பகுதி - 651

அழகை இழக்கச் செய்வதும்
பகுதி - 651

பதச் சேதம்

சொற் பொருள்

கமல மொட்டை கட்டு
அழித்து குமிழியை நிலை 
குலைத்து பொன்கடத்தை 
தமனிய கலசவர்க்கத்தை 
தகர்த்துகுலை அற இளநீரை

 

கமல மொட்டை: தாமரை மொட்டை; கட்டழித்து: உருக்குலைத்து; குமிழியை: நீர்க் குமிழியை; பொன் கடம்: பொன் குடம்; தமனிய: தங்க(த்தால் ஆன); கலச வர்க்கம்: பல கலசங்களை; குலையற: (இளநீரின்) குலை கெடும்படியாக; (நான்காவது அடியில் ‘திருடிகள் உறவாமோ’ என்பது வரையில் தனங்களின் வருணனை);

கறுவி வட்டை பின்துரத்தி 
பொருது அபசயம்விளைத்து செப்பு 
அடித்துகுலவிய கரி மருப்பைபுக்கு
 ஒடித்து திறல் மதன்அபிஷேகம்

 

கறுவி: சினந்து; வட்டை: சொக்கட்டான் காயை; பின் துரத்தி: ஆட்டத்திலே சொக்கட்டான் காயைத் துரத்தி; பொருது: போர் தொடுத்து; அபசயம் விளைத்து: தோல்வியடையச் செய்து; செப்பு அடித்துக் குலவிய: செப்புப் பூணை அடித்துப் பொருத்தியிருப்பதான; கரி மருப்பை: யானைத் தந்தத்தை; மதன் அபிஷேகம்: மன்மதனுடைய கிரீடத்தை;

அமலர் நெற்றி கண்தழற்குள் 
பொடி செய்து அதிக சக்ர புள் பறக்க
கொடுமையில் அடல்படைத்து 
அச்சப்படுத்திசபதமொடு 
இரு தாளம்

 

அமலர்: சிவன்; அதிக: தொலைவில், தூரத்தில்; சக்கரப் புள்: சக்ரவாகப் பறவை (மார்பகத்துக்கு உவமையாவது); அடல்: வலிமை; சபதமொடு: சப்தத்தோடு, ஓசை எழும்படியாக;

அறைதல் கற்பித்துபொருப்பை
 பரவிய சிறகுஅறுப்பித்து 
கதிர்த்துப்புடைபடும் அபிநவ சித்ரதனத்து 
திருடிகள் உறவுஆமோ

 

அறைதல் கற்பித்து: ஒன்றோடொன்று மோதும்படிச் செய்து; பொருப்பை: மலையை; (சிறகுகளை இழந்த மலை என்பது உவமை); கதிர்த்து: இறுமாந்து; புடைபடும்: புடைத்திருக்கும்; அபிநவ: புதுமையான; சித்ர: அழகான;

தமரம் மிக்கு திக்குஅதிர்க்க
பல பறை தொகுதொகுக்குத்
....................................என ஓதி

 

தமரம்: இரைச்சல், ஓசை; அதிர்க்க: அதிர்ச்சியை உண்டாக்க;

சவடு உற பக்க பழு 
ஒத்திபுகை எழ விழிகள் உள்செக்க சிவத்து 
குறளிகள் தசைகள் பட்சித்து 
களித்துகழுதொடு 
கழுகு ஆட

 

சவடு: நெரிப்பு, நெரித்து; பக்கப் பழு: விலா எலும்புகளை; ஒத்தி: தாக்கி—துணைங்கைக் கூத்தாடி; குறளிகள்: மாயவித்தை செய்யும் பேய்கள்; பட்சித்து: தின்று; கழுது: பேய்;

அமலை உற்றுகொக்கரித்து
 படுகள அசுரரத்தத்தில் 
குளித்து திமிஎன அடி 
நடித்திட்டு இட்டுஇடித்து 
பொருதிடுமயிலோனே

 

அமலை: ஆரவாரம்; படுகள: போர்க்களத்தில்; திமியென: திமியென்னும் ஒலி எழும்படியாக (தகதிமி என); நடித்திட்டு: நடனமாடி;

அழகு மிக்க சித்ர 
பச்சைபுரவியில் உலவு மெய்ப்ரத்யக்ஷ நல் 
சற் குருபர அருணையில் 
சித்தித்துஎனக்கு தெளிவு 
அருள்பெருமாளே

