பகுதி - 652

அமுதக் கடலை ருசிக்கக் கோரும்
பகுதி - 652


சிவவாக்கியமான அமுதக் கடலை ருசிக்கக் கோரும் இப்பாடல் அண்ணாமலைக்கானது.  இப்பாடலில் ‘சிவயநம’ என்னும் பஞ்சாட்சரச் சக்கரம் இடம் பெற்றுள்ளது.  ‘சிவயநம’ என்பதன் கடைசி எழுத்தை முதலெழுத்தாக்கினால் மசிவயந; மசிவயந என்பதன் கடைசி எழுத்தை முதலெழுத்தாக்கினால் நமசிவய; நமசிவய என்பதன் என்பதன் கடைசி எழுத்தை முதலெழுத்தாக்கினால் யநமவசி; யநமவசி என்பதன் கடைசி எழுத்தை முதலெழுத்தாக்கினால் மீண்டும் சிவயநம.  இது இப்படியே சக்கரமாகச் சுழல்வது.

அடிக்கு ஒற்றொழித்து 49 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  இதில் ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று ஆகிய சீர்களில் நான்கு நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களில் இரண்டு குறிலும் ஒரு நெடிலும், ஒரு வல்லொற்றும்; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்களில் மூன்று குறிலும் ஒரு வல்லொற்றும் பயில்கின்றன.


தனதன தனனாத் தனதன தனனத்
      தனதன தனனாத் தனதன தனனத்
      தனதன தனனாத் தனதன தனனத தனதான

செயசெய அருணாத் திரிசிவ யநமச்
       செயசெய அருணாத் திரிமசி வயநச்
       செயசெய அருணாத் திரிநம சிவயத் திருமூலா

செயசெய அருணாத் திரியந மசிவச்
        செயசெய அருணாத் திரிவய நமசிச்
        செயசெய அருணாத் திரிசிவ யநமஸ்த் தெனமாறி

செயசெய அருணாத் திரிதனின் விழிவைத்
        தரகர சரணாத் திரியென உருகிச்
        செயசெய குருபாக் கியமென மருவிச் சுடர்தாளைச்

சிவசிவ சரணாத் திரிசெய செயெனச்
        சரண்மிசை தொழுதேத் தியசுவை பெருகத்
        திருவடி சிவவாக் கியகட லமுதைக் குடியேனோ

செயசெய சரணாத் திரியென முநிவர்க்
        கணமிது வினைகாத் திடுமென மருவச்
        செடமுடி மலைபோற் றவுணர்க  ளவியச் சுடும்வேலா

திருமுடி யடிபார்த் திடுமென இருவர்க்
        கடிதலை தெரியாப் படிநிண அருணச்
        சிவசுடர் சிகிநாட் டவனிரு செவியிற் புகல்வோனே

செயசெய சரணாத் திரியெனு மடியெற்
        கிருவினை பொடியாக் கியசுடர் வெளியிற்
        றிருநட மிதுபார்த் திடுமென மகிழ்பொற் குருநாதா

திகழ்கிளி மொழிபாற் சுவையித ழமுதக்
       குறமகள் முலைமேற் புதுமண மருவிச்
       சிவகிரி அருணாத் திரிதல மகிழ்பொற் பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com