பகுதி - 649

ஓங்கார ரூபத்தைக் கொண்டது
பகுதி - 649

பதச் சேதம்

சொற் பொருள்

வாதினை அடர்ந்த வேல் விழியர் தங்கள் மாயம் அது ஒழிந்து தெளியேனே

 

வாதினை: தர்க்கத்தை; அடர்ந்த: நெருங்கிய; தெளியேனே: தெளிவு பெறவில்லை;

மா மலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து மா பாதம் அணிந்து பணியேனே

 

 

ஆதியோடு அந்தம் ஆகிய நலங்கள் ஆறு முகம் என்று தெரியேனே

 

ஆதியொடு அந்தம்: தொடக்கத்திலிருந்து கடைசிவரை; நலங்கள் ஆறுமுகம்: ஆறு முகங்களின் ஆறு நலன்கள் (ஆதி சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி, பராசக்தி, ஞான சக்தி; குடிலா சக்தி என்றும் ஐசுவரியம், வீரியம், புகழ், திரு,  ஞானம், வைராக்கியம் ஆகிய ஆறு குணங்கள் என்றும் பலவிதமான விளக்கங்கள் ‘ஆறுமுகத்து’க்கு உண்டு);

ஆன தனி மந்த்ர ரூப நிலை கொண்டது ஆடும் மயில் என்பது அறியேனே

 

தனி: ஒப்பற்ற; மந்த்ர ரூப நிலை கொண்டது: பிரணவமாகிய மந்திரத்தின் உருவத்தைக் கொண்டது;

நாதமோடு விந்துவான உடல் கொண்டு நானிலம் அலைந்து திரிவேனே

 

நாதமொடு விந்து: நாதமும் விந்துவும் (சுரோணிதமும் சுக்கிலமும்) கலந்து (உருவான);

நாகம் அணிகின்ற நாத நிலை கண்டு நாடி அதில் நின்று தொழுகேனே

 

நாகம்: (சூலாயுதத்தைப் போல ஓடுகின்ற) பாம்பை(ப் போன்ற பிராண வாயு—குண்டலினி); ஓடி அடைகின்ற நாத நிலை: ஆறாவது ஆதாரமான ஆக்ஞா சக்கரத்தின் நிலையில்;

சோதி உணர்கின்ற வாழ்வு சிவம் என்ற சோகம் அது தந்து எனை ஆள்வாய்

 

சோகம்: சோஹம், ஸ அஹம்—அது நானே;

சூரர் குலம் வென்று வாகையோடு சென்று சோலை மலை நின்ற பெருமாளே.

 

 

வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் மாயமது ஒழிந்து தெளியேனே... வம்புக்கு வருவதைப் போல நெருங்கியதும் வேல்போன்றதுமான கண்களை உடைய பெண்களிடத்திலே மயங்குவதை விட்டு நான் தெளிவு பெறவில்லையே.

மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து மாபதம் அணிந்து பணியேனே... சிறந்த மலர்களால் அமைந்த மாலைகளைத் தொடுத்து உன்னுடைய சிறந்த திருவடிகளில் சூட்டிப் பணியவில்லையே.

ஆதியொடு மந்த மாகிய நலங்கள் ஆறுமுக மென்று தெரியேனே... முதலும் முடிவுமாக உள்ள எல்லா நலன்களும் ஆறுமுகமே* என்பதைத் தெரிந்து கொள்ளவில்லையே. ( * மேலேயுள்ள விளக்கத்தில் காண்க)

ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்டது ஆடுமயி லென்பது அறியேனே... ஆடுகின்ற மயில், இணையற்றதான ஓங்கார ரூபத்தைக் கொண்டது என்பதை அறிந்து கொள்ளவில்லையே.

நாதமொடு விந்து வானவுடல் கொண்டு நானிலம் அலைந்து திரிவேனே... நாதமும் விந்தும் கலந்து உருவான இந்த உடலைச் சுமந்தபடி உலகெல்லாம் அலைந்து திரிகின்றேனே.

நாகம் அணிகின்ற நாதநிலை கண்டு நாடியதில் நின்று தொழுகேனே... குண்டலியாகிய பாம்பின் வடிவத்தில் ஓடுகின்ற பிராணவாயு அடைகின்ற (ஆறாவது நிலையான ஆக்ஞா சக்ரம் என்னும்) நாதநிலையை அடைந்து, அங்கேயே நின்று உன்னைத் தொழவில்லையே.

சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற சோகமது தந்து எனையாள்வாய்... ஞானமாகிய சோதியை உணர்கின்ற வாழ்வுதான் சிவம் என்ற, ‘நீயும் நானும் ஒன்றாய் இருக்கின்ற’ நிலையைத் தந்து என்னை ஆண்டுகொள்ள வேண்டும்.

சூரர்குலம் வென்று வாகையொடு சென்று சோலைமலை நின்ற பெருமாளே.... சூரனின் குலத்தை வென்று வெற்றி வாகை சூடி, பழமுதிர்ச்சோலை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே!


சுருக்க உரை:

சூரனுடைய குலத்தை வெற்றிகொண்டு வாகை சூடி பழமுதிர்ச்சோலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!  வம்புசெய்வதைப் போல அடர்த்தெழுகின்ற விழிகளைக் கொண்ட பெண்களின் மீது வைத்திருக்கும் மயக்கத்திலிருந்து நான் விடுபட்டுத் தெளிவடையவில்லையே!  சிறந்த மலர்களை எடுத்து, மாலையாகத் தொடுத்து உன் சிறந்த திருவடிகளில் அணிவித்துத் தொழவில்லையே!  ஆடுகின்ற மயிலானது (எல்லாவற்றுக்கும் மூலமான) ஓங்காரப் பிரணவத்தின் வடிவம்தான் என்பதை உணரவில்லையே!  நாதமும் விந்தும் கலந்து உருவானதான இந்த உடலைச் சுமந்தபடி நான் உலகெங்கும் சுற்றித் திரிந்து அலைகின்றேனே! குண்டலினிப் பாம்பின் வடிவமாக ஓடுகின்ற பிராணவாயுவை ஆறாவது ஆதாரமான ஆக்ஞா சக்கரத்தில் நிலைநிறுத்தி அங்கேயே நின்றபடி உன்னைத் தொழவில்லையே!  ஞானமாகிய சோதியை உணர்கின்ற வாழ்வுதான் சிவம் க்தாக ‘நீயும் நானும் வேறாக இல்லாத அத்துவித நிலையைத்’ தந்து என்னை ஆண்டுகொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com