 

சித்ர: அலங்காரமான; பச்சைப் புரவி: மயில்; ப்ரத்யக்ஷ: வெளிப்படையாக, நேரடியாக; அருணை: திருவண்ணாமலை; (திருவண்ணாமலையில் தெளிவு அருளியது அருணகிரியாரின் வாழ்விலே நடந்த செய்தி);

கமல மொட்டைக் கட்டு அழித்துக் குமிழியை நிலை குலைத்துப் பொன் குடத்தைத் தமனிய கலசவர்க்கத்தைத் தகர்த்து...  தாமரை மொட்டுகள் தம் அழகை இழக்கச் செய்வதும்; (புடைத்து எழும்) நீர்குமிழி குலைந்து போகச் செய்வதும்; தங்கக் குடத்தையும் பொன் கலசங்களையும் தங்கள் உருவத்தை இழக்க வைப்பதும்;

குலை அற இளநீரைக் கறுவி வட்டைப் பின் துரத்திப் பொருது அபசயம் விளைத்துச் செப்பு அடித்துக்குலவிய கரி மருப்பைப் புக்கு ஒடித்து... இளநீர்க் குலையின் அழகைக் குலைப்பதும்; சூதாடும் (சொக்கட்டான்) காய்களைச் சினந்து, அவற்றைத் துரத்திச் சென்று போரிட்டு (அழகாலே) தோல்வியடைச் செய்வதும்; (கொல்லர்கள்) அடித்துப் பூட்டிய செப்புப் பூண்களைக் கொண்ட யானைத் தந்தங்களை(த் தங்களுடைய எழிலாலே) உடைந்துபோகச் செய்வதும்;

திறல் மதன் அபிஷேகம் அமலர் நெற்றிக் கண் தழற்குள் பொடி செய்து அதிக சக்ரப் புள் பறக்கக்கொடுமையில் அடல் படைத்து அச்சப்படுத்தி... சக்திமிக்க மன்மதனுடைய மகுடத்தைச் சிவபெருமானுடைய நெற்றிவிழியின் நெருப்பாலே துகள்படும்படிச் செய்வதும்; (மார்பக வடிவுள்ள) சக்கரவாகப் பறவைகளை அதிக தொலைவுக்குப் பறந்துபோகும்படி தங்கள் வலிமை(மிக்க அழகால்) பயம் கொள்ளச் செய்வதும்;

சபதமொடு இரு தாளம் அறைதல் கற்பித்துப் பொருப்பைப் பரவிய சிறகு அறுப்பித்துக் கதிர்த்துப்புடைபடும் அபிநவ சித்ரத் தனத்துத் திருடிகள் உறவு ஆமோ...சப்தத்தோடு மோதிக்கொள்ளும் இரண்டு தாளங்களைப் போல உள்ளதும்; (இந்திரனால்) சிறகு அரியப்பட்ட மலைகளைப் போல இருப்பதும்; செறுக்கோடு புடைத்து எழுவதும்; புதுமையானதும்; அழகானதுமான தனங்களைக் கொண்ட திருடிகளோடு உறவுகொண்டிருப்பது தகுமோ?  (தகாது என்பதால் இந்த உறவின் வலையிலிருந்து என்னைக் காத்தருள வேண்டும்.)

தமரம் மிக்குத் திக்கு அதிர்க்கப் பல பறை தொகுதொகுக் குத்தொத் தொகுக்குத் தொகுதொகு தரிகிடத்தத்தத் தரிக்கத் தரிகிட என ஓதி... ஓசை அதிகமாக எழுவதால் திக்குகள் அதிரும்படியாக பலவகையான பறைகள் தொக்குத் தொகு… என்ற பலவிதமான தாளங்களோடு முழங்க,

சவடு உறப் பக்கப் பழு ஒத்திப் புகை எழ விழிகள் உள் செக்கச் சிவத்துக் குறளிகள் தசைகள் பட்சித்துக்களித்துக் கழுதொடு கழுகு ஆட... விலா எலும்புகள் நெரியும்படியாக தாக்கிக் கூத்தாடி; கண்ணிலே புகை எழும்படியாக(ச் சினந்து)ம்; கோபித்தும் மாயவித்தைகளைச் செய்யும் பேய்கள் மாமிசத்தைத் தின்று மகிழவும்; பேய்களும் கழுகுகளும் கூத்தாடவும்;

அமலை உற்றுக் கொக்கரித்துப் படுகள அசுர ரத்தத்தில் குளித்துத் திமி என அடி நடித்திட்டு இட்டுஇடித்துப் பொருதிடு மயிலோனே... ஆரவாரித்தும்; கொக்கரித்தும்; போர்க்களத்தில் அசுரர்களுடை ரத்தத்தில் குளித்தும்; தகதிமி என்று அடியடுத்து வைத்து நடனமாடி இடித்துப் போரிடுகின்ற மயிலை வாகனமாக உடையவனே!

