதற்கு அரிதானதும்; வீடு பேற்றை அளிப்பதுமான உபதேசத்தை;

தெரிதர விளக்கி ஞான தரிசநம் அளித்து வீறு திருவடி எனக்கு நேர்வது ஒரு நாளே... அடியேன் அறிந்துகொள்ளம்படியாக விளக்கி; ஞான தரிசனத்தைத் தந்து; மேலான உன் திருவடியை எனக்குத் தருவாயோ?  (உடனே தந்தருள வேண்டும்.)

கொலை உற எதிர்த்த கோர இப முக அரக்கனோடு குரகத முகத்தர் சீய முக வீரர்... கொலைகளைச் செய்தபடி எதிர்த்துவந்த கோரமான யானை முகத்தையுடைய தாரகாசுரன்; குதிரை முகத்தையும் சிங்க முகத்தையும் உடைய பல அரக்க வீரர்கள் ஆகியோருடைய,

குறை உடல் எடுத்து வீசி  அலகையொடு பத்ர காளி குலவியிட வெற்றி வேலை விடுவோனே…குறைபட்டுச் சிதைந்த உடலை எடுத்து வீசிப் பேய்களும் பத்ரகாளியும் மகிழ்ந்து குலவையிடும்படியாக வெற்றிவேலை வீசியவனே! 

பல மிகு புனத்து உலாவு குற வநிதை சித்ர பார பரிமள தனத்தில் மேவு மணிமார்பா... நல்ல பலனைத் தருகின்ற தினைப்புனத்தில் உலாவும் குறமகளாகியி வள்ளியின் அழகானதும் பாரமானதுமான தனத்தைத் தழுவிய அழகிய மார்பை உடையவனே!

படை பொருது மிக்க யூகம் மழை முகிலை ஒட்டி ஏறு பழநி மலை உற்ற தேவர் பெருமாளே....ஒன்றையொன்று சண்டையிடுகின்ற கருங்குரங்குகள் மழைபொழிகின்ற கருமுகில்களைப் பார்த்து அஞ்சி ஏறி ஒளிந்துகொள்கின்ற பழனி மலையில் வீற்றிருக்கும் தேவர் பெருமாளே!


சுருக்க உரை:

கொலைகளைச் செய்தபடி எதிர்த்துவந்த, கோரமான முகத்தையுடைய தாரகாசுரன்; குதிரை முகத்தையும் சிங்க முகத்தையும் கொண்ட பல அரக்க வீரர்கள் ஆகியோருடைய சிதைந்த உடல்களை அள்ளி வீசும் பேய்களும் பத்ரகாளியும் மகிழ்ச்சியால் குலவையிடும்படியாக வேலை எறிந்தவனே!  வளமான தினைப்புனத்திலே உலவுகின்ற குறப்பெண்ணான வள்ளியின் பாரமான தனத்தைத் தழுவிய அழகிய மார்பனே!  தமக்குள்ளே போரிட்டுக்கொள்கின்ற கருங்குரங்குகள், மழைபொழிகின்ற மேகங்களைப் பார்த்து அஞ்சி ஏறி ஒளிந்துகொள்வதான பழனி மலையில் வீற்றிருக்கின்ற தேவர்கள் பெருமாளே!

பௌத்தர்களும்; சாத்திரம் விதித்த கிரியைகளைப் பின்பற்றுவதையே விரும்புகின்றவர்களும்; முகமதியர்களும்; மாயாவாதிகளும்; கபில முனிவரைப் பின்பற்றுகின்ற சாங்கியரும்; வைசேடிகர்களும்; கலகத்துடன் தருக்கம் செய்பவர்களும்; வாம மார்க்கத்தைச் சேர்ந்தவர்களும்; பைரவர்களும் தாங்கள் கற்ற பல வகையான நூல்களின் துணையோடு, தம்மோடு மாறுபட்ட கொள்கையை உடையவர்களோடு ஓசை எழும்படியாக வாதித்தாலும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டாலும் ‘இதுதான் உண்மை’ என்று அறிய முடியாததும் வீடு பேற்றைத் தருவதுமான உபதேசத்தை அடியேன் அறியும்படியாக விளக்கி, ஞான தரிசனத்தைக் கொடுத்து உனது திருவடிகளை இப்போதே எனக்குத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com