அழகு மிக்கச் சித்ர பச்சைப் புரவியில் உலவு மெய் ப்ரத்யக்ஷ நல் சற் குருபர... அழகுமிக்கதும் அலங்காரமானதுமான பச்சை மயில்மீது ஏறிக்கொண்டு உலவுகின்ற; மெய்ப்பொருளே நேர் எதிரில் ப்ரத்யட்சமானதாய் விளங்குகின்ற சற்குருபரனே!

அருணையில் சித்தித்து எனக்குத் தெளிவு அருள் பெருமாளே.... நற்கதி சித்திக்கும்படியாகத் திருவண்ணாமலையில் அடியேனுக்குத் தெளிவினைக் காட்டியருளிய பெருமாளே!

சுருக்க உரை:

மாயவித்தைகளைக் செய்யும் குறளிப் பேய்கள், தொக்குத் தொகுதொகு தத்தத் தரிகிட என்ற பலவிதமான ஓசைகளை எழுப்பும் பறைகளின் ஒலியால் திக்குகளை அதிரச் செய்தும்; விலா எலும்புகள் நெரியும்படியாகத் தாக்கிக் கூத்தாடி; மாமிசத்தைத் தின்று மகிழும்படியாகவும்; பேய்களும் கழுகுகளும் கூத்தாடும்படியாகவும்; ஆரவாரித்துக் கொக்கரித்து, போர்க்களத்தில் அரக்கர்களுடைய ரத்தத்திலே குளித்தெழும்படியாகவும்; தகதிமி என்ற தாளத்தோடு பாதங்களை எடுத்துவைத்து நடனமாடி, இடித்துப் போரிடுகின்ற மயிலை வாகனமாகக் கொண்டவனே!  அழகியதும் அலங்காரமானதுமான பச்சை மயிலில் ஏறி உலவுபவனே!  நேர் எதிரிலே மெய்ப்பொருளே ப்ரத்தியட்சமாவதாக விளங்குகின்ற சற்குருபரனே!  அடியேனுக்கு நற்கதி சித்திக்கும்படியாக அண்ணாமலையில் தெளிவினைத் தந்தருளிய பெருமாளே!

தாமரை மொட்டுகளை அழகிழக்கச் செய்வதும்; நீர்க்குமிழிகளைக் குலைந்துபோகச் செய்பவையும்; தங்கக் குடத்தையும் பொற்கலசங்களையும் வடிவிழக்கச் செய்பவையும்; இளநீர்க் குலையின் அழகைக் குலைக்கின்றவையும்; சொக்கட்டான் காய்களைப் பகைத்துச் சினந்து, துரத்திச் சென்று வெல்பனவும்*; செப்புப் பூண்களைக் கொண்ட யானைத் தந்தங்களும் (தங்களுடைய அழகுக்கு நிகராகமல்) ஒடிந்துபோகச் செய்பவையும்; (மார்பகத்துக்கு உவமையாகும்) சக்கரவாகப் பறவைகளை அச்சம் கொள்ளச் செய்து வெகுதொலைவுக்குத் துரத்துவனவும்; சக்திமிக்க மன்மதனுடைய மகுடத்தை சிவபிரானுடைய நெற்றிவிழியின் நெருப்பிலே அழுத்தித் துகள்படச் செய்பவையும்; ஓசையோடு மோதிக் கொள்கின்ற இரண்டு தாளங்களைப்போல உள்ளவையும்; சிறகு அரியப்பட்ட மலைகளைப் போன்றவையும்; செறுக்கோடு புடைத்து எழுபனவையும்; புதுமையும் அழகும் கொண்டவையுமான தனங்களை உடைய திருடிகளோடு உறவு கொண்டிருப்பது தகுமோ? (தகாது என்பதால் இந்த உறவை அடியேன் வெல்லும்படியாக ஆட்கொண்டருள வேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com